அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 28 (2018)

பாடல்

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரையை அக அனுபவமாக உணர்ந்தவர்கள் அவளை ஆனந்த வடிவமாக இருப்பவள் என்றும், (அருவமும், உருவமும் ஆகி) அருவுருவம் கொண்ட வடிவினள் என்றும், உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் அனைத்தும் அவள் விருப்பத்தின் படி நிகழ்கிறது என்றும், அறிவு உருவாகிய பரமனாகிய சிவபெருமானும் அன்னையிடம் எழுந்தருளி இருப்பவர் என்றும் கூறப்பெறும்.

விளக்க உரை

  • அன்னையின் மேலும் சில பெருமைகளைக் கூறும் பாடல்
  • *நிறைந்தஞானம், கிரியை, இச்சை என்னும் வகையில் நிற்பவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாமடி மற்றும் நான்காமடிகளில் வரும் ‘அறிவார்’ என்பதை, ‘அறிவு ஆர்’ எனப் பிரித்து. `ஆர்ந்த அறிவு` எனக்கொண்டு, `அறிவாய் ஆர்ந்த பரனும்` எனவும் சில இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதன் வழி பற்றி  ‘ஆர்ந்த அறிவு கொண்டவனும் அவள் வழி தொழில் நடத்துகிறான் எனவும் விளக்கம் பெறும். ஆன்றோர் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *