அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தலைப்படுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தலைப்படுதல்

பொருள்

  • ஒன்றுகூடுதல்
  • எதிர்ப்படுதல்
  • மேற்கொள்ளுதல்
  • பெறுதல்
  • முன்னேறுதல்
  • தலைமையாதல்
  • புகுதல்
  • வழிப்படுதல்
  • தொடங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் – தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணம் என்று அறிக;  அம்மையப்பராகிய சிவன் அந்தச் சத்தி வழியாக வந்து மோட்சத்தைக் கொடுப்பார்; அவர் தானே தலைமை ஏற்று அப்பரிசே வந்தளிப்பர்; அவர் எல்லா உலகிற்கும் அப்புறத்தார்.  சிவன்  அத்துவா எனப்படும் ஆறு வழியில் பொதுவியல் படி கலந்திருப்பினும் தன்னியல்பால் அப்பாற்பட்டவர்; இப்புறத்தும் அல்லார்போல் நின்றாலும் அவர் இப்படிக் கலந்திருப்பினும் கலவாதாரைப் போன்று சுட்டிக் காணப்படார் ஆவார்.

விளக்க உரை

அத்துவா – ஆறு வழிகள்

  • மந்திராத்துவா – மந்திர வடிவமான மோட்சகதி
  • பதாத்துவா – சொல் வடிவமான மோட்சகதி
  • வர்ணாத்துவா – அக்கரங்கள் வடிவிலுள்ள மோட்சகதி
  • புவனாத்துவா – மோட்சகதி
  • தத்துவாத்துவா – முப்பத்தாறு தத்துவங்களாகிய மோட்சகதி
  • கலாத்துவா – பஞ்சகலைகளாகிய மோட்சகதி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – எயிறு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  எயிறு

பொருள்

  • பல்
  • ஈறு
  • யானையின் கொம்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உரித்திட்டா ரானை யின்றோ லுதிரவா றொழுகி யோட
விரித்திட்டா ருமையா ளஞ்சி விரல்விதிர்த் தலக்க னோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டா ரெயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.

பதம் பிரித்து

உரித்திட்டார்; ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட;
விரித்திட்டார்; உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்; சிறிது போது; தரிக்கிலர் ஆகித் தாமும்
சிரித்திட்டார்; எயிறு தோன்ற;-திருப் பயற்றூரனாரே

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருப்பயற்றூர்ப் பெருமான், குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில் விரித்துப் போர்த்திக் கொண்டார். யானைத்தோலை உரித்ததனையும் போர்திக் கொண்டதையும் கண்டு பார்வதிதேவியார் அஞ்சி தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதைக் கண்டு, சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின் அவ்வாறு தொடர்ந்து போர்த்திய்ம்  ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித்  அம்பிகையின் அச்சம் தெளியத் தம் பல் தெரியுமாறு  சிரித்துவிட்டார்.

விளக்க உரை

வைரவர் திருக்கோலம் முன்வைத்து.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அடங்கல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அடங்கல்

பொருள்

  • செய்யத் தக்கது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன்என்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே

சிவவாக்கியர்

கருத்து உரை

எல்லா திசைகளிலும் இருந்து, எல்லா உயிர்கள் இடத்திலும் உறைந்து இருந்து எங்களது தந்தையாகவும்,  முக்தியைத் தரும் தவமாகிய சுடரினுள் வித்தாக இருக்கக் கூடியவனும் ஆகியவன் என்னுடைய இறைவன் ஆவான். சித்தம் தெளிந்து, காலத்தினால் அறுதி செய்ய இயலா வேதமாகிய கோயில் திறந்தப்பின் குரு என்றும், முனிவன் என்றும், உயர்ந்தோன் என்றும், கடவுள் என்றும் கூறப்படும் அவனின் ஆடல் கண்டப்பின் செய்யத்தக்கது என்று நினைவு கொண்டிருப்பது மாறும்.

விளக்க உரை

  • புறத்தில் எல்லா இடங்களிலும் நீக்கமற நினைத்திருக்கும் இறைவனை அகத்தில் கண்டப்பின் பிறவியின் பொருட்டு செய்யத்தக்க விஷயங்கள் எது என எளிதில் விளங்கும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பயிர்ப்பு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பயிர்ப்பு

பொருள்

  • அருவருப்பு
  • கூச்சம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
*பயிர்ப்புறும்ஓர்* பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

6ம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

புலால் மறுத்தோரை அகவினத்தார் என்றும், கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் என்றும் அவர்கள் புற இனத்தார் என்று இறைவன் எனக்கு அருளினான்.

