ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நிருத்தன்
- நடனம் புரிபவன்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.
8ம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
திரு நடனம் புரிபவனே! மலம் இல்லாதவனே! வெண்ணீற்றை உடையவனே! நெற்றிக்கண்ணை உடையவனே! தேவர் பிரானே! ஒப்பற்றவனே! முறையிட்டு அரற்றி உலகம் முழுதும் தேடியும் உன்னை நான் பார்க்கவில்லை. தீர்த்தமாகிய பொய்கையை உடைய திருப்பெருந்துறையில் வளப்பமான மலர்களை உடைய குருந்தமர நிழலில் பொருந்திய சிறப்புடைய செல்வனே! தொண்டனாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!
விளக்க உரை
அருத்தன் – மெய்ப்பொருளாய் உள்ளவன்.