‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – சவலை
பொருள்
- நோஞ்சான்
வாக்கிய பயன்பாடு
என்னடா நீ, இவ்வளவு சவலப் புள்ளையா இருக்க, நா எல்லாம் உன்ன மாதிரி இருக்கச்ச எப்டி இருந்தேன் தெரியுமா?
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தாயாய் முலையைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
உயிர்கட்கு எல்லாம் தாயாய் நின்று பாலூட்டுதலை செய்வோனே! அவ்வாறு தாராவிடின் நாயேன், தாய் இருந்தும் அவள் பாலை உண்ணப் பெறாத பிள்ளை ஆகிய சவலையாய் வீணாய்ப் போவது முறையோ? அண்ணலே! இனியாவது அருளமாட்டாயா; உன்னைத் தாயே என்று கருதி உன் திருவடியை அடைந்தேன். நீ என்னிடத்து கருணையுடையவனாய் இல்லையா? நாய் போன்ற யான் அடிமையாக உன்னுடன் இருக்கும்படி முன்பு ஆண்டாய்; இப்பொழுது நான் வேண்டுவதில்லையோ?