விளக்க உரை

  • புறத்தில் இருப்பது விலகும், அகத்தில் இருப்பது பற்றி நிற்கும் என்றபடி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏனை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏனை

பொருள்

  • ஒழிபு
  • மற்றையெனும்இடைச்சொல்
  • ஒழிந்த
  • மற்று
  • எத்தன்மைத்து
  • மலங்குமீன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே.

திருமுறை 10 – திருமந்திரம் ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தின் காரணமாக முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத்தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பான். சொல் மட்டுமின்றி மனமும் அடங்கிவிட்ட நிலையை உடையன் ஆனாதால் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முழுவதுமாக பெற்றவன் ஆவான். சிவஞானத்தைப் பெறாது சிவ வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

விளக்க உரை

  • மோனம் – மௌனம். புறக்கருவி ஆகிய வாய் மட்டும் இல்லாமல் அந்தக்கரணத்தில் ஒன்றான மனம் அடங்கியதையும் குறித்தது.
  • அகத்தில் ஞானம் உடையவனே சீவன்முத்தன் என்றும், ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் சீவன்முத்தன் ஆகான் என்பதும் கூறப்பட்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கலித்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கலித்தல்

பொருள்

  • மேன்மேலும் பெருகுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏற்றலிட் டார்கொடி கொண்டோய்
   விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட்ட டாலும் இடலாம்நெல்
   மாவைக் *கலித்திடுநீர்
ஆற்றலிட் டாலும் பெறலாம்உட்
   காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம்
   எவர்க்கும் திருப்புவதே.

திருவருட்பா – மூன்றாம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

எருதினை கொடியாக உடையவனே, பெருங்காற்றிடையே நிறுத்தி விளக்கை ஏற்றென்றாலும் ஏற்றலாம்; அரிசிமாவை ஆற்றிலிட்டாலும் பெறலாம்; குடும்பமாகிய சேற்றில் உள்ளமாகிய காலையிட்டால் பின் திரும்புவது எவர்க்கும் அரிது.

விளக்க உரை

  • பெருங்காற்றில் விளக்கை ஏற்றுதலும், அரிசி மாவு ஆற்றில் இருந்து பெறுதல் இரண்டும் மீண்டும் பெறலாகாத செயல்
  • குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அதில் இருந்து வெளிவராமல் தடுக்கும் என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு”

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெண்ணீர்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தெண்ணீர்

பொருள்

  • தெளிநீர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமோ – ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

சமுத்திரத்து நீரைப் எவ்வளவு பருகினாலும் தாகம் தணியாது; அதுபோல, நல்ல குருவினுடைய சில வார்த்தைகளினாலே உள்ளம் தெளிவுறுதல் போல வெகுநூல்களைக் கற்றாலும் உள்ளம் தெளியாது; அவ்வாறு தெளியுமானால், தெள்ளிய அறிவினையுடைய சீடனே, சொல்லுவாயாக.

விளக்க உரை

குரு இல்லாமல் நூல்களைக் கற்றுப் பயனில்லை என்று கண்டு கொள்க. அஃதாவது உண்மை ஞானம் அருள்பவர் குருவே.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பத்தா

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  பத்தா

பொருள்

  • கணவன், பர்த்தா
  • துப்பு
  • வழி
  • படிப்பணம்
  • முகவரி
  • விலாசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

*பத்தாவுக்* கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

கணவனுக்கு ஏற்ற மனைவியாயின் எந்த நிலையிலும் அவளுடன் கூடி வாழலாம். அவ்வாறு இல்லாமல் மனைவி ஏறுமாறாக நடந்தால் கணவன் எவரிடத்தும் எதுவும் கூறாமல் துறவி ஆகுவதே கொள்ளத் தக்கநெறி.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வயங்கும்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வயங்கும்

பொருள்

  • விளங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
   கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
   எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
   கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
   ஞானிஎனக் கூறொ ணாதே.

திருவருட்பா – நான்காம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், ஒரு நொடியில் எலும்பைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக உருவமாக்கியும் செய்த பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போன்றவர்கள் ஆயினும், பிறப்பிறப்புக்கு இரக்கமின்றி உயிர் தாங்கி நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக.

