ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பண்
வார்த்தை : பண்
பொருள்
- இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று
- வேதம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்
ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
அலக்கு அழிந்து புரண்டே போவார்;
பண் உலவு மொழிபாகர் தண்டலையார்
வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
மெய் ஆகும் இயற்கை தானே!
தண்டலையார் சதகம்
கருத்து உரை
இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்றான பண்ணென இனிக்கும் மொழியை உடைய உமையை இடப் பக்கத்தில் கொண்டவரான தண்டலையிறைவர், (வினைகளை ஆராய்ந்து) அவரவருக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் வண்ணமே நடக்கும் அன்றி, நிலவுலகை ஆள நினைப்பவரும், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவோரும், தங்கள் ஆற்றலால் (பிறர்க்குக் கேடு) செய்வோரும், சிறிதும் நன்மை செய்யாதவரும், இறுதியிற் கலக்கமுற்றுக் கெட்டழிவார்கள். அவர்கள் நினைத்தவை யாவும் நடவாமற் போகும். (இவ்வாறான சிவன் அருளை நினைத்துப்) பேசாதிருப்பதே நலந்தரும் தன்மையுடையது.
விளக்க உரை
- அவரவர் செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர் கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும் முடியாமல் நம் வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும். ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்’ என்பது.
- பழமொழி. பேராசைகொண்டு பிறர்க்குக் கேடு செய்யலாகாது என்பது கருத்து.
- ‘தண்டலையார் சதகம்’ என்னும் இந்தச் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர் படிக்காசுப் புலவர் ஆவார். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம்’ என்று பெயர்பெற்றது.
- தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர்.
- பழமொழி: எண்ணமெல்லாம் பொய்யாம் மௌனமே மெய்யாம்.
துக்கடா
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பு அசை. யாப்பிலக்கணத்தில் – எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.