பாடல்
சுத்தஅம் பாரத் தனத்தி சுகோதையள்
வத்துவ மாய்ஆளும் மாசத்தி மாபரை
அத்தகை யாயும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோலம் மதியவ ளாகுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரை தூயதும், அழகியதும், திண்ணியதும் ஆன கொங்கைகளை உடையவள்; பேரின்பத் தோற்றமாகவே விளங்குபவள்; மெய்ப்பொருள்களை உணரும் ஞானமாய் நின்று உயிர்களை ஆட்கொள்கின்ற பேராற்றலை உடையவள்; எல்லாச் சத்திகளினும் பெரியதான மேலான சத்தியாக விளங்குபவள்; அவ்வாறு இருப்பினும் அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்மை உடையவள்; அழகிய நிறைமதி போலும் ஒளியினை உடையவளும் ஆவாள்.
விளக்க உரை
- சுத்த, அம், பாரத்தனம் – ஞானம் நிறைந்து நிற்றலைக் குறித்தது
- வத்து – பொருள்; மெய்ப்பொருள். (வத்துவம், வாஸ்துவம்)
- திரிபுரை தியானத்தில் அவளைப் பற்றி அறியக்கூடிய பெருமைகள் குறித்து கூறப்பட்டப் பாடல்