அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 8 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முழவு

ஒவியம் - tamillexion

பாடல்

பண்ணேர்மொழி யாளையொர் பங்குடையாய்
     படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணார்அகி லுந்நல சாமரையும்
     அலைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார்முழ வுங்குழ லும்மியம்ப
     மடவார்நட மாடு மணியரங்கில்
விண்ணார்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
     விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே

தேவாரம் – ஏழாம் திருமுறை –  சுந்தரர்

பதவுரை

இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும்,  குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.

விளக்க உரை

  • தண்மை –  மனம் குளிர்தலைக் குறிக்கும்
  • முழவு
  1. முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
  2. இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
  3. வேறு பெயர் – மிழாவு (கேரளா)
  4. மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
  5. ‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 3 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கொக்கரை

புகைப்படம் :  முத்தமிழ் வலைக்காட்சி

பாடல்

கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பரா ரூரரே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து  கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர  ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன்  ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய  ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.

விளக்க உரை

  • கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி முதலியன இறைவனது திருக்கூத்திற்கு முழங்கும் பக்கவாத்தியங்கள்.
  • ஒக்க ஆடல் உகந்து – ஒருசேர அவைகளும் தன்னோடு ஆடுதலை விரும்பி
  • அக்கு – சங்குமணி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 2 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : முரசு

ஓவியம் : Wikipedia

பாடல்

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த
அரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம்  உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம்  மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய  தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன்  அடியார்கள்  முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும்  ஆவான்.

விளக்க உரை

  • பண் : காந்தாரம்
  • * நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
  • விச்சு, விச்சது – வித்து
  • சாத்தி – சார்த்தி
  • முரசு  – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
  1. வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
  2. தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
  3. நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 28 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிண்கிணி

 

ஓவியம் : Wikipedia

பாடல்

தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*,  வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.

விளக்க உரை

  • *கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • தாட வுடுக்கையன்  – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 26 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : கிணை

ஓவியம் : shaivam.org

பாடல்

தக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்
பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்
அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது  நீர்,  ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’  ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.

விளக்க உரை

  • தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா – வாத்தியக் கருவிகள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 25 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : இடக்கை

ஓவியம் : shaivam.org

பாடல்

கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே

தேவாரம் – மூன்றாம் திருமுறை –  திருஞானசம்பந்தர்

பதவுரை

கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, இடக்கை, படகம் முதலிய இசைக்கருவிகள் ஒலிக்கக் கூடியதும், தேவர்கள் துதிக்க, அதன் தாளத்திற்கேற்பத் திருத்தாளை ஊன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்து அருளக்கூடியதும், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்தர்களும் நெருங்கி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும் இடம் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • உலப்பு இல் – அளவற்ற.
  • எத்தனை கருவித்திரள் – எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள்.
  • இமையோர்கள் – தேவர்கள்.
  • பரச – துதிக்க.
  • உகளுதல் – துள்ளிக் குதித்தல்

இடக்கை

  • பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர்.
  • கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் இதுவும் ஒன்று.
  • இடக்கையின் இரு முகங்கள் –  ஒன்று ஜீவாத்மா, மற்றொன்று பரமாத்மா

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 21 (2018)

இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)

 

புகைப்படம் : விக்கிப்பீடியா

பாடல்

துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • துடி – உடுக்கை
  • புறங்காடு – சுடுகாடு
  • பாணி – தாளம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 20 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : உடுக்கை ( பிற பெயர்கள் – இடை சுருங்கு பறை, துடி)

புகைப்படம் : விக்கிபீடியா

பாடல்

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் டீரநல்கும் பல்லவ னீச்சரமே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம்  சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு  நடனம் புரிபவராகவும், அடியவர்களின்  துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.

விளக்க உரை

  • உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 19 (2018)

பாடல்

ஆனை உரித்தபகை அடி
     யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
     யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
     செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
     தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

யான்,  புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில்  வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து  வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து  அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.

விளக்க உரை

  • வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
  • ஒள்ளி – செம்பொன், சுக்கிரன், வெள்ளி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 12 (2018)

பாடல்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
     நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
     அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
     இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
     எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும்,  நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன  சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும்,  அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான  திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

விளக்க உரை

  • பண் : யாழ்முறி
  • மடப்பிடி – பெண் யானை
  • புன்னை –  நெய்தல் சார்புடையதல் பற்றி
  • திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 7 (2018)

பாடல்

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும்,  பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

விளக்க உரை

  • கொழும் பொடி – வளப்பமான விபூதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)

பாடல்

கரந்தை கூவிள மாலை
     கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
     வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
     திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
     வல்வினை நலியஒட் டாரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

திருத்தமான மாடங்கள் உடையதும்,  உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய  கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும்,  திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.

விளக்க உரை

  • மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமுருகன்பூண்டி

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருமுருகன்பூண்டி

  • முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தி
  • சிவன் மற்றும் அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி திருக்காட்சி. மூலவர் மற்றும் அம்பாள் பீடங்களின் கோமுகமும் வடக்கு நோக்கிய வித்தியாசமான அமைப்பு
  • சூரசம்ஹாரத்தால் உண்டான பாவங்கள் நீங்க முருகப்பெருமான் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டத் தலம்
  • சண்முகநாதர் கையில் வேல் இல்லாமலும், வாகனமான மயிலும் இல்லாமலும் திருக்காட்சி
  • சேரமான் பெருமானின் சிறப்பு விருந்தினராக சென்று பொன்னும் பொருளுடன் திரும்பியபோது கூப்பிடு விநாயகர் கோவிலில் இரவைக் கழித்த சுந்தரரிடமிருந்த பரிசுப் பொருட்களைத் தன் பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பிக் கொள்ளையடிக்கச் செய்ததால், உதவியை நாடிய சுந்தரரருக்கு சிவன் தான் குடிகொண்டிருந்த இடத்தைச் சுட்டிக் காட்டி உதவினார் விநாயகர்; சுந்தரரரும் அங்கு சென்று  சிவனைத் திட்டிப் பாட அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கிய தலம்.
  • சிவனார் இருக்குமிடத்தை சுந்தரருக்கு உணர்த்திய ‘கூப்பிடு விநாயகர்’ தனியாக பாறைமேல் திருக்காட்சி (அவிநாசியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • வில்கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள்; பரிசுப்பொருள்களை பறிகொடுத்த நிலை மற்ரும் பறிகொடுத்த பொருள்களை மீண்டும்  பெற்றநிலை என  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்
  • இங்குள்ள தல விருட்டமான மாதவி மரம் எனும் குருக்கத்தி மரம் துர்வாசர் மேலுலகில் இருந்து எடுத்துவந்தது
  • பிரம்மதாண்டவம் என போற்றப்படும் நடராஜரின் தாண்டவ வடிவம்
  • பிரம்மஹத்தி தோஷத்தை போக்கவல்ல தலம்.
  • தலபுராணத்தின் படி பிரம்மஹத்தி தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படி முருகர் சந்நிதியின் அருகே உள்ள சதுரகல்லாக உள்ளது
  • கோயிலுக்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலின் எதிரில் உள்ள பாறையில் உள்ள சிறுகுழியில் 12 வருஷங்களுக்கு ஒருமுறை நீர் பொங்குவது சிறப்பு
  • மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி
  • தலபுராணம் செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடப்பட்டது

 

 

ஓவியம் : Vishnu Ram
தலம் திருமுருகப்பூண்டி
பிற பெயர்கள் மாதவிவனம் , முல்லைவனம் , கந்தமாபுரி
இறைவன் முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி
இறைவி முயங்குபூண் முலையம்மை, ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை , ஆவுடை நாயகி , மங்களாம்பிகை
தல விருட்சம் குருக்கத்தி மரம் , வில்வமரம்
தீர்த்தம் சண்முக தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் மற்றும் ஞான தீர்த்தம்
விழாக்கள் தை மாதத்தில் வேடுபரி உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், மகா சிவராத்திரி , திருக்கார்த்திகை , மார்கழி ஆருத்ரா தரிசனம் , ஐப்பசி அன்னாபிஷேகம் , கந்தசஷ்டி , தைப்பூசம் , நவராத்திரி , வைகாசி விசாகம்
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை ௦6:௦௦ முதல் 12:3௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:௦௦ வரைஅருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில்,
திருமுருகன்பூண்டி – 641652. திருப்பூர் மாவட்டம்.
04296-273507, 94434-59074
வழிபட்டவர்கள் அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்
நிர்வாகம்
இருப்பிடம் அவினாசியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சுமார் 8 கிமீ தொலைவு, கோயம்புத்தூரில் இருந்து சுமார் 43 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 5

பாடல்

தயங்கு தோலை உடுத்துச் சங்கர
   சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
   மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
   முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!  நீர்  விளங்குகின்ற தோலை உடுத்தி,  சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியவில்லையா? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீர் என்றால், தழுவுகின்ற  அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும்  இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்         49
திருமுறை எண் 6

பாடல்

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
   கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
   குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
   கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
   எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே

பொருள்

எம்பெருமான் நீரே!, நீர் கொட்டிப் பாடுதற்கு உரிய  தாள அறுதிக்கு ஏற்ப விட்டு விட்டு ஒலிக்கின்ற  ‘கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா’ என்னும் வாத்திய கருவிகள் ஆகிய இவற்றை விரும்புவராய் உள்ளீர்; அதுமட்டும் அல்லாமல்  ஊரில் இருப்பவர்கள் இட்ட பிச்சையை ஏற்று உண்பீர்;  பலவகை அரும்புகள் அலர்ந்து மணம் கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 3 (2018)

பாடல்

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இறைவன் ஞான வடிவினன் என்பதை அறிதவர்களுக்கு மட்டுமே நற்பயன் கிடைக்கும்; அவ்வாறு இல்லாமல் க்ஷேத்திராடனம் என்பதன் பொருட்டு காடு மற்றும் நாடு சார்ந்த பகுதிகளில் மாறிமாறி திரிந்தாலும், அங்கங்கள் ஊனம் ஆகும் அளவிற்கு பெருந்தவம் செய்தாலும், ஊனுண்டலை விடுத்து, தத்துவ ஆராய்ச்சி ஆகிய ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டாலும் என்ன பயன் கிடைக்கக் கூடும்?

விளக்க உரை

  • ஈனம் – குற்றம்
  • இரும் – பெரிய

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 24 (2018)

பாடல்

அஞ்சினா லியற்றப் பட்ட வாக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினா லடர்க்கப் பட்டிங் குழிதரு மாத னேனை
அஞ்சினா லுய்க்கும் வண்ணங் காட்டினாய்க்கச்சந் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி யதிகைவீ ரட்ட னீரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பஞ்சகவ்வியம் எனப்படும் பசுவிலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும் சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானேஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுடலைப் பெற்று, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  ஆகிய வாக்குகளைக் கொண்டுஇவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக, அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன்.

விளக்க உரை

  • அஞ்சு – ஐம்பெரும் பூதம். ஸ்தூலதேகம் ஐம்பெரும் பூதமயம் எனப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

