பெரும்பற்றப் புலியூரான் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; கங்கையைத் தாங்குகின்ற நீண்ட சடையை உடையவன்; காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் விரும்பி அருளுபவன்; பொருள் இல்லாதவராகிய வறியவருக்கும், துன்பத்தினால் வருந்தி தன்னை தாங்குவார் எவரும் இலர் என வருந்துபவருக்கும் அருள் செய்பவன்; திருவாரூரிலும் விரும்பி தங்கியிருப்பவன்; தன்னைத் தவிர வேறு எவராலும் தனக்கு ஒப்பிட இயலாதவன்; வானவர்கள் எனப்படும் தேவர்களால் எப்பொழுதும் வணங்கிப் போற்றப்படுபவன்; இவ்வாறான அந்தப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
விளக்கஉரை
கல்தானை – கல்லாடை; அஃதாவது காவியுடை எனப் பொருள் கொள்வாரும் உளர்.
மின்னலைப் போன்ற பற்களையுடையர்களும், எங்கும் பரவி இருப்பவர்களும் ஆகிய அசுரர்களின் புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்தவரும், காலங்களால் அளவிட முடியாதவரும், பழமையானவரும் சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில், அன்னத்தின் நடையை ஒத்த உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்து அருளுகிறார்.
விளக்கஉரை
திருப்பூந்தராய் எனும் இத் தலத்து பதிகங்களில் முப்புரம் எரித்த நிகழ்வும், உமா தேவியை பாகமாக கொண்டவரும் எனும் அமைப்பில் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் கட்டமைப்பில் இருக்கும் 8வது பாடல் இராவணன் பற்றியது என்பதும், 9வது பாடல் திருமால் மற்றும் பிரம்மாவால் வணங்கப்பட்டவர் என்பதும், 10 வது பாடலில் சமண, பௌத்த மதங்கள் மூலமாக அறிய இயலாதவர் எனும் அமைப்பில் இருந்தும் மாறவில்லை. அப்பாடல்களில் உமை ஒரு பாகனாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பந்தணைநல்லூர் தலத்தில் உறையும் சிவபெருமான், அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவர்; ஆதியானவராக இருப்பவர்; சூரியனாக இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் இருப்பவர்; அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமாகி தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து இயங்கும் ஞானஒளியை வடிவமாக உடையவர்; நிலைகலங்குதல் இல்லாத அழகிய தலையை உடையவர்; தூய திருநீறு அணிந்தவர்; தாமரை, முல்லை போன்ற மாலைகளை சடையில் சூடியவர்; குளிர்ந்த கண்களை உடைய காளை மீது ஏறி பிச்சை ஏற்றவர் ஆவார்.
மெய்ப் பொருளாய் இருப்பவனும்,திருமேனி எங்கும் வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடையில் முறிவித்தவனும்,படம் எடுத்து ஆடும் பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே!
விளக்கஉரை
‘காலன்’ – ‘காலத்திற்கு முதல்வன்’ . அதன் பொருட்டு காலன் காலம் அறுத்தான்.
‘காலனும் பிறிதோர் காலவயப்பட்டவன் ` என்பதும், ` அவன் தனக்குக் கீழுள்ள காலத்திற்கு முதல்வன் அயின பொழுதும், சிவபிரானது ஆணையாள் தான் முதலவன் ஆனான் அன்றித் தானே ஆயினான் அல்லன். அந்த முதன்மையை அளித்த முதல்வனது திருக்குறிப்பிற்கு மாறாய் நடந்ததால் , இடை முரிவிக்கப் பட்டான்` என்பதும் விளங்கும். இதனான் எல்லாவற்றையும் தன் விருப்பத்தின் வழியே செய்யும் முழுமுதற் கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது உணரப் பெறும்.
