வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்
குமரகுருபரர்
கருத்து உரை
வளரத்துவங்குகையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கிலானது வளர்ந்த பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமாக கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். அதுபோல இளமையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும், கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விள்ளுதல்
பொருள்
மலர்தல்
உடைதல்
வெடித்தல்
பிளத்தல்
பகைத்தல்
மாறுபடுதல்
தெளிவாதல்
நீங்குதல்
சொல்லுதல்
வெளிப்படுத்துதல்
வாய் முதலியன திறத்தல்
புதிர் முதலியன விடுத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு அரிதான சிவநாமம் விள்ளு – சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு
கஞ்சமலைச் சித்தர்
கருத்து உரை
முக்திக்கு உரித்தான பரம்பொருளை மனதால் நினை; மயக்கம் தரும் மாயை கொண்ட பிரபஞ்சத்தில் மயக்கத்தை விலக்கு, குருவால் உபதேசம் செய்யப்பட்ட கிடைப்பதற்கு அரிய சிவநாமத்தை தெளிவாக உச்சரி. அன்பு கொண்டு சிவன் அடியார்களுக்கு பணிவிடை செய். இவைகள் முத்திக்கான வழிமுறைகளில் சில.
ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
விழாக்கள்
பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள்
நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 14 வது தலம்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 1
பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!
பாடியவர் சுந்தரர்
திருமுறை ஏழாம்
பதிக எண் 1
திருமுறை எண் 4
இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பெரும்பாரக்கோடு
பொருள்
வயிற்றினையும் இடுப்பையும் பிரிக்கும் வயிற்றுக்கு கீழே இருக்கும் கோடு.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
விநாயகர் அகவல் – ஔவையார்
கருத்து உரை
வினாயகர் அகவல் முழுவதும் யோக மார்க்கங்களுடன் தொடர்பு உடையது. அது தன்னுள் பல சித்த பரிபாஷைகளை உள்ளடக்கியது. உடலில் பஞ்ச பூதங்களில் தலையாயதான நெருப்பு சோதியாக மெய்ப்பொருளாக இருக்கிறது. பேழை என்பது வினைகளின் மற்றும் மும்மலங்களின் வடிவமாக பானையை ஒத்து இருக்கிறது. வினைகளின் காரணமாக மாயைகளுக்கு உட்பட்டு அலையும் உயிர்கள் மூலாதாரத்தின் இருப்பிடத்தை உணர விடாமல் மாயை எனும் பாரம் தடுக்கிறது. எவ்வாறு காற்று ஊதுகுழல் வழியாக செலுத்தப் பட்டு குமுட்டி அடுப்பில் அக்கினி உருவாகிறதோ அது போல வாசியின் உதவியுடன் மூலாதாரத்தை உணர்ந்தால் வாசியானது மேலெழும்பி மெய்ப்பொருள் ஸ்தானத்தையடைந்து அங்கு நிலைகொண்ட அக்கினியை ஒளிர வைக்கும். அக்கினி ஒளிர்வின் அசைவே சித்தர்கள் பரிபாசையில் சோதிநடனம் எனப்படும். மலங்களான பாரங்கள் மூலாதார ஸ்தானத்தை அறியவிடாது நம்மை பொய்மையில் ஆழ்த்தும். இப்பிரிவினையைக் குறிப்பதே பெரும்பாரக் கோடு.
விளக்க உரை
‘மிகவும் கனமான, உறுதிமிக்க ஒற்றை தந்தம்’ என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியத்துக்கு உரிய மூவகைக் காரணங்கள் எவை எவை? முதற் காரணம், துணைக் காரணம், நிமித்தக் காரணம்
கருத்துரைக்கு விளக்கம் அளித்த மதனா அண்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
(குரு நாதரின் உத்தரவிற்கு பிறவே இப்பாடலுக்கு இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)
எம்முடைய பெருமானே! முத்துப் போன்றவனே! மாணிக்கத்தைப் போன்றவனே! எம் தலைவனே! ‘இது முறையோ’ என்று எவ்வாறாயினும் நான் உன்னைப் பற்றித் தொடர்ந்து இனிமேல் பிரிந்திருக்கப் பொறுக்க இயலாதவன் ஆனேன். ஆதலின் உன் மேல் பற்று இல்லாதவனாயினும், உன்னை வணங்குதல் எனும் தொழிலை இல்லாதவனாயினும், உனது மேலான பசுமையான கழலை அணிந்த திருவடிகளைக் காண்பதற்கு விருப்பம் இல்லாதவனாயினும், உன்னைத் துதித்தலை செய்யாதவன் ஆயினும் என் பிறவியைப் போக்கி அருள்வாயாக.
விளக்க உரை
‘நின் திருவடிக்கு அன்பு இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சியேகம்பனே!’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகள் இங்கு ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
எங்கும் விரிந்து எதையும் தாங்கும் வலிமை பெற்றவனே, இமைத்தல் எனும் தொழில் இல்லா தேவர்கள் சதா தியானம் செய்யும் பிரவண சொரூபமானவனே, விண்ணுலகத்தைக் காப்பவனே, தன் முயற்சியில் கிடைப்பதற்கு அரிதாகிய மெய்யுணர்வாகிய சிவஞானத்தை, அடியவன் ஆகிய எனக்கு, நீ வந்து உரியதாகும்படி எனக்கு உபதேசம் செய்த பெருமையை என்னவென்று சொல்வது?
சாம வேதத்தின் மகாவாக்கிய தத்துவம் ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ . இதுவே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. இது மாயைக்கு உட்பட்ட குற்றங்கள் நீங்கப்பெற்று சீவன் சிவமாதலையே குறிப்பதாகும். நீ, அது ஆகிய பேதம் உடைய இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, ஒன்றாய் சேருகின்ற இயைபினால் ஒன்றேயாகின்றன. இது மகாவாக்கியம் வேதாந்தம் . எனவே, இதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் வேதாந்த மகாவாக்கியந்தான்` என்றும் சொல்லலாம்.
விளக்க உரை
சித்தாந்த மகாவாக்கியமாகிய `சிவத்துவமசி` என்பது திருவைந்தெழுத்தே ஆகும். இதும் இப்பொருளை தரும்
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
கருத்து உரை
திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! அழகில் தனக்கு நிகராக தன்னைத் தவிர ஒருவரையும் சொல்ல முடியாத மன்மதனை, நெற்றிக் கண்ணைத் திறந்து, நெருப்புத் தோன்றச் செய்து விழியால் அவனுடைய வடிவம் அழியுமாறு செய்தவனே! கொடிய வினைகளால் துன்பம் நெருப்பை போல வந்து தாக்கினாலும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் எனது நா வேறொன்றையும் கூறாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ? உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சற்காரியவாதம் என்பது என்ன? இல்லாதது தோன்றாது. உள்ளது அழியாதது எனும் கொள்கை
சூரியனைப் போல் உருவமின்றி, அரூபம் இன்றி, சாத்விகம், இராட்சதம், மற்றும் தாமச குணம் இன்றி, மனிதப் பிறவியில் ஆடவர்களுக்கு தோன்றும் கடைநிலை கேட்டைக் குறிக்கும் குணங்களாகிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகியவை மட்டும் இல்லாமல், ஆணவ மலம், மாயை மலம், கண்ம மலம் ஆகிய மலங்களும் இல்லாமல், உயிரானது உடலில் எவரும் அறியாமல் அடங்கி இருப்பது போல், மௌனமாகிய மோன வடிவத்தில் எல்லா உயிரிலும் உயிராகி நின்று முதுமை இல்லாமல், இளமை இல்லாமல், அதன் காரணங்களாகிய பிறப்பு இறப்பு இல்லாமல், ஞான உருவாக எங்கும் நிறைந்து நிற்கும் நாதனின் உருவம் இவ்வாறானது என்று கூறுவதற்கு இயலாதவாறு இருக்கிறது.
