‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – விடாய்த்தல்
பொருள்
- வேட்கையுறுதல்
- களைப்படைதல்
- விரும்புதல்
- செருக்குக்கொள்ளுதல்
வாக்கிய பயன்பாடு
ரொம்ப விடாய்க்காத, காலம் இப்படியே போவாது
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து உரை
பசுக்கள், அரிசி கழுவிய நீராகிய கழுநீரை உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லாது; அக் கழுநீரையே விரும்பி ஏற்றுக் கொண்டு உடல் மெலியும். அத்தன்மையான அப்பசுக்கள் தம் இயல்பில் இருந்து மாறுவது இல்லை. வளமையுடைய பருகும் பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே என்பதை அறியாதவர்கள் கள்ளின் சுவையை நினைத்துக் கள்ளுண்ணும் மக்கள் தம் இயல்பில் இருந்து நீங்கியவர்கள் ஆவார்.
விளக்க உரை
- ‘கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா’ எனும் வரிகளால் கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும்.