பாடல்
மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.
விளக்க உரை
- ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.