பாடல்
அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரையை அறியாதவர்கள் தேவர்கள் ஆகமாட்டார்கள்; அவள் இன்றி செய்யும் மிகப் பெரியதும் சிறப்புடையதுமான தவம் என்பது எதுவும் இல்லை; அவள் இல்லாமல் (சைவத்தினை முன்வைத்து) ஐந்தொழில்களையும் சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்கள் எதுவும் இல்லை. அவள் அருள் இல்லாமல் கைகூடும் திருவடிப் பேறு என்பதும் இல்லை.
விளக்க உரை
- திரிபுரையின் பெருமையை கூறும் பாடல்.
- ஐவர் – பிரம்மா படைத்தலையும், திருமால் காத்தலையும்,உருத்திரன் அழித்தலையும், மகேசுவரன் மறைத்தலையும், சதாசிவன் அருளலையும் ஆற்றுவதாகக் கூறப்படும் கருத்துக்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.