அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 7 (2018)

பாடல்

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.

விளக்க உரை

  • அடும்பு-அடப்பமலர்
  • வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
  • கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)

 

பாடல்

தீரா மயக்கப் பிணிநோயைத்
        தீர்க்கும் மருந்தே அருமருந்தே
     தேவா திகளும் அறியாத
        கிருஷ்ணன் ஆதி சகோதரியே

ஆரா திப்பார் பூசிபார்
        அமைதுன் நாம மதைநினைப்பார்
     அடுத்தோர் இன்ப சுகமனைத்தும்
        அடையும் எனவே மறைவிளம்ப

நேரா யிருந்து களிப்பவளே
        நித்யா னந்த சுகப்பொருளே
     நெறியே குறியே எனைஆளும்
        நிமலி அமலை சுகத்தாளே

வாரா கினியே துட்டர்டர்
        மனத்தை அழிக்குஞ் சினத்தாளே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.

விளக்க உரை

  • முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
  • தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’  என்று  விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 04 (2018)

பாடல்

மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

சிவவாக்கியர்

பதவுரை

தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?

விளக்க உரை

  • கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 3 (2018)

பாடல்

எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும்
இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்

சிவஞானசித்தியார் – சுபக்கம்

பதவுரை

ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)

பாடல்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை  மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.

விளக்க உரை

  • மணிமன்றம் * – குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 1 (2018)

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?

விளக்க உரை

  • விலங்கல் – மேருமலை
  • அரக்கர் – திரிபுராதிகள்
  • ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)

பாடல்

மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 25 (2018)

பாடல்

நஞ்செய லற்றிருந்த நாமற்ற பின்நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற

திருநெறி 5 – திருவுந்தியார்

பதவுரை

தன்னில் தான் விலகி, கண்ணுக்கு புலப்படிவதாகிய ஸ்தூல உடலும், புலனாகாத சூட்சம உடலும் தனித் தனி என்று அறிந்து இது நாம் அல்ல எனும் அறிவு பெற்று, இது நாதன் செயல் தானே என்று உந்தி பற; இவ்வாறான அறிவு பெறுவதற்கு தன்னையே தந்தான் என்று உந்தி பற.

விளக்க உரை

  • உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன்  இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி,  பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
  • தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)

பாடல்

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே!  ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளைக் கொண்டு,  இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.

விளக்க உரை

  • அஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 23 (2018)

பாடல்

பூணொ ணாததொ ரன்பு பூண்டு
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி
     நடுக்கட லுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந்
     தோணி பற்றி யுகைத்தலுங்
காணொ ணாத்திருக் கோலம் நீவந்து
    காட்டி னாய்க்கழுக் குன்றிலே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

உன்னுடைய அன்பர்கள் உன்னிடத்தில் என் தரத்திற்கு மேற்பட்ட ஓர் அன்பு கொண்டு அந்த அன்பிலே நித்தமும் நிலைபெற்று உன்னைப் போற்றி வணங்குவதைக் கண்டு, `யான் உன்னிடத்தில் பேரன்பு உடையேனாய் இருந்தும் உன்னொடு வரும் பேற்றினைப் பெறாததால், அப்பேற்றினைப் பெற்றோர் செய்யும்  எள்ளலுக்குப் பெருநாணங்கொண்டு, அந்தநிலை நீங்குதற்கு நீ ‘திருப்பெருந்துறையில் இருந்து, தில்லைக்கு வருக ‘என்று அருளிச் செய்த திருவருளையே பற்றுக்கோடாகக் கொண்டு பல தலங்களிலும் சென்று உன்னை வணங்கிவர, துன்பக் கடலில் அழுந்தி, மிக்க மதிக்கத்தக்கதும், போற்றத் தக்கதும் எளிதில் பாதுகாத்துக் கொள்ளுதற்கு இயலாத திருப்பெருந்துறையில் கிடைத்த திருவருளாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தியும்,  திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, எவராலும் எளிதில் காணமுடியாத உன் திருக்கோலத்தை எனக்குக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?

