‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – உறுவித்தல்
பொருள்
- பொருத்துதல்
- நுகர்தல்
- மிகுவித்தல்
- அடைந்து நீராடச் செய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ் வினை
அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர் பேரெயில் ஆளரே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான், அந்த வில்லினில் நாணேற்றப்பட்ட அம்பினைக் கொண்டு மூன்று கோட்டைகளையும் அழித்தவர். அவர் தனது அடியார்களை, பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடச் செய்து அதன் காரணமாக நற்பயன்களை அடையுமாறு செய்து அவர்களது ஊழ்வினைகளை அறுப்பதோடு மட்டும் இன்றி சிவஞானத்தை அளிக்கும் நல்வினைகளை மேற்கொண்டு ஒழுகச் செய்து பின் அவர்கள் பல விதமான நன்மைகள் பெறுமாறு செய்கின்றார்; இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகிறார்.