விளக்க உரை
அகத்தியர், சிவ லட்சணம் பற்றி கூறும் பாடல்
இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள் எனும் திருக்குறள் விளக்கம் இவ்விடம் பொருந்தாது, ஏனெனில் முதலில் சூரியனின் இரண்டு ரூபங்கள் விளக்கம் தரப்பட்டுள்ளன. ஆனிய மலம் நான்கு என்று எண்ணிக்கை நான்காக விளக்கப்பட்டுள்ளதால் சொற்குணங்கள் மூன்று என்று எண்ணிக்கை அடிப்படையில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
எண்குணங்கள் ஆகிய தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகியவை இவற்றில் பொருந்தி நிற்பது அறிக.
அருணகிரிநாதர் அருளிய ‘தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா’ தொடங்கும் கந்தர் அலங்கார பாடலில் மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தில் ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. ஒன்றும் அற்ற ஒன்று எனும் பொருள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சைவ சித்தாந்தக் கொள்கைகள் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன? சற்காரியவாதம்
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
என்னை உடையவனாக கொண்டவனே, நமக்கு இறைவன் அருள் புரியாது இருக்க மாட்டான் என்று எண்ணி உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பல காலம் கூறி, அதன் காரணமாக கண்களில் நீர் பெருகி, வாயால் குழறிய வார்த்தையால் வாழ்த்தி, உடலால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்து தளர்வுற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள்புரிவாயாக.
விளக்க உரை
இறைவனை வழிபடும் முறையும், இறை அனுபவமும் குறித்தது இப்பாடல்
நாமம் பிதற்றுதல், கண்கள் நீர் பெருதல், வாயால் குழறிறிய வார்த்தையால் வாழ்த்துதல் – இறை அனுபவங்கள்
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
உமாபதி சிவம் குறித்த ஆறு அநாதிப் பொருள்கள் எவை? இறை, உயிர், ஆணவம், மூலகன்மம்,சுத்த மாயை, அசுத்த மாயை
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே, வாள் போன்ற கண்களை உடைய மடவாளாகிய என் இல்லாளுடன் வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே குண்டையூர் கிழார் மூலமாகத் யான் நெல்லை பெற்றேன் . அவைகளை அவளிடத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எப்பொழுதும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்கும் தொழிலை உடையவனானதால் வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவருக்கேனும் கட்டளையிட்டு அருளவேண்டும்!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அநாதிப் பொருள்களை ஆறு என கணக்கிட்டவர் உமாபதி சிவம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – மலங்குதல்
பொருள்
சாய்ந்துவிழுதல்
மருளுதல்
பரவசமாதல்
மாறுபடுதல்
நிலையழிதல்
வருந்துதல்
தாக்கப்படுதல்
சந்தேகமடைதல்
தயங்குதல்
கலத்தல்
நெருங்குதல்
கைகலத்தல்
அறிவு கெடுதல்
கலக்கமுறுதல்
உணர்ச்சியிழத்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி மலங்கெ டுத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவ தறிந்திலேன் இலங்கு கின்றநின் சேவ டிகள் இரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காமலே வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே.
தேவாரம் – 8ம் திருமுறை – மாணிக்கவாசகர்
கருத்து உரை
எனது கண்ணீரை துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! வினைகளின் காரணமாக நான் உன்னை விட்டு நீங்கினேன்; அதனால் விளையும் காரியத்தை அறிந்திருக்கவில்லை; உன் திருவடிகளை வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; என்னே உன் பெருங்கருணை!
