அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஏமுறல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஏமுறல்

பொருள்

  • ஏக்கமடைதல்
  • மயங்கல்
  • பித்து கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அன்றியும் நின்
   வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று
   ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி;
   சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும்
   நன்று எனா,

கம்பராமாயணம்

கருத்து உரை

அதுமட்டும் இல்லாமல்*, உன்னுடைய வருகையை விரும்பி இன்று வரையிலும் எதிர்பார்த்து இருக்கும் அந்த அகத்திய முனிவர் மகிழ்ச்சி அடைவார். ஆதலால் நீ சென்று அகத்தியரை அடைவாயாக; சிறந்தவனே! அகத்தியரை அடைதல் விண்ணவர்க்கும் நல்லதே;  மற்ற எல்லார்க்கும் நல்லதே ஆகும் என்று கூறினார் சுதீக்கணர்.

விளக்க உரை

  • * நல்லதே நினைந்தாய்…இல்லை நின்வயின் எய்தகில்லாதவே – அம்முனிவனை அடைந்த பின்னர் உன்னிடத்தில் அடையாத பேறுகள் ஒன்றுமில்லை என்று முதல் பாடல் முடிகிறது. அதனை விரித்துக் கூறும் இப்பாடல்
  • இராமன் வருகை உணர்ந்து ‘எப்போது வருவான்’ என எதிர் பார்த்து ஏங்கினார் என்றும் பொருள் உரைப்பர்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பத்திமை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பத்திமை

பொருள்

  • தெய்வபத்தியுடைமை
  • காதல்
  • அன்பு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பத்திமையும் பரிசுமிலாப்
   பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை
   ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால்
   திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல்
   விளங்குதில்லை கண்டேனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்க வாசகர்

கருத்து உரை

அன்புடைமையும், நல்லொழுக்கமும் இல்லாமைக்கு காரணமானதும் ஆன பசு, பாசத்தை அறுத்து அருளி, அடியேனை, ‘இவன் பித்தன்’ என்று கண்டோர் கூறும்படி செய்து, தமது திருவடிகளை விட்டு அகலாமல்,  வலிமையும், உறுதியும் ஆன சித்தம் என்கிற  கயிற்றால் கட்டுண்டு கிடக்கும்படி செய்த திறமை மிக்கவனாகிய சிவபெருமானது திருவிளையாடலைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

உருவத்திருமேனியின் வேறு பெயர்கள் யாவை?
சகளத் திருமேனி, வியத்த லிங்கம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – புகல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  புகல்

பொருள்

  • புகுகை
  • இருப்பிடம்
  • துணை
  • பற்றுக்கோடு
  • தஞ்சம்
  • உடம்பு
  • தானியக்குதிர்
  • வழிவகை
  • போக்கு
  • சொல்
  • விருப்பம்
  • கொண்டாடுகை
  • பாடும்முறை
  • வெற்றி
  • புகழ்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்லார் சிவகதை நல்லார் தமக்குக் கனவிலுமெய்
சொல்லார் பசித்தவர்க் கன்னங் கொடார் குருசொன்னபடி
நில்லார்அறத்தை நினையார்நின்னாமம் நினைவிற்சற்றும்
இல்லார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

பட்டினத்தார்

கருத்து உரை

கச்சி ஏகம்பனே, சிவனாகிய உன்னைப் பற்றிய கதைகளை கற்க மாட்டார்கள்; நல்லவர்களாக இருப்பவர்களுக்கு கனவிலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்; பசித்து வருபவர்களுக்கு அன்னம் இடமாட்டார்கள்; குரு சொன்ன சொல்படி நிற்கமாட்டார்கள்; அறவழியினை பின்பற்ற மாட்டார்கள்; பெருமைக்கு உரித்தான உனது திருநாமங்களை நினைவில் கொள்ள மாட்டார்;  இப்படிபட்ட இவர்கள் இருந்தாலும், இறந்தாலும் என்ன என சொல்வாயாக

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் உருவத்திருமேனி எது?
மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பொருவிலி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பொருவிலி

பொருள்

  • ஒப்பிலி
  • ஒப்பார் இல்லாதவன்
  • சிவபிரான்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உருவிலி யூனிலி யூனமொன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்குந் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் 1தானே.

 

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே

திருமந்திரம் – பத்தாம் திருமுறை – திருமூலர்

கருத்து உரை

சிவபெருமான், வினைகள் பற்றிவரும் உருவத்தை உடையவன் அல்லன்; பிறப்பில்லாதவன்; இயல்பாகவே மலமில்லாதவன்; தேடிச் சென்றடைக்கூடிய அளவிற்கு செல்வம் இல்லாதவன் அல்லன்; குற்றம்  அற்றவன்; தேவர்களுக்கும் தேவனாக உள்ளவன்; தனக்கு யாரும் ஒப்பில்லாதவன்;  பூதப் படைகளை உடைமையாகக் கொண்டு ஆள்பவன்;  தான் எல்லாப் பொருட்கும் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல் தான் எந்த ஒன்றையும் சார்ந்திருக்கும் தன்மை இல்லாதவன்; இத் தன்மைகளை உடைய ஒப்பில்லாத பண்புகளை வாய்ந்த அவன் வலியவந்து அடியேன் உள்ளம் புகுந்தான்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாராதி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாராதி

பொருள்

  • நில உலகம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாராதி ஐந்துக்கும் பன்னும்அதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம் – ஓரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்.

திருநெறி 4 –  உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து உரை

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்கையினால் ஆன இப் பிரபஞ்சத்திற்கு அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அதிதெய்வங்கள் யாவர் எனின், முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரர், மகேசுவரர், சதாசிவர் என ஐந்து பேர்கள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய ஐந்து தொழிலையையும் குற்றமில்லாதவாறு செய்வார்களென்று அறிவாயாக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவுருத்திருமேனி எது?
சதாசிவம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வீறு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வீறு

பொருள்

  • பொருள்
  • பெருமை
  • கம்பீரம்
  • வீறாப்பு
  • சிறப்பு
  • கிளர்ச்சி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
     உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
     விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
     செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

ஒப்புமை படுத்த உனக்கு ஒருவரும் இல்லாமலும் நிகரில்லாததுமான ஒருவனே! அருட் செல்வமே! சிவபிரானே! அடியேனது மனத்தில் ஒளிர்கின்ற ஒளியே! உனது உண்மையான நிலைப் பதத்தினை அறியாத பெருமையில்லா எனக்கு மேன்மையான பதத்தைக் கொடுத்தவனாகிய ஒப்பற்ற அன்பானவனே! வார்த்தைகளால் வர்ணனை செய்து சொல்வதற்கு இயலாத வளமையான சுடர் வடிவினனே! சோர்வுற்ற நேரத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். இனிமேல் நீ  எழுந்து அருளிச் செல்வது எவ்விடத்தில்?

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவந்தரு பேதங்களுள் அருவத்திருமேனி யாவை?
சிவம், சக்தி, நாதம் மற்றும் விந்து

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மா

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மா

பொருள்

  • ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
  • 1/20 எனும் பின்ன எண் – ஒருமா
  • குதிரை, யானை , பன்றி ஆகியவற்றின் ஆண் இனம்
  • சிம்மராசி
  • வண்டு
  • அன்னம்
  • விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
  • மாமரம்
  • அழைக்கை
  • சீலை
  • ஆணி
  • துன்பம் பொறுக்கை
  • ஓர் அசைச்சொல்
  • திருமகள்
  • செல்வம்
  • கலைமகள்
  • மாற்று
  • கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
  • நிலவளவைவகை
  • வயல்
  • நிலம்
  • வெறுப்பு
  • கானல்
  • ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
  • பெருமை
  • வலி
  • அழகு
  • மாமைநிறம்
  • அரிசி முதலியவற்றின் மாவு
  • துகள்
  • நஞ்சுக்கொடி
  • அளவை
  • இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்ததும், விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதிகளைக் கொண்டதுமான பெரியதும், பெருமைக்கு உரியதுமான மயிலையில் திருவருள் எழுச்சியை விளைக்கும் கபாலீச்சரம் என்னும் திருக்கோயில் திருவிழாக்களைக் கண்டு, திசைதோறும் இடும் பலியாகிய உருத்திரபலி எனும் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?

