‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – நிருத்தம்
பொருள்
- நடனம்,
- நிர்த்தம்
- நிருத்தியம்
- வரிக்கூத்துவகை
வாக்கிய பயன்பாடு
இந்த கோயில்ல என்னா விஷேசம் சாமி?
எல்லா இடத்தலையும் ஒவ்வொரு பேர்ல கணபதி இருப்பர், இங்க நிருத்த கணபதி, அழகா, ஆடுறவா எல்லாரையும் நான் ஆட்டிவைப்பேன்னு சொல்ற மாதிரி ஒரு கால தூக்கிவச்சிண்டு ஆடுற அழகே தனின்னா, போங்கோ, போய் சீக்கிரம் பாருங்கோ, நட சாத்தப்போறா.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இத்தரணி மீதிற் …… பிறவாதே
எத்தரொடு கூடிக் …… கலவாதே
முத்தமிழை யோதித் …… தளராதே
முத்தியடி யேனுக் …… கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் …… குருநாதா
சத்தசொரு பாபுத் …… தமுதோனே
நித்தியக்ரு தாநற் …… பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
கருத்து உரை
உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே! ஓங்காரமாகிய சப்த வடிவிலே திகழ்பவனே! புதிய அமிர்தம் போன்றவனே! தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே! என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே! ஆடலில் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே! இந்தப் பூமியில் இனி பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக்கலந்து கொள்ளாமலும், முத்தமிழை ஓதியும் அதன் பொருள் அறியாமல் தளர்ந்தும் இருக்கும் எனக்கு முக்திநிலையை தந்தருள வேண்டுகிறேன்.
விளக்க உரை
- முத்தமிழை யோதித் …… தளராதே – இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும் எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. இயல் தமிழ் அறிவால் அறியக்கூடியது என்றும், இசைத் தமிழ் அறிவு, செவி ஆகிய இரண்டால் அறியக்கூடியது என்றும், நாடகத் தமிழ் அறிவு, செவி மற்றும் விழி ஆகிய மூற்றாலும் அறியக்கூடியது என்றும் பொருள் தரவல்லது. அஃதாவது தமிழ்மொழி மந்திரத்துடன் தொடர்புடையது என்பதால் மேலே குறிப்பிட்டபடி ஒதாமல் உணரவேண்டும் எனும் பொருளில் இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.
- தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆடஎனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது.