தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
விளக்க உரை
தேய்ந்து விளங்கக்கூடிய பிறைச்சந்திரனை அணிந்தவனே அல்லது தேய்ந்து விளங்கும் வெளிறிய அறிவு உடையவனே – சிலேடை
உன் தலை மேல் இருப்பவள் மிகவும் ஆர்ப்பாட்டம் செய்கிறாள். நீ அதைக் கவனிக்காமல் பார்வதியோடு இங்கு வீற்றிருக்கிறாய். உன் மனைவிக்கு பயந்ததாகவும் தெரியவில்லை. அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ? வேறு எந்தப் பெண்ணும் இவ்வாறு பொறுமையுடன் இருக்கமாட்டாள். உன் கைகளில் இருக்கும் மழு, ஆயுதம் கண்டு பயந்து உடன்பட்டு இருக்கிறாளோ, இந்த ரகசியத்தை எனக்குச் சொல் என்று சிலேடையாகப் பாடுகிறார்.
ஏந்து மங்கை – ஏந்தப் பெற்ற மங்கை; இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, பாலாம்பிகா – (வாலாம்பிகை) என்றனர் வட மொழியில்
இந்தனத்தின் எரி பாலின் நெய் பழத்தின் இரதம் எள்ளின் கண் எண்ணெயும்போல் எங்கும்உளன் இறைவன் வந்தனை செய்து எவ்விடத்தும் வழிபடவே அருளும் மலம்அறுப்போர் ஆன்மாவில் மலர் அடிஞா னத்தால் சிந்தனை செய்து அர்ச்சிக்க சிவன் உளத்தே தோன்றி தீ இரும்பை செய்வதுபோல் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத் தா னாக்கித்தன் உருவப் பரப்பெல்லாம் கொடுபோந்து பதிப்பன் இவன் பாலே,
சிவஞான சித்தியார்
கருத்துஉரை
விறகில் தீயினைப் போலவும், பாலில் நெய் போலவும், பழத்தில் சுவை போலவும், எள்ளினுள் எண்ணெயைப் போலவும் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். எனவே இறைவனை அகத்திலோ, புறத்திலோ வணங்கி வழிபட்டால் அவர்களுக்கு அருள்பாலிப்பான். ஆயினும் தங்களைப் பற்றியுள்ள மலம் முற்றிலும் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சிவபெருமானை அவனுடைய செந்தாமரை மலர்போன்ற திருவடி ஞானத்தினால் தங்கள் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளுவித்து அகவழிபாடு இயற்றுவார்கள். அத்தகைய அடியார்கட்கு இறைவன் மாயை பற்றி விளக்கி, தானே தோன்றி அவர்களது மலப்பற்றினை அறவே துடைத்து அருளுவான். நெருப்பில் இட்ட இரும்பானது நெருப்பின் தன்மையை பெறுவது போல இறைவனும் உயிரைத் தன் வண்ணம் ஆக்குவான். தனது பேரானந்தப் பெரும் செல்வம் முழுவதையும் உயிருக்கு அருளுவான்.
விளக்க உரை
அகவழிபாட்டின் சிறப்பு எடுத்து உரைத்தல் குறித்தது இப்பாடல்
பக்குவப் பட்ட உயிரின் வகையினைக் காலம் முன்வைத்து காட்டுவதற்காக 4 உவமைகள் கூறப்பட்டுள்ளன.
தீயானது தன்னில் இடப்பட்டவைகளின் மாசுகளை நீக்கி, தன் வண்ணமாக செய்து விடும். அது போல அகவழிபாடு கொண்ட ஆன்மாவை அதன் மலம் நீக்கி, தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எண் குணத்தான் தன் வண்ணமாக செய்து பர முக்தியைத் தருவான்.
சிவபெருமானே, பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஏத்தும் திருவொற்றியூரில் உள்ள சிவக்கரும்பே, சிவகதியை நல்கும் கருணைக் கடலே, வஞ்சம் புரியும் வினைகளுக்கு ஒரு கொள்கலம் போன்ற மனமுடைய யான் எல்லா வகையிலும் கொடியவனாவேன்; எளிமைக்கேற்ற புகலிடமென்று நினைந்து நின் திருக்கோயிலை அடைந்து நின் சன்னிதிக்கு முன்பு நிற்கின்றேன்; பொறுக்குமளவிற்கு அடங்காத பாவியெனக் கருதி இகழ்ந்து என்னை விலக்கினால் யான் என்ன செய்வேன்?
விளக்க உரை
மிக்க பெரும் பாவியென்று இகழ்ந்து ஒதுக்காது அருள் செய்தல் வேண்டுமென்று முறையிட்டவாறு
வஞ்சகவினை – ஈஸ்வர அனுபவமே பெரிது என்று எண்ணி உயிர்கள் பிறக்கும் போது கொண்ட நினைவு மறந்து மாயைக்கு உட்பட்டு வினைகளை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறத்தல் கண்டு இவ் வார்த்தை. வினைகள் நிரம்பப் பெற்றதால் உடல் கொள்கலன்
கதி தரும் கருணையங் கடலே – மாயைக்கு உட்பட்ட உயிர்கள் அனைத்தையும் அவற்றின் குறையைக் காணாமல் பக்குவப்படுத்தி அருள்கூர்ந்து சிவகதி தருதலால் பொருட்டு
அனைத்திலும் கொடியேன் – மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் கொடியவன் எனும் பொருள் பற்றி
‘பிரமனும் திருமாலும் புகழ்ந்து ஓதும்’ என்பதையும் ‘எஞ்சலில் அடங்காப் பாவி’ என்பதையும் ஒப்பு நோக்கி தெய்வங்களுக்கும், வினை கொண்ட உயிர்களுக்கும் ஒன்றாகவே அருள்கிறான் எனும் பொருள் பற்றி.
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்துதோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சோலைகளால் சூழப்பட்டு இருக்கும் பூவணத்தில் உறையும் எம் புனிதனார் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் , பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேம்பட்ட மறைகளை ஓதும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அகிய நால்வரருக்கு வேத நெறிகளைச் சொற்களால் விளக்காமல் மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், உடலைச் சுற்றி பாம்புகளை அணிந்த காட்சியும் கையினில் மான் ஏந்திய காட்சியும் , அறத்தின் உண்மையை உணராத காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் வெறுக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.
விளக்க உரை
ஐவகை – ஐந்து நிறம் . படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்கள் இந்த ஆற்றல்கள் ஒருங்கி நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்கும். இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் . – ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்‘ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் யாண்டும் சிந்திக்கத் தக்கது.
புறத்தில் உள்ள பஞ்சகோசமாகவும், அதனுள் உறையும் உயிராகவும், அவ்வாறு இல்லாத பொருள்களிலும் உறைபவனாக இருத்தலினால் எல்லா இடங்களிலும் அவனை வழிபடுக எனும் பொருளில். அஃதாவது சகலமும் ஈஸ்வரப் பொருள் பற்றியது.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவோம்.
கந்த புராணம் – ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்துஉரை
தாமரை மலரின் மீது ஆசனத்தைக் கொண்டவனாகிய தேவர் உலகம் சார்ந்தவராகிய பிரம்மா, ஈசனை மதித்திடால் கர்வம் கொண்ட பொழுதினில் ஒரு தலையை கிள்ளி அதனால் பெறப்படும் இரத்தினை கைகளில் கொண்டும் அவர்தம் கர்வத்தை அழித்தும் (அத்துணை கோபம் உடையவராக இருப்பினும்) உயிர்கள் மீதுபரிவும் உடையவராகிய வடுகனைப் போற்றுவோம்.
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே.
தாயுமானவர்
கருத்துஉரை
பொன்னும், அந்த பொருளால் வாழ துணையாக நிற்கும் மாதரும், அவர்களோடு கூடிவாழும்வாழ்க்கைக்குநிலைக்களமாகியஇப்பூமியும்நிலையானபொருள்கள்என்றுசிறிதும்எண்ணமாட்டேன்; எளியவன்ஆயினும்என்னைக்கருதிஎன்னைநாடிவந்துஎனக்குஅருள்செய்தஇன்னுயிர்த்தலைவனாகியஉன்னையேஇடையறாதுஉள்ளன்போடுஎண்ணுவன்; உன்னைவிட்டுநீங்காதஉன்திருவருளாகியதூயநிலையாயுள்ளபெருவெளிஒளியினைதனியேஇருந்துபெரிதும்சிந்திப்பேன்.
