கருத்து – ஈசன் தாயாகவும், தந்தையாகவும், உறவுகளாகவும், அவன் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலப் பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு, உயிரைப்பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் எங்களின் ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான், அடியேனுக்குத் தாயாகவும், தந்தையாகவும், உடன்பிறந்த சகோதர சகோதரியாராகவும் அமைந்து, பூமி, பாதாளம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாகவும், அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாகவும் தேவர்களுக்கும் அன்பனாகியவன் சிவபெருமான் ஆவான்.
விளக்கஉரை
உடன்தோன்றினர் – திலகவதி அம்மையார்
தோன்றாத்துணை – திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குப் பெயர்
கருத்து – ஈசனின் பெருமைகளையும், அவன் வீற்றிருக்கும் திருப்புனவாயில் திருத்தல பெருமைகளையும் கூறும் பாடல்.
பதவுரை
ஊக்கம் மிகுந்தவனும் செருக்குடைய மனம் உடையவனும், வேல் வாள் போன்ற படைக்கலன்களை உடையவனுமான அரக்கனான இராவணனின் வலிமை அழியுமாறு செய்தவனும், அழகும், பெருமையும் ஊடைய கயிலை மலையால் வீற்றிருந்து அருளும் சிவபெருமான் வீற்றிருந்து அருளும் இடமாவதும், பழமையான அவனுடைய புகழைப் பல்வேறு வகைகளில் போற்றுகின்ற பாடல்களும், ஆடல்களும் நிறைந்து அழகு பெறுமாறு விளங்குகின்றதும், கொன்றை மலரின் நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றல்காற்று வீசுகின்றதுமானதுமான திருத்தலம் திருப்புனவாயில் ஆகும்.
விளக்கஉரை
புனம் – காடு
வேலன் – இராவணனுக்குச் சிவபிரான் தந்த வாளைத் தவிரப் பிற ஆயுதங்களும் உண்டு எனவே வேலன்
அல்லல் என் செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும் தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனுக்கு அடிமை பூண்ட தனக்கு எந்த வினைகளும் ஒரு துன்பமும் செய்யாது என அறுதியிட்டுக் கூறிய பாடல்.
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், வல்வினையாகிய துவந்தங்களும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளும், பிராப்தம் ஆகியதும் தீர்ப்பதற்கு அரியதும் ஆன நுகர்வினை ஆகிய நிகழ்கால வினைகளும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகள் ஆகிய எதிர்வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்து நிகழ்தி அருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு அந்த வினைகள் ஒரு துன்பமும் செய்யாது.
விளக்கஉரை
அல்லல் – ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்;
அருவினை – அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை
தொல்லை வல்வினை – பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை
தொந்தம் (வடமொழியில் துவந்துவம்) – துவந்துவம் – இரட்டை . நல்வினை தீவினை , அறம் மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டைகள்
மூலவர் சந்நிதி வாயிற்கதவுகளில் கொங்கு நாட்டிலுள்ள ஏழு தேவாரத் தலங்களின் மூல வடிவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ள தலம்.
வெஞ்சமன் என்ற வேடர்குல மன்னன் அரசாண்ட தலம்
இந்திரன் அகலிகை சாபநிவர்த்திக்காக வழிபட்டு அருள்பெற்ற தலம்
குடகனாற்று வெள்ளப்பெருக்கால் பழைய கோயில் சிதிலமானதால் தற்போதைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது புதிய கோயில்
சுந்தரரின் தேவாரப் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் கிழவராகவந்து, தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் ( பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கியத் தலம். ( குறிப்பு – கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் )
முருகப்பெருமான், ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தது அமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி
அருகில் கருவூர் ஆனிலை தேவாரத்தலம்.
