அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 2 (2018)

பாடல்

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே

திருஅருட்பா – வள்ளலார்

பதவுரை

‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை  மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.

விளக்க உரை

  • மணிமன்றம் * – குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *