பாடல்
நாளார் வந்தணுகி நலி
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – இறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்
பதவுரை
அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்க உரை
- திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
- நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக `நாளார்`