தலம்
திருவெஞ்சமாக்கூடல்
பிற பெயர்கள்
வெஞ்சமாங்கூடலூர்
இறைவன்
கல்யாண விகிர்தீஸ்வரர், விகிர்த நாதேஸ்வரர்
இறைவி
பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷிணி, விகிர்த நாயகி)
தல விருட்சம்
வில்வமரம்
தீர்த்தம்
குடகனாறு, விகிர்த தீர்த்தம்
விழாக்கள்
மாசிமகத்தில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை , ஐப்பசி அன்னாபிஷேகம் , திருக்கார்த்திகை , மகா சிவராத்திரி
மாவட்டம்
கரூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை ௦7:௦௦ முதல் 12:0௦ வரை
மாலை ௦4:௦௦ முதல் ௦7:3௦ வரைஅருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோவில்
வெஞ்சமாங்கூடலூர் அஞ்சல்
வழி மூலப்பாடி, அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம். PIN – 639109
04320-238442, 04324-238442, 99435-27792, 9443362321, 9894791878
வழிபட்டவர்கள்
இந்திரன்
பாடியவர்கள்
சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
கரூர் – அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள சீத்தப்பட்டி சாலையில் சுமார் 8 கிமீ தூரம். மற்றைய வழிகள் – கரூர் – ஆற்றுமேடு சாலை வழி , கரூர் – திண்டுக்கல் சாலை வழி
கரூரில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
கொங்குநாட்டுத்தலங்களில் 7 வதுதலம்.
பண்ணேர் மொழியம்மை உடனாகிய கல்யாண விகிர்தீஸ்வரர்
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 4
இசையின் அடிப்படை வழிவங்களில் ஒன்றான பண் போன்ற மொழியினை உடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, அனைவருக்கும் இளைப்பாறுதலையும், ஒடுக்கத்தையும் தரும் சுடுகாட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, குளிர்ச்சியினையும் இன்பத்தைத் தரும் அகிலையும், நல்ல கவரியையும் கொண்டு வந்து கரையில் மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ளதும், மண்பொருந்திய மத்தளமும், முழவும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் இருக்கும் சந்திரன் பொருந்துமாறு உடைய திருமுடியை கொண்டு திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினை யுடையவனே, அடியேனையும் உன் அடியாருள் ஒருவனாக விரும்பி வைத்து அருள்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 42
திருமுறை எண் 7
உடல்கள் எரிக்கப்படுவதால் கருமை நிறம் படிந்த சுடுகாட்டை இடமாக கொண்டு நெருப்பை வீசி நின்று நடனமாட வல்லவனே, ரிஷபத்தின் மீது விரும்பி ஏறி வருபவனே, இயல்பாய் பிற உயிர்களுக்கு நன்மை செய்பவனே, மணம் உடைய கொன்றை மலரை மகிழ்ந்து அணிந்தவனே, ஆயிரம் புள்ளிகளை உடைய படங்கள் பொருந்தியதும், பருத்ததும், நெருப்பு போன்ற கண்களை உடைய, பிளந்த வாயில் பற்களோடு நெருப்பை உமிழ்கின்றதும் ஆன நஞ்சினையுடைய அரிய பாம்பை அணிந்தவனே, திருவெஞ்சமாக் கூடலில் எழுந்து அருளியிருக்கின்ற இயல்பையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.
பதவுரை
முதற்கடவுளாகவும், அனைவருக்கும் மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.
விளக்கஉரை
அங்கம் – உடம்பு
மண்ணுக்கு ஆக்கி – புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு, உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக எண்ணுதல் சைவ மரபு .
கருத்து – அடியவர்கள் துன்பத்தை நீக்க திருவுள்ளம் கொண்டது பற்றி வினா எழுப்பியது
பதவுரை
முந்நீர் எனும் கடலின் வளமான அலைகள் கொண்டதும், கடலின் கரையில் இருப்பதும், திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு வந்து சேர்பதும், பழமையானதும், வேகமாக வந்து அலைகளை ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! திருச்செவியினை கொடுத்து நீ கேட்பதற்குத் தயாரானால், ‘உனக்கு தொண்டு செய்வதற்காக வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீ, இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்’ என்பதே அடியேன் கேட்க நினைக்கும் கேள்வி ஆகும்.
