ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஈண்டு
பொருள்
- இங்கு
- இவ்விடத்தில்
- இம்மையில்
- இவ்வாறு
- இப்பொழுது
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்
திரு அருட்பா – 6ம் திருமுறை – வள்ளலார்
கருத்து உரை
அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, உடல் வளர்ச்சியால் தடித்த மகன் செய்த தவறு செய்வது கண்டு தந்தை அவனை அடித்தால், உடனே தாய் அவ்விடம் போய் தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடித்தால், தன் கையில் பற்றிக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை உடையனாக தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, எனக்கு தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உன்னுடைய அருளால் என்னை அணைத்து ஆதரிக்க வேண்டும்.
விளக்க உரை
- இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன் எனும் பொருளில்
- தடித்த மகன் – உடல் வளர்ச்சி மட்டும் பெற்ற ஒருவன் எனும் பொருளில்.( புற விஷயங்களில் மட்டும் வளர்ச்சி பெற்ற ஒருவன்)
- அம்மைஅப்பன் – சிவன் – அம்மையும் அப்பனுமாகி (இரண்டாகவும்) எனும் பொருளில்
- பிறவி ஆன்மாக்கள் மீது தாயும் தந்தையும் ஆகிய அம்மையப்பன் ஒத்த அன்புடையவர்.
- அடித்தல் துன்ப நுகர்ச்சி, அணைத்தல் இன்ப நுகர்ச்சி. இரண்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் ஒரு பகுதியை கண்ட எனக்கு மறுபகுதியை காணச் செய் எனும் பொருளில்