ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அங்கி
வார்த்தை : அங்கி
பொருள்
- ஆடை, மேலாடை
- நெருப்பு
- அக்கினி
- தீ
- அனல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.
திருமூலர் – திருமந்திரம் – இரண்டாம் தந்திரம் – அகத்தியம்
கருத்து உரை
ஒருகாலத்தில் நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒரு பக்கம் உயர்ந்தும் மற்றொரு பக்கம் தாழ்ந்தும் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சம் கொண்டு சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிட, அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் – உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனே; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.
விளக்க உரை
நடுவுள அங்கி – அகத்திய- இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய`
– நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய`
இரு பொருள்கள்
துக்கடா
- உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகள் அசைகள்.
- நேரசை,நிரையசை ஈரசைகளாவன.
- குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும்.
- இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும்.