அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொட்டில்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கொட்டில்

வார்த்தை :  கொட்டில்

பொருள்

  • தொழுவம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.

பட்டினத்தார்

கருத்து உரை

காஞ்சியில் உறையும் கச்சி ஏகம்பனே! மனித உடம்பாகிய இந்த துர்நாற்றமடிக்கும் உடலை, ஆபாசம் நிறைந்த தொழுவம் போன்ற உடலை, சதை பொதிந்த கந்தலான உடம்பை, தினமும் சோறு இடும் தோலாலான பையாகிய இந்த உடம்பை, என்றாவது ஒருநாள் அழிந்து போகும் நிலையில்லாத பாத்திரமாகிய காற்று சூழ்ந்த இந்த உடம்பை நான் இதுவரை நிலை என்று நம்பி அதன் மேல் அன்பு கொண்டு அதைக் காப்பதிலேயே என் காலத்தைக் கழித்துவிட்டேனே.

விளக்கம்

நான் எங்கனம் கரை ஏறுவேன் என்பது மறை பொருள்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒப்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஒப்பு

வார்த்தை :  ஒப்பு

பொருள்

  • ஏற்பு
  • சம்மதம்
  • இணை
  • ஒப்பீடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான்,
   வார்சடையான்” என்னின், அல்லான்;
ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்
   ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி;
அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன்
   அருளே கண் ஆகக் காணின் அல்லால்,
“இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன்
   இறைவன்” என்று எழுதிக் காட்ட ஒணாதே.

தேவாரம் – 6ம் திருமுறை  – திருநாவுக்கரசர் 

கருத்து உரை

இறைவன் மைபூசிய கண்களை  உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும். நீண்ட சடையினனும் ஆவான்” என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க விரும்புதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓர்  ஊருக்கே மட்டும் உரியவன் அல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

விளக்க உரை

வார்சடை – நீண்டசடை.
அல்லான் – அத்தன்மையன் அல்லன்;
அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கமை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கமை

வார்த்தை :  கமை

பொருள்

  • பொறுமை.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமயங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே

திருமூலர் – திருமந்திரம் -ஐந்தாம் தந்திரம்

கருத்து உரை

(தனது வைராக்கியத்தினால்) இமையமலைபோன்று அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதி, அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம் என்பர். ஆதிப்பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மை உடையவராகி பொறுமையுடன் அவ்வாறு ஒழுகுவாருடன் கலந்து நின்று அருள் செய்வான்.

விளக்க உரை

‘அடையக் கூடியதாக அமைந்த நிலையினை அறிந்தோம்’ என்பது ஆணவ மாயையினை குறிக்கும்.  இவ்வாறு குற்றம் இருப்பினும் பிழைபொறுக்கும் தன்மை உடையவன் ஈசன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பத்து

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பத்து

வார்த்தை : பத்து

பொருள்

  • சோற்றுப் பருக்கை
  • வயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
*வித்துக்* குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

துன்புறும் காலங்களில் தனக்கென  இருக்கும் வயல் காட்டை கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நொந்துதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நொந்துதல்

வார்த்தை :  நொந்துதல்

பொருள்

  • அழிதல்
  • தூண்டுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை *நொந்தக்கால்*
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்

நல்வழி  –  ஒளவையார் (தீவினையே வறுமைக்கு வித்து)

கருத்து உரை

வெறும் பானையை  (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.) அது போல  பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து,  அக்காலத்திலே  அறம்  செய்யாதவருக்கு ,  செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்கும் ;   இப்பொழுது கடவுளை வெறுத்தால், பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) 

விளக்கம்

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இரங்குதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இரங்குதல்

வார்த்தை :  இரங்குதல்

பொருள்

  • கூறுதல்
  • ஈடுபடுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எழுதியவா றேகாண் *இரங்குமட* நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.

ஊழின் வலிமை – மூதுரை – ஒளவையார்

கருத்து உரை

நற் பயனைப் பெறலாமென்று நினைத்துப் போய் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு,  அது எட்டிக்காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ?

விளக்கம்

செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொழுவு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கொழுவு

வார்த்தை :  கொழுவு

பொருள்

  • கோபப்படல்
  • மாட்டி வைத்தல்
  • இணைத்து வைத்தல்
  • சண்டை பிடித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப் பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கெனத் தோன்றலும், அறியா
மழலையர் கையிலுட் காவடி கொடுத்து
மலையின் மேல் ஏற்றலும், இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகண் டிரங்குமென் நெஞ்சே.

