முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசனின் எண் குணங்களில் சிலவற்றை சொல்லியும், அவன் சில தன்மைகளையும் கூறி அவன் உறையும் திருத் தலத்தைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முன் உள்ளவனும், தனக்கு முன்னால் உலகம் மற்றும் உலகப் பொருளும் படைக்கப்படவில்லை எனும் தன்மை கொண்டு எங்கள் இறைவன் ஆனவனும், சென்னி எனப்படுவதும் தலை எனப்படுவதும் ஆன உச்சியில் இருக்கும் எங்கள் தலைவன் ஆனவனும், அழகிய நீல கண்டத்தை உடைய எங்கள் இறைவன் ஆனவனும், என்றும் நிலை பெற்ற எங்கள் தலைவனும், நான்கு மறைகளையும் கல்லால மர நிழலில் இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தவனும் ஆன எங்கள் இறைவன் இறைவன் எழுந்தருளியிருப்பது ‘திருப்பழமண்ணிப்படிக்கரை’ என்னும் திருத்தலமே.
தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ள அஞ்சைக்களத்தபர்
அம்மன் தனி சன்னதி இல்லாமல் கருவரைக்குள் ஈசனுன் இணைந்து சதாசிவ வடிவம்
கேரள அமைப்பில் அமைந்த திருக்கோயில். (வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் உட்பட)
பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்
கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானை இங்கிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றத் தலம். (இறங்கிய இடம் வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை ஆகிய ‘யானைவந்த மேடை’)
கழறிற்றறிவார் என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலம் ( குருபூசை நாள் : ஆடி – சுவாதி)
சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் / விழா ( அன்று மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை)
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 1 : தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்த போது சிலம்போசை கேட்டார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்ட போது “அன்பனே வருந்த வேண்டாம்! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” என பதில் உரைத்தார். சிதம்பரத்தில் போற்றி பாடியது பொன் வண்ண திருவந்தாதி ; திருவாரூரில் பாடியது மும்மணிக் கோவை
சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 2 : திருக்கயிலையில் இறைவனை அடைந்த சுந்தரர் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க எம்பிரான் தோழர் ஆகிய இறைவனும் அனுமதி அளித்தார்; சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கி ஆசு கவியாக ஓர் உலா (திருக்கயிலாய உலா) ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் முதன் முதலாக பாடப்பட்ட உலா
அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ள துவஜஸ்தம்பம்
வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ள் யானை சிற்பங்கள் (இடம் : கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் பக்க சுவர்)
‘திருவஞ்சைக் களத்து சபாபதி’ என்று எழுதப்பட்டுள்ள பஞ்சலோக நடராசர்
செப்புத் திருமேனிகளாக சுந்தரர், சேரமான் உருவங்கள்
தலம்
திருஅஞ்சைக்களம்
பிற பெயர்கள்
திருவஞ்சிக்குளம்
இறைவன்
அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்
இறைவி
உமையம்மை
தல விருட்சம்
சரக் கொன்றை
தீர்த்தம்
சிவகங்கை
விழாக்கள்
மாசி மகா சிவராத்திரி
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦5:௦௦ AM முதல் 11:0௦ AM வரை மாலை ௦5:௦௦ PM முதல் ௦8:0௦ PM வரை
ஸ்ரீ மஹாதேவ சுவாமி திருக்கோயில்
ஸ்ரீ வாஞ்சிகுளம் – அஞ்சல், (வழி) கொடுங்களூர் – 680 664. கேரளா – திருச்சூர் மாவட்டம்
0487-2331124
வழிபட்டவர்கள்
சேரமான், சுந்தரர், பரசுராமர்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கேரளா சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவு; திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
மலை (சேர) நாட்டுத் தலம்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 1
பாடல்
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
பொருள்
கடின தன்மையால் மலைக்கு நிகராகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றியும் ஈர்த்து வந்தும் எறிந்தும் முழங்கி மோதுகின்றதும் ஆன கடலின் அழகிய கரையில் “மகோதை” என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, “திருவஞ்சைக்களம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ உன்னுடைய தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? திருச்சடையின்மேல் ‘கங்கை’ என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அந்த உடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?
விளக்க உரை
சிவன், தலைமாலையை மார்பில் மட்டுமின்றி உருத்திராக்கம் போல் தலையிலும் அணிந்துள்ளான் என்பது பற்றியது; தலைகள் – இறந்த பிரமன் முதலியோருடையவை
கதம் – சினம்
‘மகோதை’ என்பது நகரம்; ‘அஞ்சைக்களம்’ என்பது திருக்கோயில்
பாடியவர் சுந்தரர் திருமுறை 7 பதிக எண் 04 திருமுறை எண் 8
ஒளி உடைய குழையை அணிந்த காதினை உடையவனும், வேதத்திலால் மட்டுமே அறியக்கூடியவனும், கடலின் அழகிய கரையில் இருக்கும் ‘மகோதை’ என்னும் நகரின்கண் உள்ளதும், அழகு நிறைந்த சோலைகளையுடையதும் ஆன ‘திருவஞ்சைக்களம்’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு கண்டம் கறுப்பு கொண்ட நிறத்தவன் ஆயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை அறுத்தாய்; அடியேன் மணவாழ்க்கையை மனத்தாலும் வெறுத்து உடம்பாலும் துறந்து விட்டேன்.
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
கருத்து – அடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.
பதவுரை
இறைவரை உமக்கு ஏற்றவாறு போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.
விளக்கஉரை
நேரிழை – பெண்
இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்
நாளார் வந்தணுகி நலி யாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடி யேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – இறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்
பதவுரை
அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக `நாளார்`
கருத்து – நீ அருள் செய்யா விடினும் யான் உன்னை நினைத்து பாடுதலை விடேன் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆணில் சிறந்தோனாகவும், பூரணனாகவும் இருக்கும் இறைவனே! உனக்கு அணிகலனாகவும், அரைநாணும் சிறுமையை உடைய பாம்பு இருப்பது கண்டு அஞ்சேன்; நீ புறங்காடு ஆகிய சுடுகாட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ என்னுடைய சிறுமைக் கண்டும் உணர்ந்தும் என்னை விரும்பாவிடிலும் யான் உன்னுடைய பெருமையை உணர்ந்து உன்னை மறவாதவனாக இருப்பேன்; வினைகளின் காரணமாக பிறவி கொண்டாலும் உனை மறவேன்; நீ என்னைக் காணாவிட்டாலும், உன்னை (மனக்கண்ணாலாவது) கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் செய்யாவிடினும், நான் என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன். (இவ்வாறானது எனது அன்பு என்றவாறு)
விளக்கஉரை
நம்பி – ஆணில் சிறந்தோன், குலமகன், பூரணன், கடவுள்; இறைவன், ஒரு செல்லப் பெயர், நம்பியாண்டார்நம்பி, நாற்கவிராசநம்பி, நம்பியான்
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய் மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து – பொய்யாக புகழ்பவருக்கும் அருளும் நீ, உண்மையாக இருக்கும் அடியவர்களை நினைவு கொள்ள வேண்டும் எனும் பொருள் பற்றியப் பாடல்.
பதவுரை
மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே! இழி நிலை மனிதர்களுக்கே உரித்தானவாறு மனதில் அன்பு இன்றி, பலன் கருதி பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும் எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.
விளக்கஉரை
பொய்யே உன்னைப் புகழ்வார் – அந்த நிலையில் இருந்தாலும் கூட என்பதே இதன் சிறப்பு.
சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே – வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்
கருத்து – உன் அடியவராக இருக்கும் என் துன்பம் நீக்குவாய் என முறையிட்டப் பாடல்.
பதவுரை
அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்திருக்கூடிய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே! காரியம், காரணம், சமய நடத்தை, யோகம், துன்ப நீக்கம் என்ற பஞ்ச அர்த்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதும், சைவசமயப் பிரிவுகளிள் மிகப்பழமையானதும் ஆன பாசுபதம் எனும் பசுபதி வடிவாகி நின்றவனே! மேலான ஒளியாய் உள்ளவனே! அழகிய வடிவம், அதனால் பெறப்படுவதாகிய பொருள்கள், இம்மையில் பெறப்படுவதான செல்வம் ஆகியவை உனது புகழை உடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக கொள்ளாமல், அவர்களோடு பொருந்தி தகாத செய்கைகள் செய்யாமல், அவர்கள் என்னைப் பற்ற வருவாராயின் வலிமை கொண்டு அவர்களிடத்தில் இருந்து விலகி, உன்னிடத்தில் பற்று உடையவனாக திரிபவன் ஆகி, மனத்தினால் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கி அருளாய்.
விளக்கஉரை
திரு – மதிப்பிற்குரிய, செல்வம், வளம், மேன்மை, திருமகள, சிறப்பு, அழகு, பொலிவு, நல்வினை, தெய்வத்தன்மை, பாக்கியம், மாங்கலியம், பழங்காலத் தலையணிவகை, சோதிடங் கூறுவோன், மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
சீருடைக் கழல்கள் – வேண்டுவார் வேண்டுவதை ஈந்து புகழ் பெற்ற கழல்கள்
‘பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்’ –
என் கண்ணைக் கெடுத்தது, அறவோனாகிய உனக்கு ஏற்புடையது எனினும், யான் என் பிழையை உணர்ந்து உன்பால்என்னுடைய குறையை உரைத்ததால், குறைகளைப் பொறுத்து, எனக்கு அக்கண்ணை அருளித்தருளல் வேண்டும்
உன்னையன்றி வேறு பற்றில்லாத அடியவர்படும் துன்பத்தை நீக்காது அதைக் கண்டு கொண்டிருத்தல் அருளுடையவனாகிய உனக்குத் தகுவதோ.
இத்திருப்பதிகம் முழுவதினும் இது காணப்படும்.
அதாவது நீரின் உச்ச பட்ச கொதிநிலை100டிகிரி. ஆனால்அதன்உறை நிலை_ ___ மைனஸ். நீர்மகாரம்; உறைநிலைங்காரம் மகாரம். பூவானால் ரீங்காரம் வண்டாகும் பெண்கொதிநிலை என்றால் ஆண்குளிர்நிலைஆகும். அதனல்தாண் பெண் ருதுவாகிறாள் ஆண்அதை நிறுத்தும் சுக்லமாகிரான். சூட்சுமம் யாதெனில் ஆணுக்குள் அசையும் பெண்தனை ஆண் அறிந்தால் அதுவே அசையா இசையா நிலையான அமர்நாத் பனிலிங்கம் அதுவே பிறப்பறுக்கும் மோட்ஷநிலை
இதுதான் பிரமன் அமர்ந்த இடம் பிரமரந்தீயம்; உலக உயிர் ஸிருஷ்டி மலை மீது அமர்ந்து உபதேசி அருளும் இதை முல்லை வாயில் என்றார். இதற்குள் புகுந்து இதுவாவதே மோட்ஷம் எனும் ஓங்காரம்.
மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.
தலம்
திருவெஞ்சமாக்கூடல்
பிற பெயர்கள்
வெஞ்சமாங்கூடலூர்
இறைவன்
கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
இறைவி
பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி)
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
குடகனாறு, விகிர்த தீர்த்தம்
விழாக்கள்
மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம். PIN – 639109
04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878
வழிபட்டவர்கள்
இந்திரன்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி
கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம்.
பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 4
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 7
உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மிகச் சிறந்ததான பொன் போன்ற திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிபவனும், கரிய நிறம் கொண்ட கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத இன்பத்தை தருபவனாகிய சிவன் ஆனவனும், நெருப்பை உள்ளங்கைகளில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், குடம் போன்று பெரிய தலையுடன் இருப்பதும், பெரியதும் ஆன யானைனையின் தோலை உடையவனும், ரிஷபத்தின் மேல் ஏறிவரும் சக்ரவர்த்தி போன்றவனும், எங்களுக்கு அருந்துணை ஆகி எங்களால் விரும்பப்படுபவனும், திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்து அருளி உள்ளவனும், அமுதம் போன்றவனை மறந்து, நாய் போன்ற அடியேன் ஆகிய யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்க மாட்டேன்.
