ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மாசுணம்
வார்த்தை : மாசுணம்
பொருள்
- பெரும்பாம்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
சந்திரனையும் பெரிய கங்கையும் தன் சிரசில் வைத்திருப்பதால் கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் தரித்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். கபாலம் எனும் மண்டையோட்டை ஏந்திய கையினை உடையவன். பொன்னார் மேனியில், மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி ஆனவர். ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன். இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தது அருளியிருப்பவன்.