தடங்கண் சித்தர்

கருத்து உரை

அழகிய உடல் மேல் சாம்பலைப் பூசி அருவறுக்கத்தக்க வகையினில்  உடலினை ஆக்கிக் கொள்வார்கள்; மகளிருக்கு  என தலையுடன் இணைந்து இருக்கும் முடியினை நீக்கி  மொட்டையாக மழித்து அவர்களை குரங்கு போன்ற தோற்றத்தை உண்டாக்கியும்; என்ன என்று அறியாத சிறுவர்கள் கையில் காவடி கொடுத்தும்  அவர்களை மலை  எறச்செய்தும்  இவ்வாறான  செய்கைகள் உடையது தான் வழிபாட்டு முறையா? இதற்கான நேரமா  இது? இவ்வாறான மூடத்தனங்களை கண்டு அவர்களுக்குக்காக  இறங்குவாய் என் மட நெஞ்சே!

விளக்கம்

புற வழிபாட்டு முறைகளை நீக்க வலியுறுத்துல்  பொருட்டு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அவிழ்தல்

வார்த்தை :  அவிழ்தல்

பொருள்

  • மலர்தல்
  • உதிர்தல்
  • சொட்டுதல்
  • இளகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அவிழ இருக்கும் அறிவுடன் நின்றவர்க்(கு)
அவிழுமிவ் வல்லலென் றுந்தீபற
அன்றி அவிழாதென் றுந்தீபற.

திருநெறி 5 – திருவுந்தியார்

கருத்து உரை

(வினைக்கு உட்பட்டு) பிரபஞ்சத்திலே இருப்பினும் அதிலே பந்தமில்லாமலிருந்து திருவருளுடனே கூடி நிற்கின்றவர்களுக்கு இந்தப் பிரபஞ்சத்திலேயுள்ள துன்பங்களெல்லாம் நீங்கும்.

விளக்க உரை
திருவருளுடனே கூடினால் ஒழிய துன்பங்கள் நீங்காது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓரி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓரி

வார்த்தை :  ஓரி

பொருள்

  • கிழநரி
  • ஆண்நரி
  • ஆண்முசு
  • ஆண் விலங்குகள் (பொதுவாக)
  • ஆண்மயிர்
  • புறமயிர்
  • காளிவாகனம்
  • கொல்லிமலையை ஆண்ட கொடைவள்ளல்களில் ஒருவரான ஓரி என்ற மன்னன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முதுவாய் ஓரி கதற முதுகாட்
   டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
   மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
   கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
   ஆலக் கோயில் அம்மானே.

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

பெரிய வாயை உடைய நரிகள் ஊளையிடும் இடத்திற்கு அருகினில் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே, கொன்றை பூவினில் இருந்து தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற  மலையான் மகள் மணவாளனே, திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ சென்று  முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடும்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடும்பு

வார்த்தை :  அடும்பு

பொருள்

  • அடும்பு அல்லது அடம்பு – ஒருவகையான படரும் கொடி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப கெடுமே
கொடும்பாடு உடையான் குடி.

பழமொழி நானூறு

கருத்து உரை

அடும்பின் மென்கொடிகள் நிறைந்து அழகு செய்கின்ற சோலைகள் சூழ்ந்த கடல் நாடனே! நெடுங்காலமாகவே தம்மோடுதொடர்பு கொண்டுவந்தவர்கள், தீயதன்மையிலே இருப்பக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும்.

விளக்க உரை

  • சான்றோர்களின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவனுடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும் என்பது கருத்து
  • கெடுமே கொடும்பாடு உடையான் குடி என்பது பழமொழி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாசுணம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மாசுணம்

வார்த்தை : மாசுணம்

பொருள்

  • பெரும்பாம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சந்திரனையும் பெரிய கங்கையும் தன் சிரசில் வைத்திருப்பதால் கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் தரித்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். கபாலம் எனும் மண்டையோட்டை ஏந்திய கையினை உடையவன். பொன்னார் மேனியில், மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி ஆனவர். ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன். இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தது அருளியிருப்பவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வௌவுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வௌவுதல்

வார்த்தை : வௌவுதல்
பொருள்

  • கைப்பற்றுதல்
  • திருடுதல்
  • கவர்தல்
  • பேய்முதலியனபற்றிக்கொள்ளுதல்
  • மேற்கொள்ளுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் *வெளவாத*
நன்றியின், நன்கு இனியது இல்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

கருத்து உரை

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் மிக இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துஞ்சுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துஞ்சுதல்

வார்த்தை :  துஞ்சுதல்

பொருள்

  • தூங்குதல்
  • துயிலுதல்
  • சோம்புதல்
  • தொழிலின்றிஇருத்தல்
  • சோர்தல்
  • இறத்தல்
  • வலியழிதல்
  • குறைதல்
  • தொங்குதல்
  • தங்குதல்
  • நிலைபெறுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துஞ்சும் போதுந் துயிலின்றி யேத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

உறங்கும்போதும் உறங்காது இருந்து உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலம் செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! முனிபன்னியருள் ஒருத்தி ஆகிய இப்பாவையை பிச்சையாகக்கொண்டு வந்த போதும் தங்களது பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?

