கருத்து – பாதம், உந்தி, தோள்முகம்மற்றும்தலையைகுறிக்கும்திருஐந்தெழுத்தைஓதுவார்எமனுடைதுன்பத்தில்இருந்துநீங்குவார்என்பதைக்குறிக்கும்பாடல்
பதவுரை
உள்ளத்தினில் அன்பு கொண்டு மனதால் நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.
விளக்கஉரை
போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
நெஞ்சகம் – மனம்
நைந்து – உருகி
நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.
விளக்கஉரை
திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
என்ன – எத்தகைய
வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை யாய பராபரன் அந்த மில்புக ழாரூ ரரனெறி சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்
பதவுரை
நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும் வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்
விளக்கஉரை
ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள் கூறும் ` நான் ` குற்றமாகாது எனும் பொருளில்
கருத்து – ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே
தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.
விளக்கஉரை
எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும், வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.
விளக்கஉரை
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
எம் இறை – எம் இறைவன்
நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது
கருத்து – சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.
விளக்கஉரை
பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன் துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.
பதவுரை
கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்
கருத்து – திருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.
பதவுரை
‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே உன்னுடைய கடமை’ திகழும் தோள்களை உடையவரும், மார்பினினில் துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்
விளக்கஉரை
திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
விரித்த பல்கதிர் கொள்சூலம், வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒன்டிரு மணிவாய் விள்ள சிறிதருள் செய்தோர் சேரிச் செந்நிறச் செல்வனாரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் கால பைரவர் வடிவம் தாங்கி வந்ததை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
திருச்சேறை எனும் திருத்தலத்தில் செம்மை நிறம் கொண்டு அதை இருப்பிடமாக உடையவனாக சிவபெருமான், விரிந்த சூரியனை போன்று பல கதிர்களை கொண்ட ஒளியுடைய சூலம், இடி முழக்கம் போல சப்தம் எழுப்புவதான டமருகம் (உடுக்கை), தலையில் கங்கை ஆகியவை கொண்டு அழகிய கால பைரவர் வடிவம் தரித்து வேழ வடிவில் வந்த அசுரனின் தோலை உரித்தார்; அதை கண்டு அஞ்சிய உமையவளை நோக்கி தனது மணிவாய் மலர்ந்து தோன்றுமாறு அட்டகாசமாய் சிரித்தார்.
விளக்கஉரை
தேவாரத்தில் கால பைரவர் பெயர் வரும் ஓரே பாடல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்றோர் அறிந்து உய்க.
விள்ளுதல் – மலர்தல்; உடைதல்; வெடித்தல்; பிளத்தல்; பகைத்தல்; மாறுபடுதல்; தெளிவாதல்; நீங்குதல்; சொல்லுதல்; வெளிப்படுத்துதல்; வாய் முதலியன திறத்தல்; புதிர்முதலியனவிடுத்தல்
வெடி – துப்பாக்கி அல்லது குண்டு வெடி;வேட்டு, ஓசை, இடி, கேடு, அச்சம், நிமிர்ந்தெழுகை, தாவுகை, நறும்புகை, பட்டாசு, கள்
கருத்து – ஊழ்வினை அறுத்தலேயன்றி, சிவஞானத்தை மிகுவிக்கும் நல்வினைகள் விளையா என்பதையும் அதனை அளிப்பர் திருப்பேரெயில் தலத்து இறைவர் என்பதையும் விளக்கும் பாடல்.
பதவுரை
திருப்பேரெயில் தலத்து இறைவர் மேருமலையை வில்லாக்கி முப்புரங்களை அழியச் செய்வார்; பல தீர்த்தங்களை உண்டாக்கி அளித்தும், அதில் தன் அன்பர்களை நீராடுமாறும் செய்பவர்; பல பத்தர்களின் ஊழ்வினைகளை அறுப்பது மட்டுமின்றி அவர்கள் நல்வினை பெறும்படியும் செய்பவர் ஆவார்.
