ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – துஞ்சல்
பொருள்
- மலரடி சேர்தல்
- காலமாதல்
- காலப்போக்கு
- காலத்தின் நடை
- இயற்கையான மரணம்;மூப்பு இறப்பு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
தேவாரம் – 3ம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் திருவைந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சகத் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காப்பாற்றியது திருவைந்தெழுத்தே.
விளக்க உரை
- உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மாயையால் உலகில் வாழ்வு கொள்ளுதல் என்பது உறங்குதலுக்கு சமமாகவும், ஞான மார்க்கத்தால் உயர் நிலை அடைந்த பிறகு விழிப்பு நிலை என்பதும் பொதுக்கருத்து. (ஆன்றோரும், இறை அன்பர்களும் கருத்துரைக்க). ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் குறள் யாண்டும் சிந்திக்கத்தக்கது.
- திருவைந்தெழுத்தை ஓதுவார் எமனால் துன்பப்படார் என்பது கருத்து.