ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – கோடு
பொருள்
- ஒலிப்பு
- (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
- (தோலில் ஏற்படும்) சுருக்கம்
- குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
- கொம்பு, தந்தம், எயிறு
- மரக்கொம்பு
- வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
- கொம்புக் குறியீடு (கெ,கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
சிவவாக்கியர்
கருத்து உரை
வேங்கையை பிடிக்க ஆங்காங்கே ஆட்டினை கட்டி வைத்து பிடிப்பது போல் எனக்கு செல்வத்தைக் காட்டி எனது மதியினை மயக்குதல் ஆகுமோ? வளைந்த தந்தம் உடைய யானையை கொன்று உரித்து அதனை தோலாக போர்த்திக் கொண்ட வையகத்தின் அரசனே, வீடு பேறாகிய முக்தி எனில் என்னவென்று காட்டி என்னை எனக்கு வெளிப்படுத்துவாயாக.
விளக்க உரை
- ‘மாடுகாட்டி என்னைநீ மனைப்படுத்தலாகுமோ‘ என்று சில இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மூலத்தில் அவ்வாறு இல்லாததால் ‘ மாடுகாட்டி என்னைநீ மதிமயக்க லாகுமோ’ என்பதே சரியான பாடல் வரியாகும்.