விளக்க உரை

  • பங்குனி உத்தர விழாச் சிறப்பினை உணர்த்தும் பாடல்
  • மலிவிழா வீதி – விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும் வீதி
  • கலிவிழா – திருவருள் எழுச்சியை விளைக்கும் திருக்கோயில் விழாக்கள்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

நவம் தரு பேதங்கள் எவை?
சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஒறுத்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒறுத்தல்

பொருள்

  • தண்டித்தல்
  • கடிதல்
  • வெறுத்தல்
  • இகழ்தல்
  • அழித்தல்
  • துன்புறுத்தல்
  • வருத்துதல்
  • ஒடுக்குதல்
  • நீக்கல்
  • குறைத்தல்
  • அலைத்தல்
  • நோய்செய்தல்
  • பேராசை செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒறுத்தாய் நின்னருளில் லடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையுந் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

குளிர்ந்த வயல்களையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினால் ஒரு முறை என்னை தண்டித்தலின் பொருட்டு கடிந்து, வெறுத்து என்னை இகழ்ந்தாய்; நாய் போன்ற அடியேன் செய்த பிழைகளை பொருட்படுத்தாது அவை அனைத்தையும் ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறக்காமல் இருக்கும் பொருட்டுக் கடலில் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தி கண்டம் கரிய நிறமுடைவனாய்; இவை உன் அருட்செயல்கள் அன்றி வேறு என்ன!

விளக்க உரை

  • ஒறுத்தது – வானுலகில் இருந்த போதும் சிறு மயக்கம் கொண்டதால் நில உலகில் பிறப்பித்தது, பொறுத்தது – ‘பித்தா’ என வன்மை பேசியது. இரண்டும் அருளினாலே என்பது பொருள்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அறிவிக்க அறியும் சித்து எது?
ஆன்மா

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – களித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  களித்தல்

பொருள்

  • மகிழ்தல்
  • மதங்கொள்ளுதல்
  • செருக்கடைதல்
  • நுகர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
     அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
     எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
     பெருந்திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
     சென்னிதொட் டுரைத்தனை களித்தே.

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

நான் பட்ட துயரங்களை எல்லாம் நீ அறியாமாட்டாயா என்று முறையிட்டு உன்னை அழைத்த போது என்னுடைய அப்பனாகிய பெருமானே! நீயும் என்னை எடுத்து எறிதலைப் போல் புறக்கணிக்காமல் அழைத்த தருணத்தில் வந்தாய்; வந்து பின் என்னை எடுத்து மார்போடு  அணைத்து, மகனே, இனி “நீ அஞ்ச வேண்டா; உன்னை விட்டு இவ்வுலகில் சிறிது போதும் பிரிய மாட்டோம்; பெரிய  சித்திகள் யாவும் உனக்கு கிடைக்குமாறு அருள்  செய்துள்ளோம்” என்று என் தலைமேல் கை வைத்து உவகையுடன் உரைத்து  அருளினாய்.

விளக்க உரை

  • இனி எனக்கு ஒருகுறையும் இல்லை என்ற பொருள் பற்றியதும், பெரும் சித்திகள் பெற்றதையும் தானே விளக்கிக் கூறும் பாடல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கராசலம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கராசலம்

பொருள்

  • யானை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வெட்டும் கடா மிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்து உரை

துதிக்கைகளை உடைய மலைபோன்று எட்டுத் திக்குகளிலும் இருக்கும் எட்டு யானைகள் தத்தம் இடம் விட்டு விலகும்படி கண்களுக்கு எட்டாதவாறு ஆகாய வெளி வரைக்கும் மறையும்படியான விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே! வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது தோன்றி வரும் கடுமையும், உக்கிரம் நிறைந்து கொடுந் துன்பம் தரும் இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினை வீசி அடியேனைக் கட்டும் போது தேவரீர் காத்து அருள வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நூறுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நூறுதல்

பொருள்

  • அழித்தல்
  • அறைந்துகொள்ளுதல்
  • வெட்டுதல்
  • நெரித்தல்
  • பொடியாக்குதல்
  • இடித்தல்
  • வளைந்துகொள்ளுதல்
  • துரத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

யோகியர்களே, நீங்கள் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு வேறு மருந்து ஒன்றும் தேவை இல்லை.  (குரு முகமாக அறிக). மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள அறிவிற்கு ஆதாரமான உச்சியில் அதனை அப்பினாலும் மேலே குறிப்பிட்டவாறு  சிவநீராக மாறும். இதனாலே நரையும் மாறும்.

