ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – நாடுதல்
பொருள்
- சிந்தித்தல்
- தேடுதல்
- ஆராய்தல்
- விரும்புதல்
- தெரிதல்
- ஒத்தல்
- அளத்தல்
- கிட்டுதல்
- நினைத்தல்
- மோப்பம்பிடித்தல்
- அளவு படுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவன் தன்னந் தனியனே.
தாயுமானவர்
கருத்து உரை
பொன்னும், அந்த பொருளால் வாழ துணையாக நிற்கும் மாதரும், அவர்களோடு கூடிவாழும் வாழ்க்கைக்கு நிலைக்களமாகிய இப்பூமியும் நிலையான பொருள்கள் என்று சிறிதும் எண்ண மாட்டேன்; எளியவன் ஆயினும் என்னைக் கருதி என்னை நாடி வந்து எனக்கு அருள் செய்த இன்னுயிர்த்தலைவனாகிய உன்னையே இடையறாது உள்ளன்போடு எண்ணுவன்; உன்னைவிட்டு நீங்காத உன் திருவருளாகிய தூயநிலையாயுள்ள பெருவெளி ஒளியினை தனியே இருந்து பெரிதும் சிந்திப்பேன்.
விளக்க உரை
- பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் – (மண், பொன், பெண்) ஆசைகள் விலக்கி எனும்பொருளில்
- என்னை நாடிய – அருளார்களை இறை பற்றுதல் ஞானத்தின் உச்சநிலை. ‘தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்’ எனும் மாணிக்க வாசகரின் வரிகள் யாண்டும் சிந்திக்கத் தக்கவை.
- தன்னந் தனியனே – மாயைக்கும் கர்மாக்களும் உட்பட்ட மனிதர்கள் வாழ்வு வினை வழியது. வினையை கடந்து போகையில் எவரும் துணை வரார் எனும் பொருளில்.
- இறைவன் ‘என்னை நாடிய’ என்ற பின்னும் ‘உன்னை நாடுவன்’ என்பது ஏன்? – ஈசன் அருள் புரிய எண்ணினாலும், வைராக்கியம் கொண்டு கர்மவினைகளை விலக்கி மாயையை விலக்க வேண்டும்.