
பாடல்
மூலம்
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன் கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே
சொற்பிரிப்பு
சூலம் பிடித்து எம பாசம் சுழற்றித் தொடர்ந்துவரும்
காலன் தனக்கு ஒருகாலும் அஞ்சேன்; கடல்மீது எழுந்த
ஆலம் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலும் திருக்கையும் உண்டே நமக்கு ஒரு மெய்த்துணையே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானின் வேலாயுதம், திருக்கரமும் துணையாக இருப்பதால் சூலாயுதத்தையும், பாசக் கயிற்றை கொண்டு வரும் காலனுக்கு அஞ்சமாட்டேன் எனும் பாடல்.
பதவுரை
பாற்கடலை கடையும் போது தோன்றிய ஆலகால விடத்தை உண்டு உயிர்களை காத்து அருளிய சிவபெருமானின் திருக்குமாரனாகிய ஆறுமுகப் பெருமானுடைய வேலாயுதமும், அபயம் அளிப்பதான திருக்கரமும் நமக்கு ஒப்பற்ற உண்மைத் துணையாக உளதால் சூலாயுதத்தைக் கையில் பிடித்துக் கொண்டும், பாசக் கயிற்றைச் சுழற்றிக் கொண்டும் உயிர்களைப் பின்தொடர்ந்து வந்து அவர்களின் உயிர்களை எடுக்க வருகின்ற காலனுக்கு அடியேன் ஒருபோதும் அஞ்சமாட்டேன்.