ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சுடலை
வார்த்தை : சுடலை
பொருள்
- சுடுகாடு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.
கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர்
கருத்து உரை
மனிதர்கள் இறந்த பிறகு உடலைக் கழுவுதல் விளையாட்டே, சுடுகாட்டை அடையும் வரை அவர்கள் அழுகையும் விளையாட்டே, அவர்களை முன்வைத்து (நிலையாமைத் தத்துவங்களைப் பேசி) ஞானத்தைப் பேசுவது விளையாட்டே. குளித்து வீடு வந்ததும் அவைகள் முழுவதையும் மறப்பதும் விளையாட்டே.
விளக்கம்
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
எனும் திருமந்திர வரிகள் யாண்டும் ஒப்புமை கொண்டு சிந்திக்கத் தக்கவை.
- விளையாட்டுச் சித்தரின் இயற்பெயர் கடேந்திர நாதர்
- வாழ்க்கையில் எல்லாவற்றையுமே விளையாட்டாய் எடுத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாமல் எதனையும் தீவிரமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் பாடல்கள் இவை
துக்கடா – அசை பிரிப்பு
செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.