‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – செற்றை
பொருள்
- சிறு புதர்
- கூட்டம்
- நல்ல நீரில் தவழும் ஒரு மீன் இனம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்
செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்
செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த
செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே
.. சொற்பிரிவு ..
செற்றை வரும் பழனம் சோலை இஞ்சி திகழ் வரை மேல்
செல் தை வரும் பழநிக் கந்த, தேற்றிடு, நூற்றுவரை
செற்று ஐவரும் பழநாடு ஆள நாடி கண் சேய் விடுத்த
செற்றை வரும் பழமாம் கூடு வேம் அத்தினத்தில் வந்தே
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து உரை
செற்றை எனும் மீன்கள் நீந்தும் வயல்களும், பூஞ்சோலைகளும், மதில்களும் திகழ்கின்ற மலையின் மேல் மேகக் கூட்டம் தவழ்கின்ற பழநி மலை ஆண்டவனே, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் புராதனமான ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என மனதில் நினைத்து, அப்படியே செய்த கிருஷ்ணனின் நேத்திரம் எனும் (வல) கண்ணாகிய சூரியனின் மைந்தனாகிய எமன் அனுப்பிய தூதர் கூட்டம் வந்தடையும் இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற அந்த கடைசி நாளில் எழுந்தருளி எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று.
விளக்க உரை
- செற்றை வரும்பழ – செற்றை வரும் / செல் தை வரும்/ செற்று ஐவரும் எனும் சொல் பிரிவுகளுடன் அதற்கான விளக்கமும் காண்க.