விளக்க உரை

  • திருஞானசம்பந்தர் செய்த அரும் பெரும் செயல்கள் சில
  1. திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
  2. திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணால் சிறிது நேரம் நோக்கிப் பெண்ணுரு திகழ எழுப்பியது
  3. திருமருகலில் பாம்பு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை செய்தது
  • கருவாணையுறுதல் – பிறப்பிறப்புக்கு உள்ளாதல்.
  • புலால் உண்பவன் எத்துணை ஞானமும் உடையனாயினும், ஞானி எனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறு.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விரதி

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  விரதி

பொருள்

  • நோன்பு மேற்கொண்டோன்
  • பிரம்மசாரி
  • துறவி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணிகலன் ஆகும். நான்கு வேதங்களையும்,  சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் ஆகிய ஆறு அங்கங்களை அறிந்த  அந்தணர்களுக்கு ஓதுதல் சிறந்த அணிகலன்;  சிவபெருமானுக்கு  பிறை உடைய அழகிய சடை சிறந்த அணிகலன். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணிகலன் திருவைந்தெழுத்தேயாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மூங்கை

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மூங்கை

பொருள்

  • ஊமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும்அச் சுத்தத்தை யார்அறி வார்களே

திருமந்திரம் – 7ம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

வாக்கு, மனம் என்னும் இரண்டாலும் மௌனமாக இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அவ்வாறு இல்லாமல் மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது இருத்தல்தான் மௌனம் எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன நோன்பு மேற்கொண்டவர்களாக ஆகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருங்கு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மருங்கு

பொருள்

  • பக்கம்.
  • உடல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

சிலப்பதிகாரம்

கருத்து உரை

இருபக்கமும் வண்டுகள் மிக்கொலிக்க, அழகிய பூவாடையைப் போர்த்து கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், காவேரி நீ வாழ்வாயாக; அங்ஙனம் நடந்த செயல் எல்லாம், நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே  அறிந்தேன் வாழி காவேரி.

 

  • இன்று ஆடிப் பெருக்கு.
  • கரை புரண்டு ஓடும் காவிரியினைக் கண்ட நாம் அடுத்த தலைமுறையும் அவ்வாறு காண இறையிடம் பிராத்தனை செய்வோம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னார்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  துன்னார்

பொருள்

  • பகைவர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே.

தேவாரம் – 4ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நேடுதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நேடுதல்

பொருள்

  • தேடுதல்
  • எண்ணுதல்
  • விரும்புதல்
  • சம்பாதித்தல்
  • இலக்காகக்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சூழல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சூழல்

பொருள்

  • நமக்கு அருகாமையில் இருக்கும் இடம்
  • நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்

பாடல்

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றித்தான் நானுன்னைக் கண்டேனோ என்றால்
அருமாயை ஈன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

சிவஞான போதம் – மெய்கண்டார்

கருத்து உரை

மாணவனே, இன்று நீ என்னை உன் ஊனக் கண்ணால் கண்டும் என் ஆன்மாவின் தன்னியல்பைக் கண்டாயோ? காணவில்லை. அன்றி நான்தான் உன் பருவுடம்பைக் கண்டிருந்தும் உன்னுடைய உயிர் இயல்பைக் கண்டேனோ? காணவில்லை. மாந்தராகிய நாம் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டும் முற்றிலும் காணவில்லை. எனில், நுண்ணிய மாயையிலிருந்து இவ்வுலகங்களை எல்லாம் தோற்றுவித்து அருளும் சிவ சத்தியைத் தன்னுடைய ஒரு பாகத்திலே கொண்ட உமையொரு பாகனை மாயைக்கு உட்பட்ட யார்தான் காண இயலும்? ஒருவராலும் காண இயலாது.

விளக்க உரை

மாயையை விலக்கும்வரை சிவதரிசனம் கிடையாது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னுதல்

தமிழ் அன்னை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துன்னுதல்

பொருள்

  • அடைதல்
  • பொருந்துதல்
  • மேவுதல்
  • அணுகுதல்
  • செறிதல்
  • செய்தல்
  • அடைதல்
  • ஆராய்தல்
  • தைத்தல்
  • உழுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
தன்இயல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
துன்னிய நின்அருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே!

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

விளக்க உரை

அருட் பெருஞ் சோதியையுடைய ஆண்டவனே! நிலை பெற்ற நினது திருவருளாகிய அருமையான ஞானாமுதத்தை எனக்குத் தந்து என்னையும் நின் திருவருளில் வாழ்வித்து நான் எண்ணிய எல்லாவற்றையும் அடைய உதவி செய்து என் உள்ளத்தில் சிவமாய்க் கலந்து இப்பொழுது எனக்கு நினது அருளைச் செய்தாய்; என்னையடைந்த நினது திருவருள் வாழ்க.

கருத்து உரை

  • உன்னிய உன்னிய எல்லாம் உதவல் – எண்ணிய எல்லாம் எண்ணியவாறு உதவுதல்.
  • என் உள்ளத்திலே தன்னியலாகிக் கலந்து தயவு செய்தாய் – உள்ளத்தில் ஞானமாய்க் கலந்து கொள்ளுதல் சிவத்தின் இயல்பு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடிஞ்சில்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  இடிஞ்சில்

பொருள்

  • அகல்

பாடல்

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

அகல் இருப்பினும் சுடரை அணைத்து விட்டால், அந்த அகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்துவிடும். அது போல்வதே உடம்பின் வாழ்நாளும்,  இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர்கள் ஆரவாரம் செய்வார்கள். விடியல் கண்ட பிறகும் இருளில் கிடப்பதை ஒத்து வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, உடம்பின் நிலையாமை இயல்பு கண்கூடாக விளங்கி நிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப் பற்றி அதில் அழுந்திக் கிடந்து, அதன் மேல் நிலைக்கு வராமல் துயருறுதல் இரங்கத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆக்ஞை

தமிழ் அன்னை

ஓவியங்கள் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆக்ஞை

பொருள்

  • ஆக்ஞை’ என்ற சொல்லானது “ஆக்கினை’ என்ற சொல்லின் மருவு. “கட்டளை’ அல்லது “ஆணை’.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

திருமந்திரம்

கருத்து உரை

நெற்றியின்கண் நேர்நடுவில் புருவமத்தியில் காணப்படும் இடைவெளி தில்லைத் திருச்சிற்றம்பலமாகும். இதைக் கண்டு உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்சிவசிவஎன்னும் செந்தமிழ்த் திருமறையாகும். எல்லா பற்றறுகளையும் விட்ட பற்றவர்களாகிய பற்றுக்குப் பற்றாய் நிற்பவன் சிவபெருமான். அவனே பரமன். அவன் உடனாக இருக்கும் இருப்பிடம் மேலே கூறப்பட்ட புருவநடுவாகிய தில்லைத் திருச்சிற்றம்பலமென்று திருவருளால் தேர்ந்து தெளிந்து கொண்டேன்.

ஆக்ஞை

விளக்க உரை

  • வடிவம் வட்டம். இதழ்கள் 96
  • இச் சக்கரத்தில் மொத்தம் 96 இதழ்கள் இருந்தாலும், ஒரு யந்திரமாக வரையும்போது இரண்டு இதழ்கள் கொண்டதாகவே வரையப்படும்.
  • வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்று என வரையப்படும் இந்த இதழ்கள் முறையே “ஹம், “ஷாம்’என்று அழைக்கப்படுகின்றன. அக்ஷ்ரங்கள் முறையே (‘ஹ’,’க்ஷ’). அதன் தேவதைகளான ஹம்ஸவதீ, க்ஷமாவதீ தேவியரே, ஹாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக போற்றப்படுகின்றனர்.
  • இடகலை, பிங்கலை நாடிகள் வழியாக ஆக்ஞை சக்கரம் முழு உடலின்மீதும் ஆளுமை செலுத்துகிறது.
  • ஆக்ஞை சக்கரம் பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு அப்பாற்பட்டது.
  • சதாசிவனாரும், மனோன்மணி ஆகிய ஞானத் தாயும் கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே “ஆக்ஞை” என்ற தலமாகும்.
  • இதன் சக்ர கமலத்தில் சந்திரனுடைய 64 கலைகள் உள்ளன.
  • தெய்வம் – மனோன்மணி, தர்மசக்தி இவர்களுடன் கூடிய ஸதாசிவன்.
  • வண்ணம் – இண்டிகோ
  • பீஜா மந்திரம் – “அம்’ (ஆன்ம்)
  • வாகனம் – நாதம். இந்த நாதமே “அம்’ எனும் பீஜா மந்திரத்தை சுமந்து செல்லும்.
  • அதிதேவதை – ஹாகினி தேவி
  • குணம்- சாத்விகம்.
  • லோகம்- தபலோகம்.
  • கோசம்- விஞ்ஞானமய கோசம்
  • தெய்வம் – சிவன். இந்த சக்கரத்தில் அவர் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் உள்ளார். பேதங்கள் மறைந்த பரிபூரண நிலை
  • புலன் (தன்மந்திரம்), புலனுறுப்பு (ஞானேந்திரியம்), செயலுறுப்பு (கர்மேந்திரியம்) ஆகிய அனைத்துமே “மனம்’
  • நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’, ‘ஆளுமைச் சக்கரம்’,’ ப்ரம்ஹக்ரந்தி ‘ என பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது.
  • இந்த ஆக்ஞா சக்கரத்தில் பரமசிவமும் சித் சக்தியும் இணைந்திருப்பதை தியானிக்கும் பக்தர்கள் சூரியன், சந்திரன், அக்னி போன்ற ஒளிகளுக்கு அப்பாற்பட்ட பரஞ்ஜோதி வடிவான தேவியின் திருவருளைப் பெறுவர். இங்குதான் ஜீவன்-இறைவன் சந்திப்பு ஏற்படுகிறது
  • ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, “திரிகால ஞானம் அல்லது திரிகால ஞானி’ எனும் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்ந்த நிலை ஏற்படும்.
  • ப்ரம்ஹக்ரந்தி எனும் இவ்விடத்திலேயே சாக்த யோகிகள் ஹாகினீ தேவியை தியானிப்பர்.
  • இச்சக்கரத்தில் மகாகாலன் எனும் சித்தன், ஹாகினீ தேவியோடு திருவருள்பாலிக்கிறார்கள். இந்த சக்கரத்தில் விளங்கும் ஒளியை முக்தியைக் கொடுக்கவல்ல “துரீயலிங்கம்” என உபாசகர்கள் அழைப்பர்.
  • உன்மனீ பாவம் ஏற்பட அருள்வதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். (உன்மனீ பாவம் -சகல விஷயங்களிலும் பற்றுதலை விட்டு இதய கமலத்திலிருக்கும் பரப்பிரம்மத்தை தியானம்  செய்யும் நிலை. கண்கள் மூடாமலும் திறக்காமலும், பிராணவாயு, ரேசகம், பூரகம் இல்லாமலும் மனம், சங்கல்பம் விகல்பம் இல்லாமலும் இருந்து  அம்பிகையை தியானிப்பது உன்மனீ பாவம்).

பல்வேறு நூல்களில் குறிப்புகள்

லலிதா ஸஹஸ்ரநாமம்ஹாகினீ தேவி (ஆக்ஞை)

ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!
மஜ்ஜா-ஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா
ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ –ரூப-தாரிணீ

புருவமத்தியில் இரண்டு இதழ் தாமரையில் இருக்கும் ஆறு முகங்களுடன் கூடிய ஹாகினீ தேவி, வெண்மை நிறமுடையவள். மஞ்சள் நிறமுடைய எலுமிச்சை அன்னத்தின்மீது பிரியம் கொண்ட இத்தேவி ஞான முத்திரை, அக்ஷமாலை, டமருகம் மற்றும் கபாலத்தை ஏந்தியிருப்பவள். மூன்று கண்களை உடையவள். ஹம்ஸகதி முதலியவர்களுடன் கூடியவள். சகல தேவ தேவியர்களாலும் துதிக்கப்படுபவள். எலும்பிலுள்ள தாது மஜ்ஜையின் அபிமான தேவதையாக திருவருள் புரிபவள்.

ஆதிசங்கரர்

இந்த சக்கரத்தில் தியானிப்பவர்களுக்கு கட்டாயம் சாயுஜ்ய பதவி கிட்டும். இச்சக்கரத்தில் தேவதேவியர்  பரசம்புநாதர், சித்பராம்பளாக அருள்கின்றனர். இங்கு தேவி ஸாதா எனும் கலையாக பிரகாசிக்கிறாள்.

காளிதாஸன்லகுஸ்தவம்

நெற்றியின் நடுவில் வானவில் போன்ற பல வர்ணங்கள் கொண்ட ஒளி, சிரசில் சந்திரனுடைய வெண்மையான ஒளி, இதயத்தில் சூரிய ஒளி கொண்ட தேவி என் பாவங்களை நாசம் செய்யட்டும்.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – புயங்கன்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  புயங்கன்

பொருள்

  • பாம்பு
  • பாம்பணியுடையசிவபிரான்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே

தேவாரம் – 7ம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்

விளக்க உரை

1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம்.
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.

2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது

3.
அட்டமா நாகங்களை – அட்டமா சித்தி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்மம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தன்மம்

பொருள்

  • தருமம்
  • சலாசனவகை
  • நீதி
  • நன்மை
  • அறம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

விளக்க உரை

  • உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
  • அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!