விளக்க உரை

  • நூறுதல் – பொடித்தல் என்பதால் ‘நூறு மிளகு“ எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாது.
  • அமுரி தாரணைக்குத் துணையாக இருக்கும் சிலவற்ரைப் பற்றி கூறுதல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வல்லடைதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வல்லடைதல்

பொருள்

  • விரைந்து அடைதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
   இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
   மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
   திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
   நீதனேன் என்னேநான் நினையா வாறே

தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எவரிடத்து இருந்தும் ஏற்றல் செய்யாத வினைகள் இல்லாதவனை,  எல்லா இடங்களிலும் உள்ளவன் தன்னை, இனியவற்றை நினையாதவர்களுக்குத் துன்பமானவனை, வலிமையுடைவனை,  தன்னை விரைந்து சரண் அடைந்தவர்களுக்கு அருளுவதில் வல்லவன் ஆனவனை, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான் தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன் ஆகிய திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகனை, நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்ந்து அருளியிருப்பவனாகிய அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!

விளக்க உரை

  • இல்லான் என்பது குறித்து ‘எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன்’ எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. புலனாகாதவன் எனினும் இல்லாதவன் ஆகுதல் இல்லை. எனவே இது விலக்கப்பட்டுள்ளது. குரு உரை வண்ணம் பொருள் உணர்க.
  • செல்லாத செந்நெறி – பிறப்பின்றி வீடுபெறும் நெறி

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சேடு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சேடு

பொருள்

  • அழகு
  • பெருமை
  • திரட்சி
  • நன்மை
  • இளமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

காந்தள் மலர் போன்றதும்,  இதழ்கள்  நிறைந்ததும் ஆன தோடார் மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும், செம்மையான அணிகலன்களையும் அணிந்து கொண்டுள்ள அம்மையோடும் உடனிருந்து, பெருமைக்கு உரிய இரும்பூளையில் உறையும் ஈசன், காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? இதனை எனக்குச் சொல்வீராக.

விளக்க உரை

  • அர்ச்சுனனோடு போர் செய்த வேடனாக வந்தது ஒப்புநோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சூளிகை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சூளிகை

பொருள்

  • நீர்க்கரை
  • செய்குன்று
  • யானைச் செவியடி
  • நிலாமுற்றம்
  • தலையணி வகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

தாமரை மலர்கள் கொண்டு,  மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொண்டுவந்து சொரியச் செய்த போது அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி சென்று ஆட்கொண்ட அழகான தலமானதும், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், அதன் மேல் இருக்கும் மேல்மாடத்திலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்பி கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற  தாமரை தடாகங்களில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற தலமானதும் ஆன இடம் திருக்கலயநல்லூரே என்று அறிக 

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தானே அறியும் சித்து எது?
சிவம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – துரிசு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  துரிசு

பொருள்

  • குற்றம்
  • துக்கம்
  • மயில் துத்தம்
  • முடிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

நிழல் தரும் பந்தல் போன்றதாகிய இவ்வுடம்பு தன் நிலைகெட்டு விட்டது. உயிர்நிலை கட்டுப்பாடு இல்லாமல், ஒன்பது வாசலால் ஒருங்கே அடைத்து விடப்பட்டது. அனைவரும் துன்பம் அடையும் படியான துக்க காலம் வர அன்புடையவர்கள் மேலும் மேலும் அழுது அந்த இடம் நீங்கினர்.

விளக்க உரை

  • ‘இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பது குறித்தப் பாடல்
  • ‘துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு எனப் பொருள் கொண்டு விரைந்து துன்பம் கொடுப்பவனாகிய காலன் சேர்ந்து’ எனப் பொருளிளும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆன்றோர் பொருள் உணர்ந்து அறிக.
  • `மனைவி முதலான உறவுகள் உண்மையில் அன்புடையர்களாக இருப்பினும் , அவர்களால் நிலையாமை விலக்க இயலாது’ என்பது பற்றியது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஆதி முத்தன் யார்?
ஆன்மா

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சுரர்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சுரர்

பொருள்

  • தேவர்
  • வானோர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

கருத்து உரை

நெருப்பில் இட்ட பஞ்சு எவ்வாறு இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அது போல் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போக செய்பவனும், உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் இருப்பிடம் செல்ல வைத்து நற்கதியை ஊட்டுபவனும், கடவுள் முதலியவர்களுக்கும் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேறுபவனும் ஆகிய கணபதியைத் துதித்து அவனின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.

