அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – உறுவித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உறுவித்தல்

பொருள்

  • பொருத்துதல்
  • நுகர்தல்
  • மிகுவித்தல்
  • அடைந்து நீராடச் செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ் வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயில் ஆளரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான், அந்த வில்லினில் நாணேற்றப்பட்ட அம்பினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் அழித்தவர். அவர் தனது அடியார்களை, பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடச் செய்து அதன் காரணமாக நற்பயன்களை அடையுமாறு செய்து அவர்களது ஊழ்வினைகளை அறுப்பதோடு மட்டும் இன்றி சிவஞானத்தை அளிக்கும் நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்து  பின் அவர்கள் பல விதமான நன்மைகள் பெறுமாறு செய்கின்றார்; இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகிறார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சுணங்கன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சுணங்கன்

பொருள்

  • நாய் போலத் திரிபவன்
  • இழிந்தோன்

வாக்கிய பயன்பாடு

ஏண்டா, எப்பவும் சொணக்கமாவே இருக்க, எப்படித்தான் கரை சேரப் போறீயோ?

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
   பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
   தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
   உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
   என்னினும் காத்தருள் எனையே.

திருஅருட்பா – வள்ளலார்

கருத்து உரை

புலால் விற்கும் கடைகளில் தலையைத் தாழ்த்திக் கொண்டு,  அலைந்து கொண்டு சிறு இறைச்சி  துண்டங்களைப் பொறுக்கி உண்ணும் நாய் போன்றவனாகிய யான், பொருளை வாங்கி ஊருக்குள் கொண்டுவந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணாது விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசி விலையை மட்டும் குறியாகக் கொண்டு இரக்கமில்லாத தீயவனாகவும், ‘இது கேடில்லை செய்க’ எனத் தீயவர் உடனிருந்து கூறிய கொடிய செயல்களை மேற்கொண்டு, பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை என்று அகம்பாவம் கொண்டிருந்த குற்றம்  உடையவனாயினும் என்னைக் காத்தருள்க.

விளக்க உரை

  • புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” -. சிதறுண்டு ஒழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை குறிப்பது
  • தலைவிலை – பொருள் விளையுமிடத்து அமையும் விலை
  • கடைவிலை – விற்பனையாகுமிடத்து விலை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – விடாய்த்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விடாய்த்தல்

பொருள்

  • வேட்கையுறுதல்
  • களைப்படைதல்
  • விரும்புதல்
  • செருக்குக்கொள்ளுதல்

வாக்கிய பயன்பாடு

ரொம்ப விடாய்க்காத, காலம் இப்படியே போவாது

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான  அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து  நீங்கியவர்கள் ஆவார்.

விளக்க உரை

  • ‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால்   கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நிருத்தம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  நிருத்தம்

பொருள்

  • நடனம்,
  • நிர்த்தம்
  • நிருத்தியம்
  • வரிக்கூத்துவகை

வாக்கிய பயன்பாடு

இந்த கோயில்ல என்னா விஷேசம் சாமி?

எல்லா இடத்தலையும் ஒவ்வொரு பேர்ல கணபதி இருப்பர், இங்க நிருத்த கணபதி, அழகா, ஆடுறவா எல்லாரையும் நான் ஆட்டிவைப்பேன்னு சொல்ற மாதிரி ஒரு கால தூக்கிவச்சிண்டு ஆடுற அழகே தனின்னா, போங்கோ, போய் சீக்கிரம் பாருங்கோ, நட சாத்தப்போறா.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இத்தரணி மீதிற் …… பிறவாதே
எத்தரொடு கூடிக் …… கலவாதே
முத்தமிழை யோதித் …… தளராதே
முத்தியடி யேனுக் …… கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் …… குருநாதா
சத்தசொரு பாபுத் …… தமுதோனே
நித்தியக்ரு தாநற் …… பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து உரை

உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே! ஓங்காரமாகிய சப்த வடிவிலே திகழ்பவனே! புதிய அமிர்தம் போன்றவனே! தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே! என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே! ஆடலில் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே! இந்தப் பூமியில் இனி பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக்கலந்து கொள்ளாமலும், முத்தமிழை ஓதியும் அதன் பொருள் அறியாமல் தளர்ந்தும் இருக்கும் எனக்கு முக்திநிலையை தந்தருள வேண்டுகிறேன்.