அயன் முதற்கொண்டு ஐவருடல் உயிருஞ் சத்தி ஆதியந்த சிவனாரும் உயிருக்குயிராய் நின்று தயவுபெற வெடுத்துவுயிர் ஆண்பெண் கோடிச் சங்கையில்லா மூப்பிளமை சாக்காடன்றி ஐயம்பெறவே வொருகோடி காலம் வாழ்ந்து தீர்க்கமுடன் இருக்கையிலே மைந்தாகேளு நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா நமை வணங்க அனுக்கிரகஞ் செய் என்றாரே
அகத்தியர் சௌமிய சாகரம்
கருத்து உரை
உடல் என்பது பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என்ற ஐந்து தெய்வங்களின் கலவை; அதனுள் உறையும் உயிர் சக்தி; அந்த உயிருக்கு உயிராக இருப்பது சிவன்; இவ்வாறு உடலும் உயிருமான வஸ்து கணக்கற்ற கோடி ஆண்டுகள் மாறுபாடு இல்லாதவாறும், மூப்பு, இளமை மற்றும் சாக்காடு இன்றியும் இருந்தது; அப்போது மேன்மை பெறுவதற்காக சிவ சக்தியிடம் நமை வணங்க அனுகிரகம் செய் என்று கூறினார் என்றும் இப்பாடலில் சொல்கிறார் அகத்தியர்.
விளக்க உரை
நமது உடலில் இந்த அட்சரங்களின் இருப்பிடம் – ந எனும் எழுத்து இரு கால்களையும், ம எனும் எழுத்து வயிற்றினையும் குறிக்கும்.
பஞ்சாட்சர மந்திரத்தில் ந எனும் எழுத்து பிரம்மனையும், ம எனும் எழுத்து விஷ்ணுவையும் குறிப்பதாகும். அதோடு பிரம்மன் விழிப்புநிலையையும், விஷ்ணு கனவுநிலையையும் குறிக்கின்றனர். இதை கடக்க வேணும் என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (தூங்காமல் தூங்கி கிடப்பது எக்காலம் எனும் வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கவை.
இச் சொல் நம்மை சிவ சக்தியை வணங்க அருள் செய் என்று கூறுவதாகவும் நம எனப்படும் மாயையை போற்றச் செய் என்று கூறுவதாகவும் பொருள் கொள்வார் உளர்.
அஃதாவது மாயையை வழிபடுவது என்பது அதனை செயலாற்ற அனுமதித்து அசுத்த மாயையை செயல்படச் செய்து உலகை இயங்கச் செய்யவேண்டும் என்றும் பொருள் கொள்வார் உளர்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அநாதி என்பது என்ன? தோற்றம் என்பதை கண்டறியா முடியாதது
(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
சிவனது திருவடிகளையே சேர்ந்தேன்; எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது. அதனால் யான் இனி வர கூடியதாக இருக்கும் பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனும் அகப்பகை ஆறினையும் விலக்கி அடுத்த நிலைக்கு செல்லத் துணிந்தேன். உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டும் அதன் இழிவை அறிந்தும் இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன். எனக்கு உரியதானது என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த உடலாகிய இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன். குற்றங்களையே விளைவிக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன். ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தவனாகி விட்டேன்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
பதி, பசு, பாசம் என்பதை எவ்வாறு தமிழில் குறிக்கலாம்? இறை, உயிர், தளை
திரிபுரங்கள் எரியுமாறு செய்தவனும், வளைந்த வில்லை உடையவனும், மரவுரியையும் புலித்தோலையும் இடையில் அணிந்தவனும், வேண்டுகோளுக்கு இணங்க பாம்பினை அணிந்தவனும், யாசித்து உண்ண விரும்புபவனும், இரவில் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் `திருவலம்புரம்` என்னும் தலமே.
விளக்க உரை
‘அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்’ என்று பாடலிலும் ‘பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும்’ பல இணையபதிப்புகளில் காணப்படுகிறது. ‘அரவுரி யிரந்தவன்’ என்றே மூலத்தில் காணப்படுவதால் விளக்கம் மூலத்தின் பொருட்டே தரப்பட்டுள்ளது.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சைவ சித்தாந்தத்தின் மூன்று உட்பொருள்கள் பதி, பசு, பாசம்
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
அபிராமி அந்தாதி
கருத்து உரை
இசையின் அடைப்படையாகிய சொற்களைக் கூறும் நறுமணம் வீசும் ஈசனின் தோழியான பைங்கிளியே அபிராமி அன்னையே, உன்னுடைய குளிர்ச்சி பொருந்திய திருவருளை பெறுவதற்காக மிகுந்த முயற்சியுடன் பல கோடி தவங்கள் செயவார்கள்; அவர்கள் இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? வானவர்கள் விண்ணுலகம் தன்னில் வாழ்ந்து அனுபவிக்கும் செல்வமும், என்றும் அழியாத இன்பம் தரும் முக்தி எனும் வீடு பேறும் பெறுவார் அன்றோ!