விளக்க உரை

  • திருக்கழுக்குன்றத்தில் உனது அரிய திருக்காட்சியை எனக்குக் காட்டியருளினாய்` என்பது இதன் பொருள்.
  • உகைத்தல் – செலுத்துதல், எழுப்புதல், பதித்தல், எழுதல், உயரவெழும்புதல்,அம்பு முதலியவற்றை விடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)

பாடல்

கண்ணா ரமுதே உனைஎனது
        கண்தான் களிக்க மொழிகுழறக்
     கதிக்க உயிரும் உடல்புளகங்
        காணும் பருவம் பெறுவேனோ

விண்ணா ரமுதே சிவபுரத்தில்
        விளைந்த கனியே தேன்கடலே
     வீசிப் படந்த கமலமதில்
        வீற்றே யிருக்கும் விழிச்சுடரே

பெண்ணா னதுவே ஆண்வடிவே
        பேணும் அலியே பிறங்கொலியே
     பேதை நாயேன் இதமதிற்
        பிரியா திருக்குந் தவக்கொழுந்தே

மண்ணா டியவன் இடப்பாகம்
        வளருங் கொடியே மடமயிலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நடனம் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர  எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ?

விளக்க உரை

  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 21 (2018)

பாடல்

வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ

அழுகணிச் சித்தர்

பதவுரை

‘வ‘ எனும் சக்தி எழுத்தினை முன்வைத்து வகாரமாகிய அருள் எனவும்,  வசியம் அருளுவதாகிய  ‘வயநமசி‘  என்று உச்சரிப்பினை முன் வைத்து உச்சரிப்பதையும் விடுத்து மற்றைய ஏனைய மந்திரங்களை கொண்டு உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை அறியாமல் உச்சரித்ததால்  மரணம் எனக்கு ஏற்பட்டது. அவ்வாறான அருளப்படாத மந்திர உச்சரிப்புகளை விட்டு சாகாமல் சாதல் ஆகிய சமாதி நிலையை அருளும் வகார எழுத்தினை கொண்டு விட்டால் வாழ்வு எனக்கு வரமால் இருக்குமா?

விளக்க உரை

  • வாழை – முக்கனி, அசோகம், அசோணம், அற்பருத்தம், அம்பணம், கவர், சேகிலி, அரம்பை, கதலி, பனசம், கோள், வீரை, வான்பயிர், ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பானுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம்

( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 20 (2018)

பாடல்

ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர் சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சிவபெருமான், பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும் வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர்; படர்ந்து விரிந்த சடையினை உடைய அச்சிவபெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், சிறந்த புகழையுடைய அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, மேல் சென்று,  அழகு மிகுந்த தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படி செய்யும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஏன எயிறு – பன்றியின் கொம்பு
  • இளைஞர் – வாலிபர் (சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க.)
  • உழுவை அதள் – புலித்தோலை.
  • காணி – உரிய இடம்
  • மூசு – மூடுகின்ற மயிலாடுதுறை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 19 (2018)

பாடல்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே

பத்தாம் திருமுறை -திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

நல்ல அறிவும், சிறந்த இல்லற பண்பும், மக்கட்பேறும் உடைய ஒரு தாயானவள் தன் காதல் கணவனுடன் பெற்ற இன்பத்தை மகள் சொல் என்று  கேட்டால் அந்த தாயால் அதை எப்படி சொல்ல விளக்க முடியாதோ அது போல புறத்தில் பொருளின் வடிவினை முகக்கண் கொண்டு பார்க்க முடியும்; ஆனால் அறிவுக் கண்ணால் மெய் அறிவு கொண்டு காணப்படும் அம்மெய்ப்பொருளை அகக்கண்ணாகிய அறிவுக் கண்ணால் மட்டும் காண இயலும்.அத்தகைய பொய்யில்லாத  மெய்யான இன்பத்தினைத் தமக்குத் தாமே தம்மில் உணர்தல் அன்றி சொல்லி உணரச் செய்வது என்பது எவர்க்கும் ஒல்லாது.