என்னை நாடிய – அருளார்களை இறை பற்றுதல் ஞானத்தின் உச்சநிலை. ‘தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்’ எனும் மாணிக்க வாசகரின் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கவை.
தன்னந் தனியனே – மாயைக்கும் கர்மாக்களும் உட்பட்ட மனிதர்கள் வாழ்வு வினை வழியது. வினையை கடந்து போகையில் எவரும் துணை வரார் எனும் பொருளில்.
இறைவன் ‘என்னை நாடிய’ என்ற பின்னும் ‘உன்னை நாடுவன்’ என்பது ஏன்? – ஈசன் அருள் புரிய எண்ணினாலும், வைராக்கியம் கொண்டு கர்மவினைகளை விலக்கி மாயையை விலக்க வேண்டும்.
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
(தோலில் ஏற்படும்) சுருக்கம்
குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
கொம்பு, தந்தம், எயிறு
மரக்கொம்பு
வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
கொம்புக் குறியீடு (கெ,கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல் மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
சிவவாக்கியர்
கருத்துஉரை
வேங்கையை பிடிக்க ஆங்காங்கே ஆட்டினை கட்டி வைத்து பிடிப்பது போல் எனக்கு செல்வத்தைக் காட்டி எனது மதியினை மயக்குதல் ஆகுமோ? வளைந்த தந்தம் உடைய யானையை கொன்று உரித்து அதனை தோலாக போர்த்திக் கொண்ட வையகத்தின் அரசனே, வீடு பேறாகிய முக்தி எனில் என்னவென்று காட்டி என்னை எனக்கு வெளிப்படுத்துவாயாக.
விளக்க உரை
‘மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ‘ என்று சில இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மூலத்தில் அவ்வாறு இல்லாததால் ‘ மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ’ என்பதே சரியான பாடல் வரியாகும்.
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்; ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின் வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே
சிவவாக்கியர்
கருத்துஉரை
செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.
விளக்க உரை
மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)
ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும் ஒரு வாரணத்தின் தாள்கள் உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே இரவுபகல் உணரவோர் சிந்தைத் திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே.
சிவஞானசித்தியார் – பரபக்கம் பாடல்
கருத்துஉரை
ஒற்றைக் கொம்பினை உடையவன்; இரு காதுகளை உடையவன்; கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதயானையின் மதநீர் கொண்டவன்; நான்காவதான தொங்கும் வாயினை உடையவன்; ஐந்து கைகளை உடையவன்; வளைந்த ஓடும் ஆறு(கங்கை) பிறை நிலவு, கொன்றை மாலை சூடிகொண்டிருக்கும், நீண்ட தாழ் சடையுடையவன் நமக்கு தந்தருளிய ஒருவனாகிய யானை முகத்தினை உடையவரின் பாதங்களை இரவு பகல் பாராது பேரன்போடு வணங்கி உணர்வோரின் சிந்தைத் தரும் குற்றத்தை நீக்கும் பிரம்மனும், திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளாக நின்று உணர்த்தி தருபவன்.
இனி வரும் பிறவிகளை நீக்கும் பெரியோனும், தென் திசை அரசனும், திருப்பெருந்துறையை உடையவனும், பெருங் கருணையாளனும், வரும் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாய் இருப்பவனும் ஆகிய சிவபெருமான், நான் முன்செய்தவினைகள் இரண்டையும் வேரறுத்து எனக்கு எதிரே நின்றான்.
விளக்க உரை
சஞ்சீதம் எனும் இறந்த கால கர்மாக்கள், பிரார்ப்தம் எனும் நிகழ் கால கர்மாக்கள் ஆகியவற்றை அழித்துவிட்டான். அவ்வாறு அழித்து என் முன் நின்றான் என்பதில் இருந்து ஆகாமியம் எனும் எதிர்கால கர்மாக்கள் அழிந்து விட்டன என்பது மறை பொருள். (நல்வினை, தீவினை என்று தவறான பொருள் கொண்டு இடர்படுவாரும் உண்டு).
எல்லாப் பக்கங்களிலும் கடல் உடையதாகவும் மற்றும் பெரிய மலைகளால் சூழப்பட்ட இலங்கை நகரத்து அரசனாகிய இராவணனை அவன் கர்வ எண்ணம் அழியுமாறு தனது திருவிரலால் அழுத்தி உதைத்தலாகிய செயலைச்செய்து அவன் செருக்கை அடக்கி மகிழ்ந்தவர் சிவமூர்த்தி. அவ்வாறான பெரிய கடலால் சூழப்பட்ட இந்நில உலகத்தவர் நந்தி என்று பெயரிட்டு வழிபடும், பெரிய மூங்கில் காடுகள் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானுக்கு, அடியேன் அடிமையாகிக் (பிறவித் தளைகளில் இருந்து) தப்பினேன்.
பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.
பதம் பிரித்து
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பிய அடியவனாக யான் துடித்தேன் அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன் அவர்களது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழியும்படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.
மனிதர்களின் கர்ம பலன்களை அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு துன்பம் செய்பவன் நன்மை அடையும் வகை எது? அது ஒரு ஜென்மத்தில் உண்டாகுமா அல்லது பல ஜென்மாக்களில் உண்டாகுமா?
சிவன்
பிறர் நன்மைக்காக அவர்களுக்கு துன்பத்தை செய்பவன் சுகம் பெறுவான். அரசன் ஜனங்களை தண்டித்து, பயமுறுத்தி நல்வழிப்படுத்துதல், வழி தவறி நடக்கும் சீடர்களை தண்டித்து ஆச்சாரியன் நல்வழிப்படுத்துதல், வைத்தியம் செய்பவன் என இவ்வாறு நல் எண்ணத்துடன் துன்பம் செய்பவன் சுவர்க்கம் அடைவான். அயோக்கியனான ஒருவன் கொல்லப்பட்டால் மற்றவர்கள் சுகப்படுவர் எனில் அதில் தர்மம் மட்டுமே இருக்கும். பாவம் இருப்பதில்லை.
உமை
இவ்வுலகில் நான்கு வகையான உயிர்கள் காணப்படுகின்றன. அவைகளின் அறிவு இயற்கையானதா அல்லது உண்டாக்கப்படுவதா?
சிவன்
உலகம் தாவரம், ஜங்கமம் என்று இருவகைப் பொருளாக கூறப்படுகிறது. அவற்றில் பிராணிகள் நான்கு வகைகளில் உற்பத்தி ஆகின்றன.
பெயர்
ஆத்மா / அறிவு
இனங்கள்
உண்டாகும் முறை
1
உத்பிஜ்ஜம்
ஸ்பரிசம் எனும் ஒர் அறிவு
நிலம் + நீர்
2
ஸ்வேதஜம்
ஸ்பரிசம்,பார்வை எனும் இரு அறிவு
கொசு, பேன்
வெப்பம்
3
அண்டஜம்
ஐந்து அறிவு
பறவை
வீர்யம் + நீர்
4
ஜராயுஜங்கள்
ஐந்து அறிவு
பசு, காட்டுமிருகங்கள், மனிதர்கள்
சுக்லம் + சோணிதம்
இரவில் உண்டாகும் இருள் ஒளியால் அழிந்து போகும். தேக இருள் மாயையால் சூழப் பட்டிருப்பதால் உலக ஒளிகள் அனைத்தும் சேர்ந்தாலும் விலகாது.தேக இருளைப் போக்க பிரம்மர் பெரும் தவம் செய்து உலக நன்மையின் பொருட்டு வேதம், வேதாகமம், உபநிஷத்துகள் ஆகியவற்றைப் பெற்று தேக இருளை ஒழித்தார். இது நன்மை பயக்கும்; இது தீமை பயக்கும் என்பதை சாஸ்திரங்கள் தெரிவிக்கா விடில் உலகினில் மனிதர்களும், விலங்குகளும் வேற்றுமை இல்லாமல் இருப்பார்கள். எனவே உயிர்களுக்கு ஞானத்தைவிட சிறந்தது எதுவும் இல்லை. பிறக்கும் போது பிறவி கொண்டு பிறந்த ஞானம் முதன்மையானது. கற்பிக்கப்படும் ஞானம் இரண்டாவதானது. சாத்திரங்களைக் கற்றப்பின் ஒருவன் பிறவி பயன் பெற்றவனாகிறான். அவன் தேவதை போல் மனிதர்களுக்குள் பிரகாசம் உடையவன் ஆகிறான். அவன் பெற்ற அந்த ஞானம் காமம், குரோதம், பயம், கர்வம், விபரீத ஞானம் இவற்றை மேகங்களை காற்று விலக்குவது போல் ஒதுக்குகிறது. இவர்கள் செய்யும் சிறிய தர்மமும் பெரிதாகும். ஞானமுள்ளவன் பொருள்களின் உயர்வுதாழ்வுகளையும், உண்மையையும் அறிந்தவன் ஆகிறான். இவ்வாறான சாத்திர ஞானத்தின் பலன்களை சொன்னேன்.
உமை
சிலர் முன் ஜென்மத்தின் நினைவுகளை அறிந்தவர்களாகப் பிறக்கிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
திடீரென இறந்த மனிதர்கள் உடனே பிறக்கும் போது முந்தய ஜன்மத்தின் நினைவு சிறிது இருக்கும். அவர்கள் உலகில் பிறந்து அவ்வாறான ஞானம் கொண்டு இருக்கிறார். அவர்கள் வளர வளர அந்த அறிவு கனவு போல் மறைந்து விடுகிறது.
உமை
சிலர் இறந்தபிறகும் அதே தேகத்தை அடைகிறார்களே, அது எவ்வாறு?
சிவன்
எம தூதர்கள், உயிர்கள் அதிக இருக்கும் போது அவர்களால் கொல்லப்பட்டு பகுத்தறிவின்றி தான் கொண்டு செல்லும் உயிர் விடுத்து மற்றொரு உயிரை கொண்டு செல்கின்றனர். எமன் ஒருவன் மட்டுமே ஒருவனது புண்ணிய பாவங்களை அறிந்திருக்கிறான். எனவே அவர்கள் ஸ்ம்யமனி எனும் எமன் இடத்திற்குச் சென்று அவரால் கர்மங்களை அனுபவிப்பதற்காக திரும்ப அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கர்மம் முடியும் வரை எமன் இருப்பிடம் செல்ல இயலாது.
உமை
மனிதர்கள் தூங்கிய உடன் கனவு காண்கின்றனர், இது இயற்கையா? அல்லது வேறு காரணமா?
சிவன்
தூங்குபவர்களின் சஞ்சரிப்பதான மனம் நடந்ததையும் வருவதையும் அறிகிறது. எனவே கனவு வருவதைக் குறிப்பதாக இருக்கும்.
உமை
உலகில் செய்யப்படும் தொழில்கள் யாவும் தெய்வத்தாலே நடக்கிறது என சிலரும், செய்யப்படும் முயற்சி முன்வைத்து முயற்சியால் நடக்கிறது என சிலரும் நிச்சயிக்கின்றனர். இந்த காரணத்தால் மனம் சந்தேகம் கொள்கிறது. இதன் காரணத்தை விளக்குங்கள்.
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்துஉரை
அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.
விளக்கஉரை
இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா, அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில் இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும் விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.
விளக்கஉரை
எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.
தில்லையில் நடம்பயிலும் சிவனே! நின்ற இடத்தும், அமர்ந்த இடத்தும், கிடந்த இடத்தும் நினைந்து, எழுந்த இடத்தில் தொழுகின்ற அடியவனாகிய நான், மனம் பொருந்தி ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்கவிடாமல் கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கவில்லை. இவ்வாறு நீ செய்யும் இச்செயல் உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமா?
விளக்கஉரை
கன்றும், தாய்ப்பசுவும் என்றும் பிரியாது. ஆகவே நீ அவ்வாறு பிரியாது நிற்பாய் எனும் பொருள் பற்றி.
திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.