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
சித்தர் சிவப்பிரகாசரின் மாணவர் யார்? நமச்சியாய மூர்த்திகள் எனும் திருவாடுதுறை ஆதீன ஸ்தாபகர்.
முக்திக்கு உரித்தான சிவயோகங்களை முயல்பவர்களுக்கு அந்த பயனைக் கூட்டுவிக்கும் தேவியும், உலகுகளை உடைமையாக உடையவளுமாகிய சிவகாம வல்லி என்னும் உமாதேவியுடன் செம்பொன்னால் வேயப்பட்ட மணியொளிரும் அம்பலத்தின்கண் அறிய இயலா புதியதொரு யோக வகையில் எய்தும் காட்சி முடிவில் விளங்குவதாகிய நின்னுடைய திருஉருவை நாயினும் கடைப்பட்ட யான் நினைக்கிறபோது எனக்கே மனமும், கண் முதலிய இந்திரியங்களும் இன்பமாகின்றன என்றால், உண்மை ஞானமும் பெரிய நற்குணமும் கொண்ட தவயோகியர் காட்சிக்குத் தோன்றிய ஞானத் திருவுரு நலத்தை வாயால் எவ்வாறு உரைக்க இயலும்?
விளக்க உரை
‘நவயோகம் நந்தி நமக்களித் தானே’ எனும் திருமந்திரப்பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது
பவயோக இந்தியம் (இந்திரியம்) – பிறவிப் பிணிக்கு கண் முதலியவை வாயில்கள்
“மெய்யறிவில் பழுத்த பெருங்குணத்துத் தவயோகர்’ – சிவஞான யோகிகளுக்கு உண்மை உணர்வும் உயர்குணங்களும் இன்றியமையாதவை என்பதை முன்னிட்டு
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அருள்நமச்சிவாயரின் மாணவர் யார்? சித்தர் சிவப்பிரகாசர்
தன்னை அறிவித்து, எண்குணத்தானாகிய தன்னை அவன் போலவே செய்தானைப் பின்னை மறத்தல் குற்றம் எனும் உண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்களுக்கு பலவகையிலும் அதனைத் தெரியப்படுத்தி அவ்வுண்மையை உணர்த்தி வினைகளை முன்னிறுத்தி எளியதாக இருக்கும் அந்த உயிரினை அத்தனை அரியதாக செய்து அளித்த பேருதவியை மறந்து போதல் பரிகாரம் செய்யமுடியா பெரும் குற்றம் ஆகும். முதல்வன், அவ்வுயிரினை அதன் தன்மை அறிந்து சுதந்திரமாக செயல்பட அனுமதி செய்தாலும் அது சுதந்திரமாகி விடாது; அவனுக்கு என்றும் அடிமையாகவே நிற்கும். எனவே குருவாகி வந்து நிற்கும் அருளிய பெரியோனை வழிபடுதலே சிற்றுயிர்க்கு சிறப்பு தருவதாகும்.
இதழ்களின் அளவினாலே தாழம்பூ பெரிதாக இருக்கிறது, மகிழம்பூ இதழ்களின் அளவினாலே சிறிதாயினும் மணத்திலே தாழம்பூவினை விடவும் இனிதாக இருக்கிறது, சமுத்திரம் பெரிதாக இருக்கிறது, ஆயினும் அதிலுள்ள நீர் (உடல்) கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது; அதன் பக்கத்தே சிறிய மணல் குழியில் சுரக்கும் ஊற்றுநீர், குடிக்கத்தக்க நீராக ஆகும்; எனவே ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்கவேண்டா.
விளக்க உரை
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் பொருள் பற்றிய பாடல்