ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – தாமம்
வார்த்தை : தாமம்
பொருள்
- சமீபம்
- புகலிடம்
- பற்று
- சார்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.
திருமந்திரம் – திருமூலர் – 8ம் தந்திரம் – முக்குற்றம்
கருத்து உரை
`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றிலும் விலக்கி, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.
விளக்க உரை
- திருவள்ளுவர். “காமம், வெகுளி, மயக்கம்“* என மூன்றாக்கிக் கூறியதை சாங்கிய நூல் ஐந்தாக கூறும். காமம் – விருப்பம். வெகுளி – சினம்; வெறுப்பு. மயக்கம் – அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் என வகுத்து `பஞ்சக்கிலேசம்` என்பர்.
- யோகமார்கத்தால் (தச தீட்சையில் கேட்கப்படும் ஒரு ஒலி) கேட்கப்படும் உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது.
துக்கடா
- தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.
- செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும்.
- செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது.
- அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.