மிகச் சிறந்ததான பொன் போன்ற திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிபவனும், கரிய நிறம் கொண்ட கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத இன்பத்தை தருபவனாகிய சிவன் ஆனவனும், நெருப்பை உள்ளங்கைகளில் ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், குடம் போன்று பெரிய தலையுடன் இருப்பதும், பெரியதும் ஆன யானைனையின் தோலை உடையவனும், ரிஷபத்தின் மேல் ஏறிவரும் சக்ரவர்த்தி போன்றவனும், எங்களுக்கு அருந்துணை ஆகி எங்களால் விரும்பப்படுபவனும், திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்து அருளி உள்ளவனும், அமுதம் போன்றவனை மறந்து, நாய் போன்ற அடியேன் ஆகிய யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்க மாட்டேன்.
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை தன் திருமேனி முழுதும் பூசியவனும், அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்றுமாறு இருப்பவனும், மான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கைகளைக் கொண்டவனாக, நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
விளக்கஉரை
ஆன் முறையால் – பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட,
அணியிழை – உமாதேவியார்
விபூதி தயாரிக்கும் முறை ஆகிய (சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி,2. அனுகற்ப விதி, 3. உப கற்ப விதி படி தயாரித்தல்.
கற்ப விதி – பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்டி, அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
அனுகற்ப விதி – காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
உப கற்ப விதி – காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு -11-Feb-2019
இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
வெம்ப – நாம் வருந்தும்படி.
வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
கூற்றம் – அஃறிணை சொல். அது பற்றி `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
பைய நையும் – மெல்ல வருந்துகின்ற
செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.
மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.
வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
நீங்கள் உயிர் நீத்தப்பின் நெருப்பு கொண்டு சுடுவதாகிய சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு அது உண்டென்பதை மெய்பிக்கப் பொதுவாக இருக்கும் வழிகளைக் குறிப்பிடுவதாகிய பிரமாணங்கள் அல்லது அளவையில் ஒன்றான ஆன்றோர் சொற்களே (ஆப்த வாக்கியம்) சான்று. திருப்பாற்கடலினை கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால், உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிய பிணம் ஆகி விடும். இவ்வாறான துன்பம் மிக்க இந்த வாழ்வினைக் கொண்டு பிற உயிர்களுக்கு பயன் தரக்கூடிய என்ன செயல்களை செய்தீர்? இது குறித்து நீங்கள் நாணவும் இல்லை.
விளக்கஉரை
நடலை – துன்பம்
சுடலை – இடுகாடு
ஊர்முனிபண்டம் – பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருள்
வலிமை மிகுந்ததும், மூன்று இலைகளை கொண்டதும் ஆன சூலத்தை உடையவனும், இறைவன் ஆனவனும், வேதத்தை ஓதி அதன் வடிவமாக ஆனவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் சூழ்ந்து நிற்கின்ற கொன்றை மாலையோடு, தூயதும், வெள்ளி போன்றதும் ஆன சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டு வலம் வருபவனும், ஒளி வடிவானவனும் ஆகிய இறைவனை, அன்னப்பறவைகள் விளையாடுவதும், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்றதும் ஆன ஒப்பற்றதான தாமரை மலர்கள் மீது ஏறி விளையாடுவதும், அகன்றதுமான நீர்த்துறையின் அருகே வளர்ந்த கரும்புகள் கொண்டதும், செழுமையான நெற்பயிர்கள் விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரில் அடியேன் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன்!
விளக்கஉரை
இரும்பு – அதன் தன்மையாகிய திடத்தைக் குறித்தது.
சிறப்புப் பெயராய் நின்றதால்,சோதி; ‘ஒளி’` எனும் பொதுமை நீக்கப் பெற்றது.
காளையை ஊர்தியாகக் கொண்டவனே ! அதிகைப்பெருமானே! நோய்களிடம் இருந்து நீங்காத இந்த மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன், செயல் படாமல் ஒழியாததான நல்வினை மற்றும் தீவினைகளை, சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு, அந்த வினைகளை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும், மனஉறுதியும் இல்லாதவனாய், அந்த தூய்மை, துணிவு ஆகியவற்றை நல்கும் உன்னுடைய தேன் துளிகளைக் கொண்டதும், மலர் போன்றதும் ஆன உனது திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன்.
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
‘திருநாமம்’ என்பதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல்லாகியதும் ஆன அஞ்செழுத்தை ஒருகாலும் ஓதாதவர்களும், தீயின் வண்ணம் உடையவரின் சிறப்புகளை ஒருகாலும் பேசாதவர்களும், திருக்கோயிலினை ஒரு காலத்திலும் வலம் வாராதவர்களும், உண்பதற்கு முன்னமாக மலரைப் பறித்து, பூசித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதவர்களும், கொடுமையான நோய்கள் கெடச் செய்வதான வெண்ணீற்றை அணியாவர்களும் அருள் அற்றவர்கள் ஆவார்கள்; அவர்கள் தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்; ஆதலால் அவர்கள் பிறப்பு பற்றி, தீராத பெரிய நோய்கள் மிகத் துன்புறுத்தப் பெற்று அதனால் செத்து, வரும் பிறப்புகளிலும் பயனின்றி, இறந்து, பிறப்பெடுப்பதே தொழிலாகி இறக்கின்றார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், எதிர்மறை முக நிகழ்வுகளை ஓதி, பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்களுக்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தும்.
அளி அற்றார் – தலைவரான இறைவன் பால் பெறும் அருளை இழந்தவர்
இறந்தவரது எலும்புகளையும், எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் எதுவெனில், சிறந்தவர்கள் என்று சொல்லப்படுவதும் மேம்பட்டதும், உயர்வானதும் ஆன மனைவி மற்றும் மக்கள்,சுற்றத்தார்கள், செல்வம் ஆகியவற்றை துறந்தவர்களாகிய ஞானியர்கள் சேரும் திருச்சோற்றுத்துறை என்னும் தலம் ஆகும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மேலான ஒளி வடிவமாய் உள்ளவனே! தேன் போன்ற சுவை உடையதும், மிகுதியாக வெள்ளம் போல் வருகின்றதும் ஆன நீரையுடைய காவிரியாற்றில் பரந்த வெள்ளம் போல் வந்து பாய்கின்ற திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற நா வன்மை யுடையவனே! அடியேன் உன்னை நினையாது ஒழிந்த நாள்களை, ‘என் உணர்வு அழிந்த நாள்கள்’ எனவும், ‘உயிர்போன நாள்’ எனவும், ‘உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்’ எனவும் கருதுதல் அன்றி வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால், உன்னை நான் மறந்தாலும் , எனது நாவானது, உனது திருப்பெயராகிய ‘நமச்சிவாய’ என்பதனை இடையறாது சொல்லும்.
விளக்கஉரை
ஒவுதல் – ஒழிதல்
புனல் – ஆறு, நீர், வயல், கொல்லை
நாவலன் – மறைகளையும், மறைகளின் பொருளையும் முழுவது அறிந்தவனும், அது பற்றி சொல்பவனாதல் பற்றியது.
வளமான சோலைகளையுடைய திருப்புங்கூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, மிருகண்ட மகரிஷிக்கும், அவருடைய மனைவி ஆகிய மருதவதிக்கும் மகனாக பிறந்த அந்தணர் குலத்தை சேர்ந்த மார்கண்டேய முனிவர் தன் முடிவு அறிந்து உன்னை அடைக் கலமாக அடைய, அவரைக் காத்தல் பொருட்டு, அவர் உயிரைக் கொல்ல வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்தவனே, உனக்கு அடியேனாகிய யான், உனது அந்த ஆற்றலை அறிந்து கொண்டு என்னையும் எம தூதர்கள் வந்து துன்புறுத்துவார்கள் எனில், என்தந்தையாகிய நீ, ‘இவன் என் மற்றொரு அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்’ என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டு அருள்.
விளக்கஉரை
மார்க்கண்டேய முனிவருக்கு அருள் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து பாடியது.