பாடல்
கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
பூங்கொம்பு கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.
விளக்க உரை
- திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
- சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
- வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
- `மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.