
பாடல்
மூலம்
நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே
பதப்பிரிப்பு
நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்
கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்
பதவுரை
நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது திருஆலவாய் என்னும் திருத்தலம்.
விளக்க உரை
- கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்) கோவணம் எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.