ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – செய்ய
பொருள்
- சிவந்த
- செப்பமான
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டனன்;
ஐயன் வந்து என்னுளம் அமர்ந்து கோயில் கொண்டபின்
வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே
சிவவாக்கியர்
கருத்து உரை
செம்மையான தேங்காய் உள்ளே இளநீர் சேரும் காரணம் போல், ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அந்த ஐயனானவன் என் உள்ளத்தில் கோயிலில் இருப்பது போல் அமர்ந்து கொண்டப் பின் இந்த உலகத்து மனிதர்களிடம் நான் வாய் திறந்து பேசுவது இல்லை.
விளக்க உரை
- மரத்தில் காய் எத்தனை உயரத்தில் இருந்தாலும், நீரானது மேலே சென்று இயல்பாக முயற்சிகள் இல்லாமல் அடைந்து விடும். அதுபோல் இயல்பாக என்னுள் ஐயன் அமர்ந்து கொண்டான்.
- வையகத்து மாந்தர்முன் வாய்திறப்ப தில்லையே – ஆகையால் மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் மட்டுமே பேசுகிறேன்.
- மாயைக்கு உட்படாத மனிதர்களிடம் / தேவர்களிடம் உரைத்த பாடல்களை மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் கேட்டு இப்பாடல்களை எழுதி இருக்கலாம். (இது என் தனிக் கருத்து)