ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – அலங்கல்
வார்த்தை : அலங்கல்
பொருள்
- மாலை, பூமாலை
- அசையும் கதிர்
- தளிர்
- ஒழுங்கு
- ஒலி
- துளசி
- முத்துச்சிப்பி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.
கருத்து உரை
இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை மலை போன்ற வலிமையுடன் அழுத்தி அவனை வருத்தமுறுமாறு செய்த சிவபெருமானது இடமானதும், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடையவர்கள்( முனிவர்கள் ) வாழ்வதும், மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.
தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
விளக்க உரை
- மனன் – மன்னன்
- எழில் – எழுச்சி
- விலங்கலிடை – மலையின் அடியில்
- புலன்கள் தம்மை வென்றார் – புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற ரிஷிகள்/முனிவர்கள்/சித்தர்கள்
துக்கடா
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.
செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன.
ஓரசைச்சீர்
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
நாலசைச்சீர்