சைவத்திருத்தலங்கள் 274 – திருக்கருவூர்ஆனிலை

தலவரலாறு(சுருக்கம்) / சிறப்புகள்– திருக்கருவூர்ஆனிலை

  • மூலவர் சதுர வடிவ ஆவுடையார். சற்று சாய்ந்த கோலத்தில் திருக்காட்சி. சிவலிங்கத் திருமேனியின் இருபுறமும் பசுவின் குளம்புபட்டது போன்ற பள்ளங்கள் போன்ற தோற்றம்.
  • இரண்டுஅம்பாள் சந்நிதிகள். 1. பழமையான கிழக்கு நோக்கியுள்ள அலங்காரநாயகி அம்மை 2. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட சௌந்தரநாயகி அம்மை
  • காமதேனு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம்.
  • தைப்பூச தினத்தன்று சிவனாருடன் ஐக்கியமான கருவூர்த் தேவரின் சமாதிக் கோயில் தனியாக தெற்குப் பிரகாரத்தில்
  • பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு
  • எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தியது கோயில் சந்நிதி வீதிக்கு கிழக்கில் நான்கு வீதிகள் கூடுமிடத்தில்
  • புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டத் தலம்
  • எறிபத்த நாயனார் பிறந்த தலம்
  • சிவகாமியா அம்மாள் வாழ்ந்து தொண்டு செய்தத் தலம்
  • திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்ததலம்
  • கருங்கல்லால் ஆன கொடிமரம்
  • திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூல் கருவூர் மான்மியம். இது யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
தலம் திருக்கருவூர்ஆனிலை
பிற பெயர்கள் கருவூர் , திருக்கருவூர், கற்பபுரி
இறைவன் கல்யாணபசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்,பசுபதி, ஆனிலையப்பர்
இறைவி அலங்காரவல்லி,கிருபாநாயகி , சௌந்தரநாயகி
தல விருட்சம் வில்வமரம் , சீந்தில் கொடி,  ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று அழைக்கப்படும் வஞ்சி மரம்.
தீர்த்தம் பிரம்மதீர்த்தம் , அமராவதி ( ஆம்பிரவதி ) ஆறு
விழாக்கள் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம், மார்கழித் திருவாதிரை உற்சவம்
மாவட்டம் கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணிமுதல் மதியம் 11:00 மணிவரை
மாலை 4:00 மணிமுதல் இரவு 8:00 மணிவரைஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர், கரூர் மாவட்டம். PIN – 639001
04324-262010 , 99940-12617
வழிபட்டவர்கள் வியாசர், தேவர்கள், சுக்கிரன், , பிரம்மன், திக்குப்பாலர்கள், காலவமுனிவர், முசுகுந்த சோழ மன்னன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், கருவூர்த்தேவர் ( திருவிசைப்பா ), அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருச்சியில்இருந்துசுமார் 75 கிமீ தொலைவு; ஈரோட்டில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவு
இதரகுறிப்புகள் தேவாரத்தலங்களில் 211 வதுதலம்
கொங்குநாட்டுத்தலங்களில் 4 வதுதலம்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 3

பாடல்

விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே

பொருள்

ஆகாயத்தில் உலாவும் மதியைச் சூடியவராகவும். வேத கானம் எனப்படும் சாமகான இசையாக விளங்குபவராகவும். மேலான எண்குண பண்பை உடையவராகவும், உயிர்களுக்குக் கண்ணாயிருப்பவராகவும், அடியவர்கட்கு நல்லவர் எனும் திருப்பெயருடன் விளங்குபவராகவும். கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவர்.

விளக்க உரை

கண்ணு ளார் – கூத்து நிகழ்த்துபவர்

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை        1
பதிகஎண்          28
திருமுறைஎண் 8

பாடல்

கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே

பொருள்

கருவூர் ஆனிலையில் விளங்கும் ஈசன்,  பெரியவனாகவும், வாளோடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் தலை, தோள் ஆகியவற்றைத் தன் திருத்தாளினால் அழுந்தும்படி செய்து அவன் வருந்துமாறு செய்து பின் அவனுக்கு அருள் கொடுத்தவனாகவும், கூத்தனாக விளங்குபவன்.

விளக்க உரை

கடுத்த – கோபித்த
தாள் – திருவடி
அடர்த்தல் – நெருக்குதல், அமுக்குதல், வருத்துதல், போர் புரிதல், தாக்குதல்
கொல்லுதல், கெடுத்தல்

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!