விளக்க உரை

  • ‘தொடரும் உயிர்கள்.. உறச்செய்யும் – உயிர்கள் வினை பற்றி பிறப்பு, இறப்பில் உழலும். அவ்வாறான வினைகளை மட்டும் விலக்குதல் அல்லாமல் அந்த உயிர்களுக்கு மேன்மையான தேவலோக கிடைக்கும்படியாக செய்பவன்.
  • கடவுள் முதலோர்க்கு .. எவனால் முடிவுறும் – திரிபுர தகனத்தின் போது ஈசனின் தேரின் அச்சினை முறித்து, அதனால் ஏற்பட்ட தடையை உடைத்து எறிந்ததை ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே

         எனும் கந்தர் அநுபூதி பாடலில் ‘தேவர்களின் அரசனே’ என்ற வரிகள் ஒப்பு       நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பண்டு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பண்டு

பொருள்

  • முற்காலம்
  • முன்
  • தகாச்சொல்
  • நிதி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

என் தந்தையே! அரிதானவனே! என்னை ஆட்கொண்ட நாளில் வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய யான், உன்னை வணங்குகின்ற அடியார் நடுவில் நின்று, மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலமாகிய அடியார் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் இருக்கும் உன் திருத்தோள்களின் அழகை நோக்கி, முன்னொரு காலத்தில், தகாச்சொற்களைச் சொல்லி  ஒன்றுமே செய்யாதவனாக இருந்தேன்;  உன்னை காண்பதற்கு உள்ளம் உருகுகின்ற அன்பு உடையவனாகவும் இல்லை; நீ ஆண்டு அருளுவதற்கு  அடியேனும் தகுதியுடையனாக இல்லாதிருக்கும் இத் தன்மை அறிந்தும் என்னை ஆட்கொண்டாய்.  உன்னுடைய திருவடி எனக்கு உரியதே! அதைப் பிரிந்து வாழ முடியாது.

விளக்க உரை

  • இறைவன் திருவடிக்காட்சி பெற்றோர், அவரைப் பிரிந்து வாழ ஒருப்படார்.
  • ‘எனதே நின்பாதம்’ – இறைவன் திருவடியில் தமக்கு உள்ள உரிமை பற்றியது.
  • ‘பண்டு தோள் நோக்கி நகுவேன்’ – இறைவன் குருவாய் வந்த பொழுது அவனது தோற்றப் பொலிவைக் கண்டு மகிழ்ந்து இருந்தது அல்லாமல் ஞானத்தைப் பெற்று அன்பு செய்யவில்லை.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தெருள்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தெருள்

பொருள்

  • தெரிந்துகொள்
  • உணர்வுறு
  • தெளிவு பெறு
  • ஐயமற அறி
  • பிரசித்தமாகு
  • விளங்கு
  • அறிவின் தெளிவு
  • ஞானம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

அருட் சுடரே! உண்ணத்தக்கவாறு இருக்கும் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலை உடைய சிறந்த தவத்தினை உடையவர்களுக்கு அரசனே! உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் அழகியல் கலைகள் ஆனவனே! புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் சிறப்பாக விளங்குகின்றவனே! அறிவால் ஆராய்ந்து சிறப்பான இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே!  இருள் நிறைந்த இந்த உலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்க உரை

  • இறைவன் அடியார் மனத்தினை கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது பற்றிய பாடல்
  • பொருளுடைக் கலை – மெய்ந்நூல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது; `அவற்றின் பொருளாய் இருப்பவனே` என்று விளக்கப்பட்டுள்ளது. மெய்யை தானாக உணர்தல் வேண்டும் என்பதால் இது விலக்கப்பட்டுள்ளது. (கற்றறிந்தோர் விளக்கினால் பெரு மகிழ்வு)
  • இருள் இடம் – அறியாமையை உடைய இந்த உலகம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தண்ணம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தண்ணம்