விளக்கம்

  • துயிலின்றி – அறிவு ஓய்தல் இன்றி. உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி
  • ஐந்தலைநாகம் – முதல்வன் திருமேனியில் உள்ள ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன
  • முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களில் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிக

 

துக்கடா

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஓர்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஓர்தல்

வார்த்தை :  ஓர்தல்

பொருள்

  • ஆராய்தல்
  • எண்ணுதல்
  • உணர்தல்
  • அறிதல்
  • தெளிதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே.

சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

கருத்து உரை

பிரணவப் பொருளாகிய ஓங்கார வடிவத்தின் உப்பொருளை உணர்ந்து அறிந்தப்பின் நீங்காத ஆசை நிலைக்குமா?

விளக்கம்

1.

ஓங்கார வடிவம் மற்றும் அதன் பொருள் குறித்த விபரங்களை திருமந்திரம் 4ம் தந்திரத்தின் மூலம் அறிக.

2.

  • சதோகநாதர், நவநாத சித்தர்களில்  இரண்டாவதாக  வைத்துப் போற்றப்படுபவர்.
  • காலம் தோராயமாக் – கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
  • இவர் யோக  ஞானம்  பற்றி அதிகம்  பாடியதால்  ‘யோக சித்தர்’ என்றும் குறிக்கப்படுகின்றார்.
  • இவர் சக்தி வழிபாட்டு பூஜை முறை கொண்டவர்.

துக்கடா

இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும்

ஆசிரியத்தளை

— நேரொன்றிய ஆசிரியத்தளை
– நிலைச்சீர் – இயற்சீர் (ஈரசைச்சீர்)
– நிலைச்சீர் ஈற்றசை – நேர்
– வருஞ்சீர் முதலசை – நேர்
– நிரையொன்றிய ஆசிரியத்தளை
– நிலைச்சீர் – இயற்சீர் (ஈரசைச்சீர்)
– நிலைச்சீர் ஈற்றசை – நிரை
– வருஞ்சீர் முதலசை – நிரை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தாமம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தாமம்

வார்த்தை :  தாமம்

பொருள்

  • சமீபம்
  • புகலிடம்
  • பற்று
  • சார்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

திருமந்திரம் – திருமூலர் – 8ம் தந்திரம் – முக்குற்றம்

கருத்து உரை

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றிலும் விலக்கி, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

விளக்க உரை

  • திருவள்ளுவர். “காமம், வெகுளி, மயக்கம்“* என மூன்றாக்கிக் கூறியதை சாங்கிய நூல் ஐந்தாக கூறும். காமம் – விருப்பம். வெகுளி – சினம்; வெறுப்பு. மயக்கம் – அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் என வகுத்து `பஞ்சக்கிலேசம்` என்பர்.
  • யோகமார்கத்தால் (தச தீட்சையில் கேட்கப்படும் ஒரு ஒலி) கேட்கப்படும் உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது.

துக்கடா

  • தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
  • செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும்.
  • செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது.
  • அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அலங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அலங்கல்

வார்த்தை :  அலங்கல்

பொருள்

  • மாலை, பூமாலை
  • அசையும் கதிர்
  • தளிர்
  • ஒழுங்கு
  • ஒலி
  • துளசி
  • முத்துச்சிப்பி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.

கருத்து உரை

இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை மலை போன்ற வலிமையுடன் அழுத்தி அவனை வருத்தமுறுமாறு செய்த சிவபெருமானது இடமானதும், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடையவர்கள்( முனிவர்கள் ) வாழ்வதும், மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்

விளக்க உரை

  • மனன் – மன்னன்
  • எழில் – எழுச்சி
  • விலங்கலிடை – மலையின் அடியில்
  • புலன்கள் தம்மை வென்றார் – புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற ரிஷிகள்/முனிவர்கள்/சித்தர்கள்

துக்கடா

சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.

செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன.

ஓரசைச்சீர்
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
நாலசைச்சீர்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அங்கி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அங்கி

வார்த்தை :  அங்கி

பொருள்

  • ஆடை, மேலாடை
  • நெருப்பு
  • அக்கினி
  • தீ
  • அனல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

திருமூலர் – திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் –  அகத்தியம்

கருத்து உரை

ஒருகாலத்தில் நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒரு பக்கம் உயர்ந்தும் மற்றொரு பக்கம் தாழ்ந்தும் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சம் கொண்டு சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிட, அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் – உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே,  உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனே; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.