விளக்க உரை

  • முத்தமிழை யோதித் …… தளராதே – இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும் எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. இயல் தமிழ் அறிவால் அறியக்கூடியது என்றும், இசைத் தமிழ் அறிவு, செவி ஆகிய இரண்டால் அறியக்கூடியது என்றும், நாடகத் தமிழ் அறிவு, செவி மற்றும் விழி ஆகிய மூற்றாலும் அறியக்கூடியது என்றும் பொருள் தரவல்லது. அஃதாவது தமிழ்மொழி மந்திரத்துடன் தொடர்புடையது என்பதால் மேலே குறிப்பிட்டபடி ஒதாமல் உணரவேண்டும் எனும் பொருளில் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
  • தித்தித்தெய ஒத்த பரிபுர
    நிர்த்த பதம் வைத்து பயிரவி
    திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆடஎனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – உறுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  உறுதல்

பொருள்

  • உண்டாதல்
  • மிகுதல்
  • சேர்தல்
  • இருத்தல்
  • பொருந்தல்
  • கூடல்
  • நேர்தல்
  • பயனுறல்
  • கிடைத்தல்
  • வருந்தல்
  • தங்கல்
  • அடைதல்
  • நன்மையாதல்
  • உறுதியாதல்
  • நிகழ்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
மூலம் – காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றியது

கருத்து உரை

இந்த உலகம் முழுவதும் இடைவெளி இல்லாது நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாக இருப்பவன் எவனோ, உலகில் உறையும் விகாரங்களாகிய காமம், குரோதம் லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள் சேராத பேரொளியாக இருப்பவன் எவனோ, உலகில் செய்யப்படும் செயல்களினின் வினை பயன்களை பிரித்து நல்வினைப் பயன்களை அருள்பவனும், தீவினைப் பயன்களை களைபவன் எவனோ, உலகிற்கு ஆதி காரணமாக இருக்கும் முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழ்ந்து சரணம் எனத் துதிக்கின்றோம்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – குழகு

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குழகு

பொருள்

  • இளமைச்செல்வி
  • அழகு
  • குழந்தை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வயல்களில் உள்ள சேற்றில் விளையாடும் கயல் மீன்களும், வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியை தன் தலையில் ஏற்று அருளிய விரிந்த சடையை உடையவராகவும், அழகும் இளமையும் உடையவராகவும், கூற்றுவன் ஆகிய எமனின் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராகவும், நள்ளிருளில் திருநடம்புரிபவராகவும், கொன்றை மலர்மாலை சூடியவராகவும் விளங்கும் இந்த இறைவர் தம்முடைய  இயல்பு யாதோ?

விளக்க உரை

  • இத்திருத்தல பாசுரம் முழுவதும் இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் சிறப்புகள் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சவலை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சவலை

பொருள்

  • நோஞ்சான்

வாக்கிய பயன்பாடு

என்னடா நீ, இவ்வளவு சவலப் புள்ளையா இருக்க, நா எல்லாம் உன்ன மாதிரி இருக்கச்ச எப்டி இருந்தேன் தெரியுமா?

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தாயாய் முலையைத் தருவானே
   தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
   நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
   தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
   ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.

எட்டாம் திருமுறை –  திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

உயிர்கட்கு எல்லாம் தாயாய் நின்று  பாலூட்டுதலை செய்வோனே! அவ்வாறு தாராவிடின் நாயேன், தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை ஆகிய சவலையாய் வீணாய்ப் போவது முறையோ? அண்ணலே! இனியாவது அருளமாட்டாயா; உன்னைத் தாயே என்று கருதி உன் திருவடியை அடைந்தேன். நீ என்னிடத்து கருணையுடையவனாய் இல்லையா? நாய் போன்ற யான் அடிமையாக உன்னுடன் இருக்கும்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டுவதில்லையோ?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தழை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தழை

பொருள்

  • தழைகை
  • தளிர்
  • இலை
  • இலையோடு கூடிய சிறு கொம்பு
  • பீலிக்குடை
  • தழையாலான உடை
  • ஒருவகை மாலை
  • பச்சிலை
  • செழி
  • தாழ்
  • பூரித்தல்
  • மிகு
  • விருத்தியாகு
  • சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

வெண்மையான பிறையுடன் கூடியதும், இலையோடு கூடிய சிறு கொம்பு கொண்ட தாழ்வான  சோலைகள் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒலியினையுடைய உடைய மணிகளால் இழைக்கப்பட்ட மாடவீடுகளுடன் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவனே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் அளவு உண்ணும் மதமயக்கமும் துதிக்கையும் உடைய பெரிய யானையை எவ்வாறு நீர் சினந்து கைகளால் அதனை அழித்தீர்?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தன்னம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  தன்னம்

பொருள்

  • பசுவின் கன்று
  • மான்கன்று
  • மரக்கன்று
  • அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது / சிறியது என்னும் தன்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் – நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாயென்நோய்
பின்னவலம் செய்வதென்னோ பேசு.

பதினோராம் திருமுறை – திருநாரையூர்  பொல்லாபிள்ளையார் பற்றிய பாடல் – நம்பியாண்டார் நம்பி

கருத்து உரை

நெஞ்சே!  புதியதான மாங்கனியைப் பெற, பூங்கொம்பு போன்ற வள்ளியின் கணவனாகிய முருகன் உலகினை சுற்றி வந்து அடையும் முன்னரே,  நாரையூர் நம்பன் தன் தாய் தந்தையரை வலம் வந்தார். உலகை வலம் வருதலை விட, இந்த வழியே சிறந்தது என்று தேர்ந்து எடுத்தார். தாய் தந்தையரை வலம் வந்து, தன் துதிக்கையை தாழ்த்தி துதித்து, மாங்கனியை பெற்றார். அந்த விநாயகரை சொல் நெஞ்சே! அவ்வாறு சொன்னால், நோய், வினைகள், மற்றும் அவலம் எனும் துன்பம் நம்மை என்ன செய்யும்?

விளக்க உரை

  • தன்னவலம் – உலகை வலம் வருதலை விட அன்னை தந்தையரை வலம் வருதல் எளிதாதல் பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – எல்லி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  எல்லி

பொருள்

  • சூரியன்
  • பகல்
  • இரவு
  • இருள்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றா ரிலங்குமேற் றளிய னாரே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பார்வதியை ஒரு பாகம் உடையவராகவும், முருகனை மகனாகக் கொண்டவராகவும், மல்லிகை மற்றும் கொன்றை மாலையைச் சூடிவராகவும், கல்வியிலே கரை கண்ட சான்றோர் வாழும் காஞ்சி மாநகரிலே சூரியன் ஒளிற அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்கினார்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாற்றுதல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பாற்றுதல்

பொருள்

  • நீக்குதல்
  • அழித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மனே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

கெடிலக் கரையில் உள்ள வீரட்டானத்துறை எனும் அதிகை  அம்மானே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களை அழிக்க வல்லவரே, தலையைச் சுற்றிலும் மண்டை ஓட்டினை மாலையாக கொண்டு அணிந்தவரே, இறந்துபட்டவருடைய மண்டை ஒட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே, உலகப்பற்றுக் கொண்டு இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே, உலகப்பற்றுக் கொண்டு பிணி முதலியவற்றால் இறந்தவர்களை எரித்த சாம்பலை திருமேனியில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே,  காளையை ஊர்தியாக் கொண்டு வலம்வர விரும்புகின்றவரே, உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுவதால் எனை துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி எனக்கு அருளுவீராக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – செற்றை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  செற்றை

பொருள்

  • சிறு புதர்
  • கூட்டம்
  • நல்ல நீரில் தவழும் ஒரு மீன் இனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே

.. சொற்பிரிவு ..

செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்
செல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை
செற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த
செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.

விளக்க உரை

  • செற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அடுத்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அடுத்தல்

பொருள்

  • கிட்டல்
  • சேர்தல்
  • மேன்மேல் வருதல்
  • சார்தல்
  • ஏற்றதாதல்
  • அடைதல்
  • பொருத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கொடுத்தேனே யென்னைக் கொடுத்தவுடன் இன்பம்
மடுத்தேனே நீடூழி வாழ்ந்தே – அடுத்தேனே
பெற்றேனே பெற்றுப் பிழைத்தேனே சன்மஅல்லல்
இற்றேனே ஏழைஅடி யேன்.

தாயுமானவர்

கருத்து உரை

அறிவில்லாத ஏழையாகிய என்னை, நின் திருவடிக்கு அடிமையாகக் கொடுத்துவிட்டேன்; அவ்வாறு என்னை ஒப்புவித்தவுடன் இறவாமல் இருக்கும் பேரின்பம் எய்தி, நீண்ட காலம் வாழ்ந்தேன்; திருவருளால் பெறவேண்டியவை அனைத்தும் பெற்று கடைத்தேறினேன்; பிறவிப்பெருந்துன்பம் சிறிதுமின்றி நீங்கினேன்.

விளக்க உரை

  • அறிவில்லாத நின் கருணையை உணர்த்தியும் அதை அறிய இயலாதவன் எனும் பொருளில் / கால தாமதாக உணர்ந்த பொருளில்
  • ஏழை – அருளைப் பெறாதவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மைஞான்ற

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மைஞான்ற

பொருள்

  • கரிய நிறம் வழிவது போலத் தங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பதினோராம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்

கருத்து உரை

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய பெருமானாக நிற்கும் நீ, வானோர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்தாய்; யான் இவ்வுலகில் பிறந்து (அறியத் தக்கவற்றை அளிக்கும்) மொழியினை பயின்று பின் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?

விளக்க உரை

  • பயின்ற பின் – பயின்று நன்கு உணர்ந்த பிறபட்டக் காலம்
  • சேர்ந்தேன் – தமது ஞானத்தின் இயல்பாக இறை அருளினால் துணையாக அடைந்தேன்
  • எஞ்ஞான்று தீர்ப்பது – அதனை அறியவில்லை எனும் பொருளில். அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்னும் பொருள் பற்றி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை, 2. தூய உடம்பு உடைமை, 3. இயற்கை உணர்வு உடைமை, 4. முற்றுணர்வு உடைமை, 5. இயல்பாகவே பாசமின்மை, 6. பேரருள் உடைமை, 7. முடிவில் ஆற்றல் உடைமை, 8. வரம்பில் இன்பம் உடைமை.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – கராம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கராம்

பொருள்

  • ஒருவகை முதலை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனைஅன் றேவிக் கராங்கொண்ட – பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தங்
கரணம்போல் அல்லாமை காண்.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

கருத்து உரை

பாலை நிலம் நெய்தல் நிலமாகப் ஆகும்படி பாடிய திருஞானசம்பந்தர் தன்மையையும், பாம்பு விடந்தீரும்படிக்குப் பாடிய திருநாவுக்கரசர் தன்மையையும், முன்பு முதலை விழுங்கின சிறுபிள்ளையுடைய மரணத்தைப் பின்பு காலனையே வருவித்து தீர்த்த சுந்தரர் தன்மையையும் அறிந்து, அவர்கள் மானிட உருவத்தை உடையவர்களாக இருந்தாலும், அவர்களின் செயல்கள் யாவும் இறைவனின் திருவருள் பெற்றதால் இறை செயலால் நிகழ்ந்தவை ஆகும் என்பதைக் காண்.

விளக்க உரை

  • இப்பாடலின் மூலம் மூவர் முதலிகள் பாடல்கள் பசுகரணப் பாடல்கள் அல்ல, அவை பதிகரண நிலையில் இருந்து பாடப்பட்டவை என்பதை உணர முடியும். எனவே அப்பாடல்கள் வேதம் என்பது பெறப்படும்.
  • திருநனிபள்ளி – பாலை நிலம் நெய்தல் நிலமானது (திருஞானசம்பந்தர் பதிகம்), திங்களூர் – அப்பூதியடிகளின் மகன் அரவ நஞ்சு நீங்கியழிந்து பிழைத்தது (திருநாவுக்கரசர் பதிகம்), திருப்புக்கொளியூர் (அவினாசி) – முதலைவாய்ப்பட்ட சிறுவன் பல்லாண்டுகள் தாண்டி மீண்டது (சுந்தரர் பதிகம்) . அருளாலர்களின் செயல்கள் பல இருக்க இந்த வரலாற்றை எடுத்துக் கொள்ளக் காரணம் இயற்கைக்கு மாறானவைகள் இறை அருளால் நிகழ்த்தப்படும் என்பதை வெளிப்படுத்தவே.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அந்தரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அந்தரம்