ஒற்றியூர்ப் பெருமானே! உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பானவைகளை நினைவு வைத்துக் வைத்துக் கொண்டு, இந்த உடம்பினைப் பயனற்ற வகையில் பேணி பாதுகாத்துக்கொண்டு, காம்பு இல்லாத அகப்பை கொண்டு முகக்கக் கருதியது போல, உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதவனாய், பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையானது, சடுதியில் தான் அழியப் போவதனை நினைவு கொள்ளாது வேறு பல நினைப்புகள் கொண்டது போல பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை காப்பாற்றி அடியேன் உய்யும் வண்ணம் காத்து அருளவேண்டும்.
மயக்கம் கொண்டு நெஞ்சமே! பாவம், துன்பம், தீ நாற்றமும் உடைய இந்த உடல் சார்ந்த இன்பங்கள், ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை; தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, வண்டு மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போலானது. இவ்வாறான நிலை இல்லாத உலகமும், அது சார்ந்த இன்பங்களையும் நுகர விரும்புகிறாய். தேவர்கள் தலை தாழ்த்தி பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூரில் வீற்றிருக்கும் முன்று கண்களை உடைய அடிகளைத் தொழுதால் உய்யலாம்.
விளக்கஉரை
உணவின் பொருட்டும், சுவைத்தலின் பொருட்டும் இன்பம் கொண்டாலும் அவை அனைத்தும் பின்னின்று வரும் துன்பத்தை அறியவிடாமல் செய்கின்றன என்ற பொருள் பற்றியது இப்பாடல்.
கொங்குநாட்டுத் திருத்தலங்களில் முதல் மூவராலும் பாடப்பெற்ற தலம்.
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் ஐந்து மணிகளில் வைரமணி இது (மற்றவை சிவப்புமணி திருவண்ணாமலை, மரகதமணி திருஈங்கோய்மலை, மாணிக்கமணி திருவாட்போக்கி, நீலமணி பொதிகைமலை)
மிகவும் குட்டையான திருமேனியும், சதுர வடிவும் ஆன ஆவுடையாரில் சிகர வடிவும், அகத்தியர் விரல் தழும்பும் கொண்ட திருக்காட்சியுடன் மூலவர்.
மூலவர், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கிய திருக்காட்சி
சுந்தரர் நமச்சிவாய திருப்பதிகம் பாடிய தலம்
பாண்டியமன்னனின் விரல்கள் வளர்ந்து அவனது குறைநீங்கிய தலம்
சித்திரை பௌர்ணமி தினத்தில் பரத்வாஜருக்கு சிவன் முயலகன் இல்லாமல் குஞ்சிதபாத நடராஜராக சதுர்முகதாண்டவக் கோலத்தில் காட்சியளித்த தலம்.
காவிரி கண்ட விநாயகர் சந்நிதி
திருவடியில் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு பதிலாக ஒரே ஒரு முனிவர் மட்டும் கொண்டு, ஜடாமுடி மற்றும் ரிஷபத்துடன் திருக்காட்சி கொண்ட தட்சிணாமூர்த்தி
திசை மாறியுள்ள மயிலுடன் கூடிய சுப்பிரமணியர் வடிவம்
தல விருட்சமான மிகப்பெரிய வன்னிமரத்தினடியில் பிரம்மா மூன்று முகங்கள் கொண்ட திருகாட்சி
பூக்கள் பூத்து, காய் காய்க்காது இருக்கும் வன்னி மரத்தின் பூக்கள், ஒருபக்கம் முள்ளுடனும் , மறுபக்கம் முள் இல்லாமலும் கொண்ட தோற்றம்; எத்தனை நாட்கள் நீரில் இட்டாலும் கெடாத தன்மையை தரும் வன்னிமர இலைகள்
கோரப்பற்களுடன் கூடியதும், வாலில் மணி கட்டப்பட்டுள்ளதும் ஆன ஆஞ்சநேயர்
காவிரியாற்றின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் விநாயகர் காக வடிவில் அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்து காவிரியை பெருகச் செய்த திருத்தலம்
பிரம்மன் வழிபட்ட தலமாதலால் பிரம்மபுரி
திருமால் வழிபட்டதால் அரிகரபுரம்
கருடன் வழிபட்டு தேவலோகம் சென்று அமுதம் கொண்டுவரும் வலிமைபெற்ற தலமாதலால் அமுதபுரி
காலை ௦6:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦8:3௦ வரைஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில்,
கொடுமுடி, ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம்.
PIN – 638151. 04204-222375
பாண்டிக்கொடுமுடி இறைவனானவர், இந்திரன் மற்றும் ஏனைய தேவர்கள் பலரும் போற்றி துதிக்குமாறு நிற்பவர்; மிக்க வலிமையை உடைய இராவணனை முதலில் வருந்துமாறு செய்து பின் அருள் செய்தவர்; கரிய நிறமுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு நிறுத்திய கண்டத்தினை உடையவர்; அகில், பல்வகைமணிகள் ஆகியவற்றை காற்றில் அடித்துக்கொண்டு வரும் காவிரியின் அருகில் உறைபவர்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 48
திருமுறை எண் 8
செம்மை நிறம் ஒத்த சடையை உடையவனே , திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்தவனே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள சோலைகளில் கிளைகளின் மேல் அமர்ந்து குயில்கள் கூவவும், சிறந்த மயில்கள் ஆடுகின்றதும் ஆன ‘திருப்பாண்டிக்கொடுமுடி’ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனாகிய சிவனே, உன்னை நான் மறந்தாலும், என் நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திருநீற்றுப்பச்சை என்றும் உருத்திரச்சடை என்றும் அழைக்கப் பெறும் கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும்படியான வளமை உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவனானவர், தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகிய கருவிகளுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர்; சுவாமி ஆன அவர் பல்வேறு கோலங்கள் கொண்டவர்; கண்ணால் காணும் காட்சிக்கும் அரியவர் ஆவார்.
விளக்கஉரை
காட்சியும், அதை அறிதலும் அரிது எனும் பொருள் பற்றியது
தண்ணுமை (மிருதங்கம்)
இது தோலால் ஆன, தாள வாத்திய வகையைச் சார்ந்த, கொட்டு இசைக்கருவி;
இதில் பல்வேறு சொற்களை வாசிக்க முடியும் என்பதால் இது ராஜ வாத்தியம்
‘மதங்கம்’ – பழந்தமிழ்ச் சொல் திரிந்து ‘மிருதங்கம்’ என்னும் வடமொழிச் சொல் ஆனது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படும். இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு உருளை வடிவினதாகவும் இருக்கும்
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
விளக்கஉரை
தண்மை – மனம் குளிர்தலைக் குறிக்கும்
முழவு
முழக்கம் என்ற சொல்லின் பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டது. குறுங்கம்பு கொண்டும் கைவிரலைக் கொண்டும் அடித்துத் தாளவிசை எழுப்பி செய்யும் கருவியாகும்
இது தோல் கருவி. இவை அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலை முழவு என ஏழு வகைப்படும்.
வேறு பெயர் – மிழாவு (கேரளா)
மண் மத்தளத்திற்கு பூசப்படுவது ( மார்ச்சனை )
‘ஈர்ந்தண் முழவு’, ‘மண்ணார் முழவு’, ‘முழவு மண் புலர’ போன்ற குறிப்புகள் மூலம் பன் நெடுங்காலம் முன் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும் உணரமுடியும். (ஆதாரம் – மத்தளவியல் நூல்)
தன்னோடு ஆடுதலை விரும்பியதும், கொக்கரை , குழல் , வீணை , கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்து கொண்டு பக்கவாட்டிலே நின்று கொண்டும் திறந்தவாயை உடையனவாகியதும், ஒருசேர ஆடுதலை விரும்பியதுமான பல பூதங்களுடன் ஒன்று சேர்ந்து சங்காரதாண்டவமாகிய ஆடுதலை உடைய கூத்தராய் சங்கு மணிகளையும், அரவை எனும் பாம்பினையும் அணிந்து இருப்பவர் திருவாரூர்ப் பெருமானாவர்.