விளக்கஉரை
சோழநாடு காவிரித் தென்கரையில் அமைந்திருக்கும் திருப்பேரெயில் எனும் திருத்தலம் பற்றி எழுதப்பட்டது. (தற்போதைய பெயர் – ஓகைப்பேரையூர், வங்காரப் பேரையூர்)
செறுத்தல் – அடக்குதல், தடுத்தல், நெருக்குதல், உள்ளடங்கச் செய்தல், நீர் முதலியன அடைத்தல், தூர்த்தல், சினத்தல், வெறுத்தல், வெல்லுதல், கொல்லுதல்
ஈசனாரின் நிவேதனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியத்தை வெள்ளம் அடித்துப்போகாமல் வேலிகட்டி காத்த தலம்
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்
மண்டபங்கள் கொண்ட கோயில் – ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம்
வேதங்கள் மூங்கில் மரங்களாக இருக்க, ஈசனார் அவற்றின் அடியில் லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கும் தலம்
ஈசன், அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி திருக்காட்சி
காந்திமதியம்மைக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு மறுநாள் காலை பூஜை வரை அதே கோலத்தில் திருக்காட்சி
வழிபாட்டு முறைகள் – காந்திமதி அம்மைக்கு காரண ஆகமம், நெல்லையப்பருக்கு காமீகஆகமம்
சிவன் சந்நிதிக்கு செல்லும் வழியில் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அற்புதமான இசை தரவல்ல இசைத்தூண்கள்
மூலவர்கள் – மகாவிஷ்ணு வழிபட்ட சிவலிங்கத்திருமேனி, நெல்லையப்பர் சந்நிதி அருகில் சற்று தாழ்வான சந்நிதியில் அமைந்துள்ள ஆதி மூல சிவலிங்கத்திருமேனி
சிவனின் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகி தனித்துவமாக மேற்கு நோக்கி
பஞ்ச தட்சிணாமூர்த்திகள்
சிவனாரின் சந்நிதி வலப்புறம் உள்ள கோவிந்தராஜப் பெருமாள் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை. பெருமாளின் வலது கை சிவலிங்க வழிபாடு செய்யும் அமைப்பு. மார்பில் சிவலிங்கம் அடையாளம் உள்ள உற்சவ பெருமாளின் கையில் தாரைப் பாத்திரத்துடன் காட்சி
கார்த்திகை மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
அனவரத லிங்கம் – இஸ்லாமியர் அன்வர்கான் என்பவரால் வழிபடப்பட்டது.
உச்சிகால பூஜையின் போது காந்திமதியம்மையே நேரில் வந்து சிவனாருக்கு அமுது பரிமாறி உபசரிப்பதும், பின் அந்த அமுதே அம்மைக்கும் நிவேதனமாக படைக்கப்படுவதும் இத்தலத்தில் தினமும் நடக்கும் சிறப்பான உற்சவம்..
அகத்தியர் சிவனாரின் திருமணக்கோல திருக்காட்சி தரிசித்த தலங்களில் இத்தலமும் ஒன்று
அகத்தியர் பிரதிஷ்டை செய்தது சால்வடீஸ்வரர் சிவனாரின் சந்நிதி
இத்தல விநாயகர் முக்குறுணி விநாயகரின் வலது கையில் மோதகம்; இடது கையில் தந்தம் என மாற்றி வைத்து அருள்பாலிப்பு
வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தாமிரத்தகடுகளால் வேயப்பட்டுள்ள தாமிரச்சபையின் மேற்கூரை
தலமரமான மூங்கில் தாமிரச்சபைக்கு அருகில்
அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த, கீழே மரத்தாலும், மேலே தாமிரத்தாலும் செய்யப்பட்டு ஏழு அடுக்குகளுடன் திகழும் தாமிர சபை.
நடராஜர் தாமிர சபாபதி. சபையின் பின்னால் உள்ள நடராஜர் திருவடிவம் சந்தன சபாபதி. சபையின் உள்ளே ருத்ரவிஷ்ணு , பேதங்கள் , ரிஷிகளின் வடிவங்கள்.
இரு துர்க்கையம்மன் சந்நிதிகள். மான் , சிங்கம் மற்றும் தோழியுடன் கூடிய மகிஷாசுரமர்த்தினி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி மஞ்சன வடிவாம்பிகை என்ற பெயருடன் அம்பாள் சந்நிதியில் வடக்கு நோக்கியும் திருக்காட்சி
இருபத்தி ஐந்து மூர்த்தத்தில் ஒரு வடிவமான ஜ்வரஹரேஸ்வரருக்கு தனி சந்நிதி
பிள்ளைத்துண்ட விநாயகர் எனும் பொல்லாப்பிள்ளையாருக்கு தனி சந்நிதி
நாயன்மார்கள் சந்நிதி அருகில் தாமிரபரணி நதியின் பெண் வடிவம். சித்ரா பௌர்ணமி , ஆவணி மூலம் , தைப்பூசம் ஆகிய நாட்களில் திருமஞ்சனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் கொண்டு செல்லப்படுகிறது
சிவகாமியுடம் கூடிய அக்னி சபாபதி என்று போற்றப்படும் நடராஜர் சந்நிதி (மற்றொன்று)
நவக்கிரக சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சி தரும் புதன்.
