வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 16

உமாமகேஸ்வரஸம்வாதம்

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள், உலகின் நன்மை தீமைகள் அனைத்தும் நவகிரகங்களால் செய்யப்பட்டவை என்று நினைத்து அந்த கிரகங்களையும், நட்சத்திரங்களையும் பூசை செய்கின்றனர். இதில் எனக்கு சந்தேகம் உள்ளது. இதை தீர்க்க கடவீர்

சிவன்

நட்சத்திரங்களும் கிரங்கங்களும் தாமே காரியங்களை செய்வதில்லை. மனிதர்களின் நன்மைக்காக அவைகள் நல்லவைகளாகவும், கெட்டவைகளாகவும் தெரிகின்றன. நல்ல கர்மங்கள் சுப கிரங்கங்களாலும், கெட்ட கர்மங்கள் பாப கிரங்களாலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலினால் பாப கிரங்கங்கள் இருக்கும் போது ஜனங்கள் கெடுதலைச் செய்கிறார்கள். சுப கிரங்கங்கள் இருக்கும் போது தாமே சரியாக செய்வதாக நினைத்து நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் கிரக, நட்சத்திரங்கள் நன்மை தீமை செய்வதில்லை. எல்லா வினைகளும் அந்தந்த உயிர்களால் செய்யப்பட்டவை. கிரகங்கள் வேறு, செய்பவன் வேறு. வினைகளை செய்தவன் கிரங்கங்களால் தூண்டப்பட்டு தன் பலன்களை அனுபவிக்கிறான்.

உமை

நல்ல வினைகள், தீய வினைகள் ஆகியவற்றை செய்த மனிதர்கள் அடுத்து வரும் பிறப்புகளில் எதை முதலில் அனுபவிக்கிறார்கள்?

சிவன்

சிலர் நல்லவினைகள் முன்பு அனுபவிக்கின்றனர் என்றும், சிலர் தீய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். இது தவறு. முன் ஜென்மங்களில் எவ்வாறு இரு வினைகளும் செய்யப்பட்டனவோ அவ்வாறே அதற்குத் தக்க பலன்களை அனுபவிக்கின்றனர். இந்த பூமியில் மனிதர்கள் செல்வம், வறுமை, இன்பம், துன்பம்,அச்சமின்மை, பயம் போன்றவற்றை வரிசையாக அனுபவிக்கின்றனர். செல்வம் உடையவர்கள் துயரப்படுகிறார்கள். வறியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இது மானிட வர்கங்களுக்கு பொருந்தும். சுவர்க்க, நரகத்தில் அவ்வாறு இல்லை. இடையறாத சுகம் சுவர்கத்திலும், இடையறாத துன்பம் நரகத்திலும் இருக்கும். மிகப் பெரியதான வினைகளை முதலில் அனுபவித்து மிகச் சிறிய வினைகளை பின்னர் அனுபவிக்கின்றனர்.

உமை

உலகில் உயிர்கள் பிறந்து பிறந்து நில்லாமல் உயிர் விடுத்து இறப்பது எதனால்?

சிவன்

தேகமும் ஆத்மாவும் இணைந்திருப்பதை பிராணிகள்/உயிர்கள்  என்று சொல்லப்படுகிறது. இதில் ஆத்மா நித்தியம், உடம் அநித்தியம், இவ்வாறு தேகத்துடன் சேரும் ஆத்மா நாளடைவில் தேகத்தின் வலிமை குன்றிய பிறகு அதை விட்டு விடுகிறது. இதை உலகில் உள்ளவர்கள் மரணம் என்கிறனர். இது தேவர், அசுரர், மனிதர் ஆகிய எல்லாருக்கும் பொருந்தும். உயிரற்ற பொருள்களை எப்படி ஆகாயம் தன்னிடத்தில் கொள்வது இல்லையோ அது போலவே காலமும். இவ்வாறு உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து தேகம் அடைகின்றன.

உமை

சில உயிர்கள் இளமையிலே இறக்கின்றன. சில உயிர்கள் வயது முதிர்ந்து உயிரோடு இருக்கின்றன. இதனால் காலத்தினால் மரணம் நிச்சயமாகவில்லை. இந்த சந்தேகத்தை தெளிவியுங்கள்.

சிவன்

காலமானது தேக தளர்ச்சியை மட்டும் செய்கிறது. அது தேகம் விழ்ந்து போகச் செய்வதில்லை. கர்மம் முடிந்தால் தேகம் தானாகவே விழும். முந்தைய கர்மத்தின் படியே இருப்பதும் இறப்பதும். முன் செய்த கர்மம் இருக்கும் வரையில் மனிதன் உயிரோடு இருக்கிறான். அந்த கர்மத்தின் அடிப்படையில் தான் அவன் வெகு காலம் உயிரோடு இருப்பதும்.

 உமை

மனிதர்கள் தீர்க்க ஆயுள் உள்ளவர்களாகவும், ஆற்ப ஆயுள் உள்ளவர்களாகவும் இருப்பது எதனால்?

 தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *