வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – சிவாய நம என்று ஓதாமல் அவன் அருள் பெறல் இயலாது எனக் கூறும் பாடல்.
பதவுரை
மெய்யுணர்வு இல்லாத அறியாமையை உடைய மனமே! நமக்கு என்று எக்காலத்திலும் காவலாகவும், அரணாகவும், புதையல் போன்ற பொருளாகவும் இருப்பவன் சிவபெருமானே என்று உணர்ந்து, அவனை மனத்தில் தியானித்து, மனத்தை ஒருவழிப்படுத்தி ‘சிவாய நம’ என்று திரு ஐந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தல் அல்லாது, செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனும், குருவாகவும், முனிவனாகவும், உயர்ந்தவனாகவும் இருக்கும் அவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ?
கருத்து – ஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உடன்பிறந்த சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.
விளக்கஉரை
உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
தோன்றாத்துணை – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
அல்லல் என் செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.
விளக்கஉரை
அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்
கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.
பதவுரை
முதற்கடவுளாகவும், அனைவருக்கும் மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.
விளக்கஉரை
அங்கம் – உடம்பு
மண்ணுக்கு ஆக்கி – புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு, உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக எண்ணுதல் சைவ மரபு .
கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது
பதவுரை
முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.
இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
வெம்ப – நாம் வருந்தும்படி.
வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
கூற்றம் – அஃறிணை சொல். அது பற்றி `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற
செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.
மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.
வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்கஉரை
நடலை – துன்பம்
சுடலை – இடுகாடு
ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்
மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
செல்வத்தையே தேடுவதன் பொருட்டு, மனம் செருக்குற்று, நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணம் அற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியை உறைவிடமாக கொண்டவன் திருவடியினை சேர்வீராக.
விளக்கஉரை
மாடு – செல்வம்
நும்முளே – உங்களுக்குள்
கூடு – உடல்
செல்வம் தேடுதலில் மகிழ்ந்து எனவும், பொய் பேசுவதால் உள்ளுக்குள் மகிழ்வு கொண்டு எனவும் கொள்ளலாம்.
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்; அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.
விளக்கஉரை
மனன் ( மன்மதன் ) பாறை
மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.
பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்கஉரை
கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.
திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான், அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி பிச்சை ஏற்றவர் ஆவார்.
ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய், பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.
தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன் ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.
நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம் உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன் அடியார்கள் முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும் ஆவான்.
விளக்கஉரை
பண் : காந்தாரம்
* நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
விச்சு, விச்சது – வித்து
சாத்தி – சார்த்தி
முரசு – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது
முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*, வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
விளக்கஉரை
*கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தாட வுடுக்கையன் – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.