பாடல்
கோல மேனிவ ராக மேகுண
மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன்
சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக நான்உனை
நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓதநீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
அழகிய பன்றி உருவத்தை திருமேனி ஆக உடையவனே! திருப்பெருந்துறைக் மழை மேகமே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் சிந்தையினில் வைக்கப் பட்டிருக்கிற தலைசிறந்தவனே! உலகத்திற்கு சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன்னுடைய பெருங்கருணை இருந்தவாறு என்னே?
விளக்க உரை
- கொண்டல் – கொள்ளுகை, மேகம், மழை, மேஷராசி, கொண்டற்கல், மகளிர் விளையாட்டுவகை
- சீலம் – அழகு, குணம், வரலாறு, சீந்தில், சுபாவம், நல்லறிவு, அறம், நல்லொழுக்கம், யானையைப் பயிற்றும் நிலை, தண்டனை
- கோல மேனி வராகமே – இது பன்றிக்குட்டிகளுக்கு இறைவன் தாய்ப்பன்றியாய்ச் சென்று பால்கொடுத்த திருவிளையாடல் பற்றிய புராணம்
- கரி – சான்று.
- நச்சுதல் – விரும்புதல்.
- நச்சிட வந்திடும் காலமே – என்றும் இடையறாது அன்பு செய்து உன்பால் யான் வருவதற்குரிய காலம்.
- ஓத – இங்ஙனம் மகிழ்ந்து பாடும்படி