ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மாண்பு
பொருள்
- மாட்சி
- சிறப்பு
- பெருமை
- அழகு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பொய்யை ஒழியாய் புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய் அறம் செய்யாய் – வெய்ய
சினமே ஒழியாய் திருவெழுத்தைந்து ஓதாய்
மனமே உனக்கென்ன மாண்பு ?
பட்டினத்தார்
கருத்து உரை
தீமை தரக்கூடிய பொய்யை ஒழியாமல் இருக்கிறாய்; புலால் உணவை விடாமல் இருக்கிறாய்; திருக்காளத்தியில் உறையும் காளத்தி நாதரை எண்ணாமல் இருக்கிறாய்; நல்வழிக்கு அழைத்துச் செல்லும் அறங்களைச் செய்யாமல் இருக்கிறாய்; தீமையானதும் கொடுமையானதுமான சினத்தை விடாமல் இருக்கிறாய்; திரு ஐந்தெழுத்தினை ஓதாமல் இருக்கிறாய்; மனமே இவை எல்லாம் இல்லாமல் உனக்கு என்ன சிறப்பு?