பாடல்
போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.
விளக்க உரை
- சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும், ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும், அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.