பொருள்

  • வெளி
  • உள்வெளி
  • இருள்
  • ஆகாசம்
  • நடு
  • இடம்
  • இடுப்பு
  • நடுவுநிலை
  • தேவலோகம்
  • பேதம்
  • விபரீதம்
  • தீமை
  • கூட்டம்
  • முடிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மந்திரம் ஒன்றறியேன் மனை
  வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
  சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
  கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

நெஞ்சமே, அடியேன் ஆகிய யான், மந்திரங்களை ஓதுதல் செய்யாதவன்; இல்வாழ்க்கையில் மயங்கியவன்; அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களால் அலங்கரித்துக் கொண்டவன்;  இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு குற்றம் உடைய தொண்டன்; எனக்கு திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்தில் செல்லும் அழகுடைய யானை ஊர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – சீயன்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  சீயன்

பொருள்

  • திருமால்
  • செல்வன்
  • மூன்றாம் பாட்டன் / குரு
  • ஒரு நாடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே

சொற்பிரிவு

சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்
சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

பார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்?

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மத்தம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மத்தம்

பொருள்

  • களிப்பு
  • மயக்கம்
  • யானைமதம்
  • பைத்தியம்
  • செருக்கு
  • ஊமத்தஞ்செடி
  • எருமைக்கடா
  • குயில்
  • மத்து

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காணும் உபகாரத்தின் பயன் எது?
உயிரின் அறிவிச்சை செயல்கள் பொருளுடன் கலத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஆகம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  ஆகம்

பொருள்

  • உடல்
  • மார்பு
  • மனம்
  • சுரை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

உடலாகிய திருமேனியில் எலும்பு, தோல் முதலியவைகளை விரும்பிப்பூண்ட ஆதி வயிரவர் மேற்கூறியவற்றுடன் சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். அதோடு தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.

விளக்க உரை

  • வயிரவரது உருவ அமைப்பும், கையில் உள்ள படைக்கலம் முதலியவைகளும் கூறப்பட்டன.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் வேறாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காட்டும் உபகாரம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – புன்மை

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  புன்மை

பொருள்

  • சிறுமை
  • இழிவு
  • இழிசெயல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே;

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

உயிர்களுக்கு நன்மைகளை எல்லாம் செய்ய வல்லவனும், அனைத்து உயிர்களையும் ஒன்றாக நோக்கும் நடுவு நிலையாளனும், இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் இழிவு உண்டாகும் பொய்மையாக இன்றி, உண்மையாக விரும்புங்கள்; அவ்வாறு விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, ‘இவ்வுயிர் யாது’ எனச் சிறப்பாக நோக்கி, உம்முடைய குற்றங்களை நீக்கி, இயற்கையாகச் செய்து அத் தொடக்க நிலையில் இருந்து பின்னும் தொடர்ந்தே நிற்பான்.

விளக்க உரை

  • மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது என்பது பற்றி கூறப்படும் பாடல்.
  • தொன்னிலை – அனாதி நிலை; உண்மையியல்பு (பொய்யாது நாடுதல் இல்லாமல் வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை – பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை – பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை)
  • இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.

[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]

அடுத்து வரும் மந்திரம், `தொடர்ந்து நின்றான்` எனத் தொடங்குதலாலும், தருமை ஆதினப் பதிப்புகளிலும் இப்பாடலே காணப்படுவதால் இப்பாடமே கொள்ளப்பட்டது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உடனாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காணும் உபகாரம்

Loading

சமூக ஊடகங்கள்