ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – மாலாதல்
பொருள்
- மிகப் பற்றுக் கொள்ளுதல்
- மயங்குதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆமயன் மாலரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமய னாளுந் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.
திருமந்திரம் – நான்காம் தந்திரம் – திருமூலர்
கருத்து உரை
திருவருள் ஆணைபெற்றுத் தொழில்புரியும் பிரம்மன், மால், உருத்திரன், மகேசன் என்னும் இவர்கள் விரும்பும் நிலையினை. அருளவும் மிகவும் சிறப்புத் தன்மை பிரணவம் பொருந்திய ஒன்பது ஆற்றல்களும் ஒன்றுகூடவும், தீரா இன்பவடிவினனாகிய சிவபெருமான் திருநோக்கம் கொண்டனன். அத்தருணத்தில் இன்பமயமான ஆன்மா ‘தென்னாதெனா’ என ஒலித்து தேனுண்ணவந்து மொய்க்கும் ஆருயிர் வண்டினங்களின் நிலைக்களமாகிய ஒலிமெய் வடிவம் எய்தியது.
விளக்க உரை
- அயன் மால் அரன் – மெய் (சுத்தவித்தை) யின்கண் உறைவோர். பிரம்மன் – மூலாதாரம், மால் – சுவாதிட்டானம், உருத்திரன் – மணிபூரகம், மகேசன் – விசுக்தி
- மேற்கூறிய நிலை முதல் துவாத சாந்தம் வரை (9 நிலைகள்)
- ஆன்மாவானது தேன் உண்டுகளிக்கும் ரீங்கார சப்தத்துடன் விளங்கும்.