பொருள்

  • பறை
  • மழு
  • குளிர்ச்சி
  • காடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஊழி அளக்க வல்லானும், உகப்பவர் உச்சி உள்ளானும்,
தாழ்இளஞ்செஞ்சடையானும், தண்ணம் ஆர் திண் கொடியானும்,
தோழியர் தூது இடையாட, தொழுது அடியார்கள் வணங்க,
ஆழி வளைக் கையினானும்—ஆரூர் அமர்ந்த அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

திருவாரூர் அமர்ந்த கடவுளானவன், ஊழிக்காலங்களைத் தன்னால் அளக்கவல்லவன்; தன்னை விரும்பும் அடியவர்கள் தலை உச்சியின்மேல் உள்ளவன்;  தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினை உடையவன்; ளிர்ச்சிபொருந்திய வலிமையும், உறுதியும் உடைய கொடியை உடையவன்; தோழிகள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல, அடியார்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க, சங்கையும், சக்கரத்தையும்  தாங்குகிற திருமாலால் வணங்கத்தக்கப்படுபவன்.

விளக்க உரை

  • சங்கையும், சக்கரத்தையும் தாங்குகிற திருமாலின் கையில் காட்சியளிப்பவன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. முன் வரிகளில் அடியார்கள் வணங்க என்பதாலும், பின் வரும் தொடர்களில் ‘கையினாலும்’ என உம்மைத் தொகை இருப்பதாலும் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
  • ஆழிவளைக்கையினான்: தியாகேசரை விடாத கையைக் குறித்தது; திருமாலாகி, அம்மாலுக்குரிய புவனத்தில் உலகுயிர்களைக் காப்பவன்.
  • “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன்” , “ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே’, ‘ஊழி வண்ணமும் ஆவர்’. ‘ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர்’,எனும் பாடல் வரிகளால் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மன்று

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மன்று

பொருள்

  • சபை
  • சிதம்பரத்துள்ள கனகசபை
  • நியாயசபை
  • பசுத்தொழு
  • பசு மந்தை
  • மரத்தடியுள்ள திண்ணைப் பொதுவிடம்
  • தோட்டத்தின் நடு
  • நாற்சந்தி
  • வாசனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திண்ணம் பழுத்த சிந்தையிலே
   தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே
   மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே
   தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன்
   இறையுந் தரியேன் தரியேனே.

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

எத்தகைய துன்பங்கட்கும் சலிப்புறாத, உறுதியான  மனத்தில் இனிமை செய்து அதன் தன்மை கெடாது இயல்பாகவே ஞானவொளி பெற்று என்றும் இடையறாது விளங்கும் சுய சோதி ஆனவனே, அழகு விளங்குமாறு  பழுத்த ஒப்பற்ற பழம் போன்றவனே, தில்லையம்பலத்தில் செம்மேனி அம்மானாய் ஞான ஒளி கொண்டு  விளங்குகின்ற மாணிக்க மணியின் சுடரொளியை உடையவனே, குளிர்ச்சி பொருந்திய சந்திரனிடத்தே நிலவும் அமுதத்தைத் தந்தருள்வாய்;  அதற்கு இதுவே சமயமாகும்; எண்ணத்தில் முதிர்வுடையவனகிய யான்,  உடலாலும், உள்ளத்தாலும் பெற்ற ஞானப் பேற்றால் மென்மை உற்று உலகியல் துன்பங்களைத் தாங்கும் சிறுமையைப் பொறாததால் இனிமேல் சிறியவனாகி இந்த உலகியல் தரும் துன்பங்களைத் தாங்க மாட்டேன்.

விளக்க உரை

  • தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் – யோக முறையில் சிரசின் மேல் துவாத சாந்தத்தில் சந்திரனாகத் தோன்றி ஞான அமுது தருகின்றான் என்பது பற்றியது
  • இதுவே தருணம் – அதனைப் பெறுதற்குரிய பக்குவத்தைத் தான் அடைந்து கூறல்

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அநாதி முக்தன் யார்?
சிவன்

சமூக ஊடகங்கள்