பாடல்
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
ஆவ டுதுறை ஆதிஎம் மானே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல் ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம் எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து, உன்னை வந்து அடைந்தேன்! என்னை ஏற்று கொண்டு அருள்.
விளக்க உரை
- சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
- சிலந்தி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
- தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்