‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – மத்தம்
பொருள்
- களிப்பு
- மயக்கம்
- யானைமதம்
- பைத்தியம்
- செருக்கு
- ஊமத்தஞ்செடி
- எருமைக்கடா
- குயில்
- மத்து
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காணும் உபகாரத்தின் பயன் எது?
உயிரின் அறிவிச்சை செயல்கள் பொருளுடன் கலத்தல்