விளக்க உரை

  • மெய்ப் பொருளை புறக்கண்ணால் காணலாம் என்று கூறுபவர் மூடராவர். புறக்கண்,  சிவத்தினை உணரத் துணை செய்யும் போது  திருவடிப் பேரின்பம் அகத்துக் கண்ணாகிய அறிவுக் கண்ணால் நேரும். அதுவே அழிவிலாத பேரின்பம், எல்லையிலாத நல்லின்பம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 18 (2018)

பாடல்

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

ஐந்து மலங்களான ஆணவம், மாயை, கன்மம் இவற்றுடன் மாயேயம், திரோதான சத்தி ஆகிய மலங்களை  அடியோடு போக்குபவரும், அன்பர்களுக்கு அமுதம் போல இனிப்பவரும், மூன்று விதமான ஆசைகள் ஆகிய மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவைகள் அகலுமாறு அருள் கொடுப்பவரும், மாலையணிந்த விடைமீது வருபவரும், காயாமலர்போலும் மிடற்றினை உடையவரும், கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவரது புகழைப் பலரும் பேசி வணங்குமானவரும், ஒப்பற்றவரும் ஆன அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

விளக்க உரை

  • பரிவார்க்கு-அன்பர்க்கு.
  • அமுதம் அனையார்-அமிர்தத்தைப் போல்பவர்.
  • அலங்கல்-மாலை.
  • காசை மலர்-காயாம்பூ.
  • பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப் பொருள்களைப் பலகாலமும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு கூட்டுவித்து வினைகளை அனுபவிக்கச் செய்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 17 (2018)

 

பாடல்

காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

பதவுரை

அறிதல் எனும் பொருள்தரும் காணுதல் தொழிலையுடையதும், அறிவிக்க அறியும் தன்மை உடையதுமான ஆன்மாவைத் அகத்தில் தரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமல் காண்கின்றோம் என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். காணாமல் காண்பது எவ்வாறு எனில், காண்பவன் ஆகிய ஆன்மா, காண்கின்றவனால் காணப்பட்ட பொருள்களாகிய சிவம் என்கிற இரண்டு தன்மையும் இல்லாமல் இரண்டும் சிவத்துடன் ஒன்றாகி ஞான அறிவாகிய மெய்ப்பொருளை உள்ளவாறு காண்கையினாலே  கண்டவர்கள்  என்று அறிவாயாக.

விளக்க உரை

  • காண்கின்ற பொருள் என்பது  சத்து, அசத்து என்னும் இருதிறப்பொருள்கள்.
  • நிலைபெற்ற சத்தாக உள்ள ஆன்ம நாட்டத்தின் இறையோனாகிய சிவபரம்பொருளை காணுதல். அஃதாவது தற்போதம் கெடத் திருவருளோடு உடனின்று ஒன்றியுணர்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 16 (2018)

பாடல்

பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை
     பரியமட லாவெழுதிப் பார்த்துப் பார்த்து
வாராயோ என்ப்ராண நாதா என்பேன்
     வளைத்துவளைத் தெனைநீயா வைத்துக் கொண்டு
பூராய மாமேலொன் றறியா வண்ணம்
     புண்ணாளர் போல்நெஞ்சம் புலம்பி யுள்ளே
நீராள மாயுருகிக் கண்ணீர் சோர
     நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்

