‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – புன்மை
பொருள்
- சிறுமை
- இழிவு
- இழிசெயல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே;
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
உயிர்களுக்கு நன்மைகளை எல்லாம் செய்ய வல்லவனும், அனைத்து உயிர்களையும் ஒன்றாக நோக்கும் நடுவு நிலையாளனும், இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் இழிவு உண்டாகும் பொய்மையாக இன்றி, உண்மையாக விரும்புங்கள்; அவ்வாறு விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, ‘இவ்வுயிர் யாது’ எனச் சிறப்பாக நோக்கி, உம்முடைய குற்றங்களை நீக்கி, இயற்கையாகச் செய்து அத் தொடக்க நிலையில் இருந்து பின்னும் தொடர்ந்தே நிற்பான்.
விளக்க உரை
- மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது என்பது பற்றி கூறப்படும் பாடல்.
- தொன்னிலை – அனாதி நிலை; உண்மையியல்பு (பொய்யாது நாடுதல் இல்லாமல் வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை – பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை – பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை)
- இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]
அடுத்து வரும் மந்திரம், `தொடர்ந்து நின்றான்` எனத் தொடங்குதலாலும், தருமை ஆதினப் பதிப்புகளிலும் இப்பாடலே காணப்படுவதால் இப்பாடமே கொள்ளப்பட்டது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
இறைவன் உடனாய் நின்று உதவுவது என்ன உபகாரம்?
காணும் உபகாரம்