ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – இலாடம்
பொருள்
- நெற்றி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
எவராக இருப்பினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், அந்த திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா, அவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா’ என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இருக்க வேண்டும். இறைவன் வேறு, அடியவர் வேறு எனும் இருவேறு மனநிலையில் இல்லாமல் ஒரே மன நிலையில் இறைவனிடத்தில் செய்யும் செயல்களையே அவ்வாறான அடியவரிடத்தும் விரும்பிச் செய்ய வேண்டும். இவ்வாறு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் சிவனைக் காணலாம்.
விளக்க உரை
- எவரேனும் – எவ்வகையானக் குற்றமுடையராயினும்.
- திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்`. அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது குறித்தது. திருவேடம் தொழுதல் சிறந்து எனும் பொருள் பற்றி.