நரியைக் குதிரையாக செய்விக்கும் சாமர்த்தியம் உடையவனும் (மாணிக்கவாசகர் வரலாறு), மும் மலங்களுக்கு உட்பட்டு பிறவி நீக்கம் பெறத் தன்மை இல்லா உயிர்களாகிய நரகர்களையும் தேவர்கள் ஆக்கும் வல்லமை உடையவனும்*, மல பரிபாகம் கொண்ட உயிர்கள் தாம் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப அவரவர்க்குப் பயன் அருளுபவனும், விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும், எம்பெருமானாகிய தியாகராசருக்கு உரியதும், தியாக முரசைத் தாங்கியதும் ஆகிய ஆனை மீது அமர்த்தி முழங்கப்படுமாறு செல்பவனும், தன் அடியார்கள் முன்னின்று வணங்கி துதிக்கப்படுகையில் பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆன எம்பெருமான் ஆரூரில் அமர்ந்து தவம் செய்பவனும் ஆவான்.
விளக்கஉரை
பண் : காந்தாரம்
* நரகர் மானிடப்பிறப்பு கொள்ளாமல் தேவராதல் அற்புதம் என்பதால் இங்கு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
விச்சு, விச்சது – வித்து
சாத்தி – சார்த்தி
முரசு – அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் தோலால் ஆன ஒலிக் கருவி .(வேறு பெயர்கள் – பறை, பேரி, முழவு). மூன்று வகைகள்
வீர முரசு – போர்க் காலங்களில் பயன்படுத்தப்படுவது.
தியாக முரசு – பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்டது
நியாய முரசு – நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்டது
முழந்தாள் அளவு நீண்ட கைகளை உடையவனாகவும், தாமரைப் பூப்போன்ற திருவடிகளை உடையவனாகவும், அல்லி போன்ற பூக்களை சூடியவனாகவும்*, வீணையைக் கைகளில் கொண்டவனாகவும், ஆடுவதால் ஒலிக்கின்ற கிண்கிணிகளை அணிந்த திருவடிகளை உடைய மேம்பட்டவனாய்த் தீயில் கூத்தாடும் பெருமானை அடியேன் தரிசித்த தலம் ஆரூராகும்.
விளக்கஉரை
*கோடலா வேடத்தன் – பிறரால் கொள்ள முடியாத வேடத்தினன் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
தாட வுடுக்கையன் – முழந்தாள் அளவு நீண்ட கை அரசர்களுக்கு உரிய உத்தம இலக்கணம். ‘தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்’ எனும் கம்பராமாயண பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
ஆரணியம் என்று அழைக்கப்படும் காட்டில் வாழும் அழகரே, யான் எல்லாப் பக்கங்களிலும் குயில்கள் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலியில் நிற்கும் பொழுது நீர், ‘தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா’ ஆகிய வாத்திய கருவிகளுடன், பல இசைகளைப் பாடிக் கொண்டு முன்வந்து நின்று ஆடினாலும், அதற்கேற்ப நல்ல அணிகளை அணியாது, எலும்பையும், ஆமையோட்டையும் அணிந்து கொண்டு ‘சிறிது பிச்சை இடுமின்’ என்று சொல்லி வந்து நிற்கின்றீர்.
இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)
புகைப்படம் : விக்கிப்பீடியா
பாடல்
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு நடனம் புரிபவராகவும், அடியவர்களின் துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.
விளக்கஉரை
உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும், நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும், அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
விளக்கஉரை
பண் : யாழ்முறி
மடப்பிடி – பெண் யானை
புன்னை – நெய்தல் சார்புடையதல் பற்றி
திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும், பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
திருத்தமான மாடங்கள் உடையதும், உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும், திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.
விளக்கஉரை
மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.