வியாழன்தோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படும் காந்திமதியம்மை தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் திருக்காட்சி.
அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத்தூண்களான அமைப்பு.
அம்பாள் சந்நிதி முன்பு கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளான வடிவமைப்பு
வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின்(தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளித்தவர்) மகனும் சீடரும் ஆனவரும், பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவரும் ஆன சுவேதகேது தனது எமபயம் நீங்கப்பெற்ற தலம்
ஆயர்குல ராமகோனாரும், முழுதும் கண்ட ராமபாண்டியனும் சிவனாரின் திருக்காட்சி பெற்ற தலம்
உலகமாந்தர் கடைபிடிக்கவேண்டிய 32 அறங்களை உலகுக்கு உணர்த்திய தலம்
சக்தி பீடங்களில் இத்தலம் காந்திசக்தி பீடம்
பிரதோஷத்தின் போது அபிஷேக ஆராதனைகள் ஈசன் மற்றும் அம்பாள் இருவரின் சந்நிதிகளின் முன்புள்ள நந்திகளுக்கும் செய்யப்படுவது தனி சிறப்பு
நல்லனவற்றை விரும்பும் நன்நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக; அந்த திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும்; மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும்;. மறுமையில் நற்கதி தரும்; மற்றும் உயிர்களின் துயர் கொடுமாறு அதன் பயன்கள் யாவும் தரும்; போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும்; அப்படிப்பட்ட அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்கக்கூடியதும், நெருங்கியுள்ளதும், பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்றதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்து அருள்கிற அருட்செல்வர் ஆவார்.
பாடியவர் திருஞானசம்பந்தர் திருமுறை 3 பதிக எண் 92 திருமுறை எண் 8
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்றதும், பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடையதும் ஆன திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமையையுடைய கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
கருத்து – ஐயாறு திருத்தலத்தை நினைத்து வாழ்ந்தால் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
நிலையாமை உடைய பொருள்களை பொய்த் தன்மை நீங்காதவாறு சிறப்பித்துப் பேசியும், பொழுது புலர எழுந்தது துன்பம் கொள்ளாமல் தொழில் செய்கிறோம் என்று எண்ணி பொருளைத் தேடி இன்பம் உடைய மனத்தவர்களாக கருதி வாழ்பவர்களே! விஷத்தை அமுதம் போல் கொண்டவர் ஆன நீலகண்டரும், நீண்ட செஞ்சடை உடையவரும், நெற்றிக் கண் உடையவரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் தலமான ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் நீங்கி அமரர் எனும் தேவர்களின் உலகை ஆளுதல் கைகூடும்.
விளக்கஉரை
இத்திருத்தாண்டகம், திருவையாற்றை எடுத்து ஓதி அருளியது.
கையாறு – செயலறுகை, துன்பம்
கரணம் – செய்கை, இயக்கம், தொழில்
நெய்யாடுதல் – எண்ணெய் பூசி மங்கலநீராடல், நெய்பூசுதல்
அல்லல் – பிறவித்துன்பம்
நெய்யாறா ஆடிய – ‘நெய்யை ஆறுபோல் ஆடியவரும்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
கருத்து – மூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.
பதவுரை
மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன உலக விஷயங்களில் மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.
*கருத்து – கைலாயத்தில் உறையும் ஈசன் திருவையாறு தலத்திலும் உறைவன் என்பதை குறித்து பாடிய பாடல்.*
பதவுரை
எல்லைகள் அற்றதானதும், மலைச்சிகரம் ஆனதும் ஆன கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதையுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு பாயும் புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு எனும் திருத்தலம் ஆகும்.
விளக்கஉரை
விரை – மணம்
வரை – கோடு, எல்லை, வரம்பு, வரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை, எழுத்து, மலை, மலைச்சிகரம்.
கருத்து – அடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.
பதவுரை
இறைவரை உமக்கு ஏற்றவாறு போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.
விளக்கஉரை
நேரிழை – பெண்
இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.
பதவுரை
தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி உனக்கு மெய்யடிமையைச் செய்ய, அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.
விளக்கஉரை
புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் இறைபணியாகிய அடிமைத் திறம்