‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – சீயன்
பொருள்
- திருமால்
- செல்வன்
- மூன்றாம் பாட்டன் / குரு
- ஒரு நாடு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவித்தரத்தோல்
சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்
சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்
சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே
சொற்பிரிவு
சீயன் நம் பொதி என வாய் புதைத்து செவி தர தோல்
சீய நம்பு ஓதிய மலையின் தாதை சிறு முனிவன்
சீயன் அம்போதி கடைந்தான் மருகன் செப்ப திகைத்தார்
சீ அனம் போதில் அரன் ஆதி ருக்கு என் செயக் கற்றதே.
கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்
கருத்து உரை
பார்வதியினை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் ‘நமக்கு உபதேசம் செய்வாய்’ என்று கேட்டு பணிவுடன் வாயை மூடிக்கொண்டு காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும் கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய பொதிக மலைக்கு தலைவனாகிய அகத்திய முனிவனின் குருவானவரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின் மருகனாகிய குமரக் கடவுள் அப்போது உபதேசம் செய்ய, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும் மிகவும் இழிவு தர தக்கதாகிய பிரம்மன் திகைத்து பழமையான வேதத்தை எதற்காக கற்றுக் கொண்டான்?