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்கஉரை
இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.
இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, மிருகண்ட மகரிஷிக்கும், அவருடைய மனைவி ஆகிய மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு, அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ, ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.
மெய்ப் பொருளாய் இருப்பவனும்,திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும்,படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
விளக்கஉரை
‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.
‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.
கொங்குநாட்டுத் திருத்தலங்களில் முதல் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் ஐந்து மணிகளில் வைரமணி இது (மற்றவை சிவப்புமணி திருவண்ணாமலை, மரகதமணி திருஈங்கோய்மலை, மாணிக்கமணி திருவாட்போக்கி, நீலமணி பொதிகைமலை)
மிகவும் குட்டையான திருமேனியும், சதுர வடிவும் ஆன ஆவுடையாரில் சிகர வடிவும், அகத்தியர் விரல் தழும்பும் கொண்ட திருக்காட்சியுடன் மூலவர்.
மூலவர், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கிய திருக்காட்சி
சுந்தரர் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்
பாண்டியமன்னனின் விரல்கள் வளர்ந்து அவனது குறைநீங்கிய தலம்
சித்திரை பௌர்ணமி தினத்தில் பரத்வாஜருக்கு சிவன் முயலகன் இல்லாமல் குஞ்சிதபாத நடராஜராக சதுர்முகதாண்டவக் கோலத்தில் காட்சியளித்த தலம்.
காவிரி கண்ட விநாயகர் சந்நிதி
திருவடியில் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு பதிலாக ஒரே ஒரு முனிவர் மட்டும் கொண்டு, ஜடாமுடி மற்றும் ரிஷபத்துடன் திருக்காட்சி கொண்ட தட்சிணாமூர்த்தி
திசை மாறியுள்ள மயிலுடன் கூடிய சுப்பிரமணியர் வடிவம்
தல விருட்சமான மிகப்பெரிய வன்னிமரத்தினடியில் பிரம்மா மூன்று முகங்கள் கொண்ட திருகாட்சி
பூக்கள் பூத்து, காய் காய்க்காது இருக்கும் வன்னி மரத்தின் பூக்கள், ஒருபக்கம் முள்ளுடனும் , மறுபக்கம் முள் இல்லாமலும் கொண்ட தோற்றம்; எத்தனை நாட்கள் நீரில் இட்டாலும் கெடாத தன்மையை தரும் வன்னிமர இலைகள்
கோரப்பற்களுடன் கூடியதும், வாலில் மணி கட்டப்பட்டுள்ளதும் ஆன ஆஞ்சநேயர்
காவிரியாற்றின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் விநாயகர் காக வடிவில் அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்து காவிரியை பெருகச் செய்த திருத்தலம்
பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரி
திருமால் வழிபட்டதால் அரிகரபுரம்
கருடன் வழிபட்டு தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவரும் வலிமைபெற்ற தலமாதலால் அமுதபுரி
காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:3௦ வரைஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம்.
PIN – 638151. 04204-222375
பாண்டிக்கொடுமுடி இறைவனானவர், இந்திரன் மற்றும் ஏனைய தேவர்கள் பலரும் போற்றி துதிக்குமாறு நிற்பவர்; மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் வருந்துமாறு செய்து பின் அருள் செய்தவர்; கரிய நிறமுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினை உடையவர்; அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை காற்றில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 48
திருமுறை எண் 8
செம்மை நிறம் ஒத்த சடையை உடையவனே , திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தவனே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோலைகளில் கிளைகளின் மேல் அமர்ந்து குயில்கள் கூவவும், சிறந்த மயில்கள் ஆடுகின்றதும் ஆன ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனாகிய சிவனே, உன்னை நான் மறந்தாலும், என் நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
விளக்கஉரை
தண்மை – மனம் குளிர்தலைக் குறிக்கும்
முழவு
முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
வேறு பெயர் – மிழாவு (கேரளா)
மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)
ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது நீர், ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’ ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
திருத்தமான மாடங்கள் உடையதும், உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும், திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.
விளக்கஉரை
மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.