தாயுமானவர்

பதவுரை

முதலும் முடிவாகி இருப்பது போன்றும், நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஈறாக உள்ள ஆக்கப்பாடுகளைத் திருவருள் துணையால் நிகழ்த்தப்படுகின்றன என எண்ணுபவர்களுக்கு மெய்ப்பொருளாகிய சிவன் தோற்றம் ஒன்று மட்டுமே காணப்படும்; அதனால் முதல்வனே, அடியேன் விருப்பம் கொள்ளும் சிந்தையினைப் பெரிய பனை ஏடாகக் கொண்டு அதில் எண் குணங்களைக் கொண்டு  நிற்கும் நின் பொதுநிலையினை மறவாத நினைவால் எழுதிய தன்மை கண்டும், அடியேனைத் தடுத்துத் வைத்துக்கொண்டு முதலும் முடிவுமாக உன் அருள் அல்லாமல் மேலொன்றும் அறிய முடியாதவனாகி, புண்பட்ட உள்ளம் போன்று உன்னையே நினைந்து வருந்தி,  மிகமிகப் புலம்பி, உள்ளமானது வெள்ளம் போல உருகி, அவ்வெள்ளப் பெருக்கால் கண்ணீர் சேர, நினைந்தது நினைத்த பொழுதே கிட்டாமையால் ஏற்படும் பெருமூச்சினை விட்டு மெய்ம்மறந்து நிற்போர் நிலையாய்ச் செய்வதறியாது நிற்பேன்.

விளக்க உரை

  • பார் – நிலம்
  • விண் – விசும்பு
  • மடல் – பனைஏடு
  • பூராயம் – முதலும்முடிவும்
  • எண்குணங்கள் – தன் வயம் உடைமை, தூய உடம்பு உடைமை, இயற்கை உணர்வு உடைமை, முற்றுணர்வு உடைமை, இயல்பாகவே பாசமின்மை, பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 15 (2018)

பாடல்

அழியச் சனை அலைமுழுது
       அலையும் மனத்தை நிலைநிறுத்தி
   ஆறாதார அடிநடுவுள் அருணா
       சலத்தின் வேரினுள்ளே

சுழியைத் திறந்து வாயுவதாற்
       கூழ்ரே சகபூ ரகத்தாலுந்
   தோன்றுங் கும்ப காதியுடன்
       சோதி படரும் ஞானவெளி

விழியுந் திறக்கும் மதிக்குழப்பு
       மிகுந்து சுரக்கும் நவக்கிரக
  வெளியா மேலே வெளிபடர்ந்து
       விம்மித் தனையாய்ந் திருக்கஅருள்

வழியைப் பொருத நாயடியேன்
       மனதா மரையுள் நீவருவாய்
  மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, பிறவிகள் தோறும் எதிலும் நிலைபெறாமல் அலைவதை மட்டுமே கொண்டிருக்கும் மனதை நிலைநிறுத்தி, மூலாதாரம், சுவாதிடானம், மணிபூரகம், அநாசுதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றின் அடியிலும், நடுவிலும், சுழுமுனை நாடிகளின் உச்சியிலும், சுழுமுனை நாடிகளின் வேராக இருக்கும் இடகலை, பிங்கலை நாடிகளின் வழியாக செல்லும் சுழுமுனை நாடியின் அடியைத் திறந்து வாயுவைத் திறந்து வெளியிடுவதாகிய  நிறைத்தலும், வெளியிடச் செய்தலும், அதனால் உண்டாகும் சோதியாகிய ஞானவெளியில் விழிதிறந்து, ஞானம் அளிக்கும் கண் திறந்து, அமுத தாரகை மிகுந்து சுரக்கும்  ஒன்பது துவாரங்கள் உடையதாய், ஒன்பது கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பூமி ஆகிய உடலைக் கடந்து  துவாத சாந்த பெருவெளியை அடைய வழி பெற இயலாத நாய் போன்றவனாகிய என் மனத் தாமரையுள் நீ  வந்து அருள்புரிவாயாக.

விளக்க உரை

  • யோக சித்தி அருள வேண்டுதல் குறித்தது இப்பாடல்.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

 

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!