 

விளக்க உரை

நடுவுள அங்கி – அகத்திய- இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய`
                                        –  நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய`
இரு பொருள்கள்

துக்கடா

  • உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகள் அசைகள்.
  • நேரசை,நிரையசை ஈரசைகளாவன.
  • குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும்.
  • இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சுடலை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சுடலை

வார்த்தை :  சுடலை

பொருள்

  • சுடுகாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.

கடேந்திர நாதர் என்ற  விளையாட்டுச் சித்தர்

கருத்து உரை

மனிதர்கள் இறந்த பிறகு உடலைக் கழுவுதல் விளையாட்டே, சுடுகாட்டை அடையும் வரை அவர்கள் அழுகையும் விளையாட்டே, அவர்களை முன்வைத்து (நிலையாமைத் தத்துவங்களைப் பேசி) ஞானத்தைப் பேசுவது விளையாட்டே. குளித்து வீடு வந்ததும் அவைகள் முழுவதையும் மறப்பதும் விளையாட்டே.

விளக்கம்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

எனும் திருமந்திர வரிகள் யாண்டும் ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கவை.

  • விளையாட்டுச் சித்தரின்   இயற்பெயர்  கடேந்திர  நாதர்
  • வாழ்க்கையில் எல்லாவற்றையுமே  விளையாட்டாய்  எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாமல் எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் பாடல்கள் இவை

துக்கடா – அசை பிரிப்பு

செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நயத்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நயத்தல்

வார்த்தை : நயத்தல்

பொருள்

  • விரும்புதல்
  • பாராட்டுதல்
  • சிறப்பித்தல்
  • பிரியப்படுத்தல்
  • தட்டிக்கொடுத்தல்
  • கெஞ்சுதல்
  • அன்புசெய்தல்
  • பின்செல்லுதல்
  • மகிழ்தல்
  • இன்பமுறல்
  • இனிமையுறுதல்
  • இணங்கிப்போதல்
  • பயன்படுதல்
  • மலிதல்
  • மேம்படுதல்
  • ஈரம்ஏறுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நானென்ற ஆணவத்தை நயந்தறுத்து விடுத்தேன்
   நன்மைபெற்றுக் குகைதனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன்
தானென்ற கருவமதைத் தணித்து விட்டு வந்தோம்
   தவமேதான் கதி என்று சரவழியில் உகந்தோம்.

வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்

கருத்து உரை

நான் எனும் செருக்கை அறுத்தேன். குகைக்குள்ளே நன்மை பெற்று வாழ்ந்தேன். தான் என்னும் கர்வத்தயும் குறைத்துவிட்டு தவமே உரிய வழி என சஞ்சார வழியில் மகிழ்ந்தோம்.

விளக்க உரை

  • இவருடைய இயற்பெயர் ‘வகுளிநாதர்’
  • இவருக்கு முன் இருந்த பல சித்தர்களைப்  பின்பற்றி 12  பாடல்களைப் பாடியிருப்பது மட்டும் தெரிகிறது.

துக்கடா

சொல் – ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சொல்லின் வகைகள்

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பண்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பண்

வார்த்தை : பண்

பொருள்

  • இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று
  • வேதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்
   ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
   அலக்கு அழிந்து புரண்டே போவார்;
பண் உலவு மொழிபாகர் தண்டலையார்
   வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
   மெய் ஆகும் இயற்கை தானே!

தண்டலையார் சதகம்

கருத்து உரை

இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்றான பண்ணென இனிக்கும் மொழியை உடைய உமையை இடப் பக்கத்தில் கொண்டவரான தண்டலையிறைவர், (வினைகளை ஆராய்ந்து) அவரவருக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் வண்ணமே நடக்கும் அன்றி, நிலவுலகை ஆள நினைப்பவரும், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவோரும், தங்கள் ஆற்றலால் (பிறர்க்குக் கேடு) செய்வோரும், சிறிதும் நன்மை செய்யாதவரும், இறுதியிற் கலக்கமுற்றுக் கெட்டழிவார்கள். அவர்கள் நினைத்தவை யாவும் நடவாமற் போகும். (இவ்வாறான சிவன் அருளை நினைத்துப்) பேசாதிருப்பதே நலந்தரும் தன்மையுடையது.

விளக்க உரை

  • அவரவர் செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர் கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும் முடியாமல் நம் வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும். ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்’ என்பது.
  • பழமொழி. பேராசைகொண்டு பிறர்க்குக் கேடு செய்யலாகாது என்பது கருத்து.
  • ‘தண்டலையார் சதகம்’ என்னும் இந்தச் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்’ என்று பெயர்பெற்றது.
  • தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர்.
  • பழமொழி: எண்ணமெல்லாம் பொய்யாம் மௌனமே மெய்யாம்.

துக்கடா

மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பு அசை. யாப்பிலக்கணத்தில் – எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!