‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – சுணங்கன்
பொருள்
- நாய் போலத் திரிபவன்
- இழிந்தோன்
வாக்கிய பயன்பாடு
ஏண்டா, எப்பவும் சொணக்கமாவே இருக்க, எப்படித்தான் கரை சேரப் போறீயோ?
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து
பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த
தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில்
உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன்
என்னினும் காத்தருள் எனையே.
திருஅருட்பா – வள்ளலார்
கருத்து உரை
புலால் விற்கும் கடைகளில் தலையைத் தாழ்த்திக் கொண்டு, அலைந்து கொண்டு சிறு இறைச்சி துண்டங்களைப் பொறுக்கி உண்ணும் நாய் போன்றவனாகிய யான், பொருளை வாங்கி ஊருக்குள் கொண்டுவந்து விற்போருடைய உழைப்பையும் வாழ்வையும் எண்ணாது விலையை மதியாது இரக்கமின்றிக் குறைத்து விலை பேசி விலையை மட்டும் குறியாகக் கொண்டு இரக்கமில்லாத தீயவனாகவும், ‘இது கேடில்லை செய்க’ எனத் தீயவர் உடனிருந்து கூறிய கொடிய செயல்களை மேற்கொண்டு, பலகாலும் முயன்ற மனத்தவனாய், எனக்கு ஒப்பாரில்லை என்று அகம்பாவம் கொண்டிருந்த குற்றம் உடையவனாயினும் என்னைக் காத்தருள்க.
விளக்க உரை
- புலைவிலைக் கடையில் தலை குனிந்து அலைந்து பொறுக்கிய சுணங்கன்” -. சிதறுண்டு ஒழியும் இழிபொருள்களையும் அலைந்து பெறும் கீழ்மக்கள் இயல்பை குறிப்பது
- தலைவிலை – பொருள் விளையுமிடத்து அமையும் விலை
- கடைவிலை – விற்பனையாகுமிடத்து விலை
அனைத்தும் குருவருள்
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏😊